கடவுளை எங்கே தேடுவேன்

அறிதல் என்பது அறிவு. அத்தோடு நின்று போயிருக்க வேண்டிய வாழ்க்கையில் எத்தனை விவரித்துப் பார்த்து அபத்தங்களுக்குள் போய் விழுந்திருக்கிறேன் என்று யோசிக்கிற போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.. சாக்கடைக்குள் போய் விழுந்து புரண்டு கொண்டே இது சரி அது தவறு என்று பேசிக் கொண்டிருந்த கடந்த காலப் பொழுதுகளை இப்போது நினைவுகூரும் போது கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது. கடவுள் தேடல் என்ற ஒன்று எனக்குள் ஆரம்பித்த போது நிச்சயமாய் என்னைப் போலவும் உங்களைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்த கடவுளர்களில் யாரையேனும் ஒருவரை எப்படியாவது கண்டுவிடலாம் என்றுதான் நான் நம்பினேன்.

கோயில்களுக்குச் செல்வதும் உற்று, உற்று கருவறைக்குள் இருக்கும் சிலைகளைப் பார்ப்பதும் கண்களை மூடிக் கொண்டு பிள்ளையாரப்பா காப்பாத்து, முருகா காப்பாத்து, சிவனே காப்பாத்து, காளியாத்தா காப்பாத்து என்று சும்மா இருக்கும் போதே காப்பாத்து காப்பாத்து என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். பத்து வயசு பையனுக்கு ஏன் காப்பாத்துப்பான்னு கடவுள வேண்டிக்கன்னு சொல்லிக் கொடுக்குறோம்ன்ற யோசனை இல்லாம, என்னை சுத்தி இருந்த சமூகம் கடவுள் முன்னால நின்னு தன்னை காப்பாத்தச் சொல்லி கதறிக்கிட்டு இருந்ததையே பாத்து பாத்து வளர்ந்திருக்கிறேன் நான். எதிர்த்த வீட்டு எபிநேசர் சார் கூட சர்ச்சுக்கு போனப்பவும் இதே கதைதான் அங்க சிலுவையில அறையப்பட்ட ஜீசஸ் முன்னால இதே காப்பாற்றும் ஆண்டவரே.. அப்டீன்ற கோஷம்...

யார் கொல்ல வந்தா இவுங்கள எல்லாம்...? சும்மா இருக்கும் போதே ஏன் இப்டி காப்பாத்த சொல்லி வேண்டிகிறாங்கன்றதுதான் அப்போ எனக்குள்ள இருந்த ஒரே மெய்ஞ்ஞானக் கேள்வி...!

இஸ்லாம் பத்தி அதிகம் தெரிஞ்சுக்காம வளர்ந்த நான் ஒரு நாள் எதையோ பாத்துப் பயந்துட்டேன்னு சொல்லிட்டு பள்ளிவாசல்ல போய் தண்ணி தெளிச்சு ஓதினா சரியாகும்னு யாரோ சொன்னதால எங்க ஊர்ல இருந்த பள்ளிவாசலுக்குப் பக்கத்து தெரு உசேன் மாமா கூட போக வேண்டியதாப் போச்சு. பள்ளி வாசல்ல கை, கால், முகமெல்லாம் சுத்தம் பண்ணிக்கிட்டு தொழுகைக்குப் போறதுக்காக உள்ளயே ஒரு பெரிய நீர்தொட்டி மாதிரி ஆழம் இல்லாம கட்டி வச்சிருக்கத நான் அதிசயமா பார்த்தேன். ஒரு குட்டிக் குளம் மாதிரி இருந்த அந்த நீர்த்தொட்டி ஓரமா என்னை உட்கார வச்சி ஏதேதோ துவாக்கள அரபியில சொல்லி ஓதி என் முகத்துல அந்த தண்ணிய தெளிச்சி மூணு தடவை ஊதுன அந்த பாவாவ அஜ்ரத்னு அங்க இருந்த எல்லோரும் கூப்ட்டாங்க.

