வலியல்லதுடிக்கிறேன்

மூடி விட்டே
போயிருக்க வேண்டும்;
நமை பினைக்கும்
எல்லா வாய்ப்புகளையும்!

விவாதத்திற்கே இட்டுச்செல்லும்
வார்த்தைகளும்
விரயமாகும் புன்னகையும்
ஞாபகக் கிடங்கில் தேங்குகிறது..
கழிவுகளென!

பந்தியில் சிதறிய
சோற்றுப் பருக்கைகளென
என்னில் ஒட்டிப்
பிசுபிசுக்கும் உன் நினைவுகளை
எப்படிக் கழுவுவதென
மயங்கி நிற்கையில்,
இலையென எறியப்படுகிறது...
இதயம்!

மேலிழுத்து-
கீலொடித்து-
தேவைக்கென வளைத்துவிட்டு,
நீயிட்ட கோலத்தினுள்
தொலைந்தே போனேன்..
புள்ளியாய்!

இன்னும்
எடுக்கப்படாத அந்தப் புகைப்படத்தினுள்
இருப்போம் நாம்....
இருப்பதாய் நம்பப்பட்ட
நேசத்தோடு!

நேசிக்கமுடிகிற எதிரியாய்,
இரசிக்கமுடிகிற நட்சத்திரமாய்,
தூரமாய் இருப்பேன்...
பாரமாய் இருப்பதுகாட்டிலும்!

ஒரு முதலாளிக்கான நன்றியுணர்வோடு,
அழுத்தாமல் எழுதப்பட்ட,
அன்பு நிறைந்த
இந்தக் கடைசிச் செய்தியோடு
மொட்டை மாடியிலிருந்து குதித்துவிடுகிறது.....
என் காதல்!

எழுதியவர் : (4-Sep-14, 11:41 pm)
பார்வை : 117

மேலே