ஏசுவோட கோயில்ல ஏசு இருந்தார், நாம போற கோயில்ல எல்லாம் ஏதோ ஒரு சாமி இருந்துச்சு இந்தக் கோயில்ல அல்லா சாமி எப்டி இருக்கும்னு பாத்துடணும்னு எனக்கு ஆசை ஆசையா இருந்துச்சு. அந்த அஜ்ரத் என் கன்னத்தை தடவி பயப்படக்கூடாது தம்பி... அல்லா இருக்கான் எல்லாத்தையும் பாத்துக்குவான்னு சொல்லி என் கையை இறுக்கமா பிடிச்ச பிடிதான் கடவுள்ன்றதை எல்லாம் நான் ரொம்ப லேட்டாதான் புரிஞ்சுக்கிட்டேன். ஓதி முடிச்சதும் நான் உசேன் மாமா கைய பிடிச்சுக்கிட்டு அஜ்ரத் தூக்குச் சட்டியில ஓதிக் கொடுத்த தண்ணிய எடுத்துக்கிட்டு பள்ளி வாசல விட்டு வெளில வர்றதுக்கு முன்னாடி.....

அல்லா சாமிய எப்டியாச்சும் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருந்துச்சு. உசேன் மாமா.... உசேன் மாமா... எனக்கு அல்லா சாமிய பாக்கணும்னு அவர் கையப் பிடிச்சு இழுத்துக் கேட்டப்ப... சிரிச்சுக்கிட்டே என்னை கூட்டிக்கிட்டுப் போய் எதுவுமே இல்லாம வெறுமையா இருந்த ஒரு சுவத்தோட வளைவ காட்டி இந்த பக்கம்தான் எல்லோரும் அல்லா சாமிய கும்பிட்டு வேண்டிக்குவாங்கன்னு சொன்னாரு. ஏன் மாமா அல்லா சாமிக்கு உருவம் இல்லையான்னு எந்த வித அறிவும் இல்லாத சின்ன என் பிஞ்சு மனசுல ஞானக் கேள்விய விதைச்ச இஸ்லாத்தையும் அந்த வழிமுறைய உண்டாக்கி மனுசங்களுக்கு கொடுத்த ரசூலல்லாவையும்(ஸல்) இந்தப் பிறவி முழுசும் என்னால மறக்க முடியாது. எப்டிதான் இருந்தாலும் கடவுளுக்கு உருவம் இல்லேன்னு சொன்ன கருத்தை என் மனசு ஏத்துக்கல அப்போ...., அல்லா சாமிக்கு ஒரு உருவம் இருந்தா நல்லாத்தானே இருக்கும்னு சொல்லி ஏதேதோ உருவத்தை அல்லா சாமிக்கு கொடுத்து நான் மனசுக்குள்ள ரசிச்சுக் கூட பாத்து இருக்கேன். 10 வயசுல எனக்கு கடவுள உருவமா நினைச்சுக்கிறது ரொம்ப வசதியா இருந்துச்சு.

அன்னிக்கு பள்ளி வாசல்ல முகத்துல தெளிச்ச தண்ணியோட பயம் ஓடி ஒளிஞ்சு போய் நான் தூக்கத்துல அலறி எந்திரிக்கிறத விட்டுட்டேன். அல்லா சாமிதான் அதுக்கு காரணம்னு ரொம்ப நாள் என்னை நினைக்க வச்ச அந்த பாவா மாதிரி எத்தனையோ பேர் அறியாம, புரியாம இருக்கவங்களுக்கு நம்பிக்கையா இருக்கறது எவ்ளோ நல்ல விசயம்ணு தோணிச்சு எனக்கு.
+2 படிக்கும் போதுதான் எனக்குள்ள விசய ஞானம் கொஞ்சம் கொஞ்சமா உள்ள இறங்க ஆரம்பிச்சு இருந்துச்சு. தேடித் தேடி புத்தகங்கள வாசிச்ச காலம் அது. கடவுள் தரிசனம் கிடைக்காமலேயே போயிடுமோன்னு பயந்துகிட்டு நான் செஞ்ச கள்ள தியானங்கள் கணக்கிலடங்காதவை. எதைப்பத்தியுமே யோசிக்காம ஏதாவது ஒரு பொருளை நினைவுல வச்சுக்கிட்டு உக்காருங்க, கூடுமான வரைக்கும் ஏதாச்சும் உங்களுக்குப் பிடிச்ச கடவுள மனசுல நினைச்சுக்கோங்கன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்த குருதான் நான் கண்ண மூடுன உடனேயே வந்தாரே ஒழிய நான் மனசுக்குள்ள கொண்டுவர முயற்சி பண்ணின முருகன் வரவே இல்லை. ஏதோ ஒரு அதிய ஒளி வட்டம் தலைக்கு மேல வந்த மாதிரி நானே முடிவு பண்ணிக்கிட்டு வராத பத்மாசனத்தை வலுக்கட்டாயமா போட்டு உக்காந்துகிட்டு ஓம்....நமசிவாயன்னு உள்ளுக்குள்ள ஒங்கி ஓங்கி கத்தி மனச ஒருநிலை படுத்த எடுத்த முயற்சி எல்லாம் படுதோல்வியாதான் போச்சு.

வள்ளலாருக்கு மட்டும் தரிசனம் கொடுத்தீங்கள்ள நீங்க...? அருணகிரி நாதருக்கும் இன்னும் எத்தனையோ யோகிகளுக்கும், சித்தர்களுக்கும் காட்சி கொடுத்த நீங்க ஏன் எனக்கு கொடுக்க மாட்டேன்றீங்கன்னு ஒரு நாள் விடியக்காலையில எந்திரிச்சு சாமிப்படங்கள் முன்னாடி நின்னுக்கிட்டு அழுகை மாட்டாம நான் சண்டை கூட போட்டு இருக்கேன். இருந்தா நீ வா....ன்னு சொல்லி சங்கல்பம் எடுத்து நான் கண் மூடி உக்காந்தப்ப எல்லாம்.... இருக்கேன் நான் வர்றேன்னு சொல்லாம சொல்லி என் கையையும் காலையும் கடிச்ச கொசுக்கூட்டம்தான் அதிகம். காலேஜ்ல படிக்கிறப்ப இந்த பைத்தியக்காரத்தனம் வேற விதமா பார்ம் ஆகிப் போகி விடியக்காலையில பிள்ளையார்பட்டி கோயிலுக்குப் பின்னாடி இருக்க துக்குணுன்டு பாறை மேல ஈர வேஷ்டியோட வெத்து உடம்போட உக்காந்து சம்போ மகாதேவான்னு மனசுல நினைச்சுட்டே இருந்தப்ப....

கடவுள் வந்து பக்தா... கண்களைத் திற...

உனது தியானத்தால் மெச்சினோம்... என்ன வரம் வேண்டும் கேள்...? அப்டீன்னு என்கிட்ட கேட்டமாதிரியே எனக்குத் தோண....அதிர்ச்சியில வாய் பிளந்து இவர் என்ன சாமி முருகனா? சிவனா? இல்லை பெருமாளான்ற டவுட்ல....மயிலு இல்லை அதனால் முருகன் இல்லேன்னு சொல்லிடலாம் கழுத்துல பாம்பும் இல்ல அதனால சிவனும் கிடையாது, சரி நெத்தியில நாமம் எதுவும் போட்டு இருப்பாரான்னு பாத்த அதுவும் இல்ல, அப்போ பெருமாளாவும் இருக்க வாய்ப்பு இல்ல...யானைத் தலை இல்லாததால இது பிள்ளையாரும் கிடையாது....

வெள்ளை வேட்டி சட்டை, நெத்தியில பட்டையோட வந்திருக்கவரு யாரா இருப்பாருன்னு யோசிச்சுட்டே இருந்தப்ப..அட....டா இவரு இவர் நம்ம பிஸிக்ஸ் புரஃபசர் மாதிரியில்லன்னா இருக்காருனு ஒரு டவுட் வர..., ஞாயித்துக் கிழமை காலையிலயே கோயிலுக்கு வந்த பிஸிக்ஸ் புரஃபசர் அரசரத்தினம் சார்.....டேய்.. என்னடா இது காலங்காத்தால....எக்ஸாம்க்கு எல்லாம் படிச்சுட்டியா.. இல்லையா... ? ஸ்டடி ஹாலிடேய்ஸ்ல கற்பக விநாயகரை வேண்டிட்டா பரீட்சை நல்ல எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டியா என்னன்னு கேட்டு சத்தமா சிரிக்க வேற செஞ்சார். சாட்சாத் அந்த ஆண்டவன் வருவான்னு தியானம் பண்ண உக்காந்தா இந்த அரசரத்தினம் சார் ஏன் வரணும்...னு நினைச்சுக்கிட்டே.... இல்ல சார் ... சாமி கும்பிடத்தான் வந்தேன்னு சொல்லிட்டு நான் வழிஞ்ச வழிசலைப் பாத்துட்டு அவர் கிளம்பிப் போய்ட்டார்.

இப்டி என் கடவுள் தேடல் ஏகக் களேபரமா ஆரம்பிச்சு அங்க ஓடி....சிவபுராணம் படிச்சு, சிவராத்திரிக்கு கண் முழிச்சு, சிவஞான போதத்திலிருந்து சைவ சித்தாந்தம் வரைக்கும் படிச்சு, ஓஷோ சாரோட ஹெல்ப்போட இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பெளத்த தத்துவ கடல்கள கடந்து கரையேறி வர பாலகுமாரன் சார்ன்ற போட் ரொம்பவே எனக்கு உதவி பண்ணுச்சு. தேடல வழி நெடுக சம்சாரியாவே நீ தேடுடா அம்பி.....நீ சம்சாரி, இதை விட்டுட்டு ஓடினே...கேலியா ஆகிடும் வாழ்க்கைன்னு திருவொற்றியூர் கோயில்ல எப்பவும் சந்திக்கிற நடேசன் அய்யர் சொல்லிட்டு கைய பிடிச்சுக்கிட்டே ரொம்ப நேரம் மண்டபத்துல என் கூட இருப்பார். நடேசன் அய்யர் செத்துப் போனப்ப மயிலாப்பூர்ல இருக்க அவரு வீட்டுக்குப்போய் ரொம்ப நேரம் உக்காந்திருந்துட்டு தகனம் எல்லாம் செஞ்சு நடேசன் ஐயர சாம்பலா பாத்தப்ப....ஒரு நிமிசம் ஸ்தம்பிச்சுப் போச்சு எனக்கு.

என்ன பேசி என்ன...? ஒரு பிடி சாம்பல்தாண்டா அம்பி நாம எல்லோரும்னு அடிக்கடிச் சொன்னவர் சாம்பலா போய்ட்டார். அவர் அப்டி சொன்னதைக் கேட்ட இந்த தறுதலையும் ஒரு நாள் சாம்பலாத்தான் போகப் போறான் இதை படிக்கிற பெரியவாக்களான உங்களைப் போலவே....

இப்போ என்னோட தேடல் நின்னு போய்டுச்சா இல்லை தொடர்ந்துகிட்டே இருக்கான்னு எனக்குத் தெரியலை. அப்டி யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு வாழ்க்கையை பரமபதம் ஆடிட்டு இருக்கான் பரமன், உருவமில்லாதவன், அங்கிங்கெங்கும் வியாபித்துக் கிடப்பவன், ஆணுமில்லாதவன், பெண்ணுமில்லாதவன், அலியுமில்லாதவன், யாருக்கும் பிறக்காதவன், யாரையும் பெற்றுக் கொள்ளாதவன், ஆதியில் வார்த்தைகளோடு இருந்தவன், அந்த வார்த்தையாகவே இருந்தவன், தன்னுள் இருந்து சகலத்தையும் ஜனிப்பித்தவன்....

வேதங்களை எல்லாம் விளையாடக் கொடுத்து விட்டு வேடிக்கை மனிதர்களாய் நின்று வேடிக்கைப் பார்ப்பவன்..., எழுதுபவன், வாசிப்பவன், வாசிக்காதவன்....

தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் இன்னமும்..... இந்த தேடல் நின்று போகவே போகாது. இது அனாதியானது.... யாராலும் தொடங்கப்படவும் இல்லை... எப்போதும் இது முடியப் போவதும் இல்லை...

சம்போ மகாதேவா... யா அல்லாஹ் என் தேவனே என்னைக் கடைத்தேற்றும்....!


-தேவா சுப்பையா ...

எழுதியவர் : Dheva . S (9-Sep-14, 1:59 pm)
பார்வை : 1977

சிறந்த கட்டுரைகள்

மேலே