எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் ----- விரல் மாறும் தொடர்கதை 3 -- இராஜ்குமார்

எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் ----- விரல் மாறும் தொடர்கதை பாகம் - 3
===================================================================================

இமைமூடா நீண்ட நேரக் காத்திருப்புக்கு பின் ...முதல் பேருந்தின் படி மிதித்த எனக்கு இருக்கை ஒன்று இடம் கொடுத்தது ...இங்கும் பாலின பிரிவாம் ..,எந்த சன்னலிடம் நான் சண்டையிட .. பயணச்சீட்டு கொடுத்தவனும் அசிங்கமாய் பார்க்க ....அப்படியே கன்னத்தில் அறைந்து கழுத்தை நெறிக்கணும் போல தோன்றியது ..இருந்தாலும் சரிவிடு விழிப்புணர்வுயில்லா இவனிடம் நமக்கென்ன வேண்டியிருக்கு..சக்கரத்தில் சிக்கி செத்துப்போன சாலையின் மண்துகள்கள் மேகமாய் மாற .. மெதுவாய் என் பயணம் .

இதோ துருப்பிடித்த சன்னல்கம்பி தாண்டி பறக்கும் காற்றின் காதில் வெறுப்படைந்த என்வாழ்வை வாசிக்கிறேன்..யாரேனும் ரசித்து பிடித்து பின் பேனாவில் நுழைத்து வெற்றுத்தாளில் தெளித்து விடுங்கள்..நீங்கள் சரித்திரம் படைக்கும் எனக்கு முகவரியாய் இருப்பீர் .முதல் வரியாய் இனிப்பீர் .

ஹ்ம்ம் ...இந்நேரம் என் நண்பனின் விழிகள் என்னுருவம் தேட …, அது எந்த தெருவிலும் இல்லாமல் போக அவனுவகை உடைந்து என்னுள்ளம் அறிய அலைந்து திரியும் ...வீட்டில் தேடுவான் ..வீதியில் தேடுவான் நில்லாமல் தேடுவான்...நிறுத்தமெல்லாம் தேடுவான் ...ஆமாம் என்னை தேடுபவன் ,என்னையும் தேட வைத்தவன் ..என்னுள் தேட வைத்தவன் .

என் சரிந்த தேகத்தை சாயாமல் உயர்த்தி சைகை இதழாய் சிரித்தவன் ....சுருங்கிய பாதம் பதிக்கும் பாதச்சுவடு என்றும் சுருங்காது என உணர வைத்தவன் ..... சிறு வயதில் இருவரும் இணைந்தது பள்ளியில் தான் ,..நாங்கள் ஏறி செல்ல ஏணி எதற்கு ??.. எல்லா எறும்பும் சாட்சி இதற்கு ...என்போம் ..

பாலினம் என் மீது படையெடுக்கும் முன் பறவை போல் திரிந்தோம்...படிக்கட்டில் அமர்ந்தால் நிழலையும் படிப்போம் நிஜத்தையும் படிப்போம் .படிப்பில் மிதப்போம்...கனவிலும் படிப்போம் ,,விதை முளைக்கும் முன் அதன் வசந்த காலத்தை வரைந்து பார்ப்போம் ...இப்படி இருந்த நாங்கள் ,எங்கள் கனவை கண்ணாடி குடுவையில் வைத்து விண்ணில் விதைப்போடும் படி எல்லையின்றி வளர்த்தோம் .

பத்தாவது முடித்தேன் ..அந்த வயது தான் என்னை புது உலகத்தில் பூவாக சொன்னது ... மஞ்சள் தூளில் குளிக்க ..மலரின் மணத்தில் மயங்க..திகட்டும் குரலில் பேச வைத்தது ..பாலின மாற்றம் என் தேகத்தில் எழுதி எழுதி வசதியில்லாத வாய்ப்புகளை தேட வைத்தது . என்ன சொல்ல . .எப்படி சொல்ல .எதை சொல்ல .யாரிடம் சொல்ல .சரிவிடு என அப்படியே இருந்தேன் அவர்களாய் கேட்கும் வரை .

வேறு வழியில்லை நான் சொல்லணும்..சொல்லித்தான் ஆகணும் அதுற்குள் அறிந்து கொண்டவன் என் நண்பன் .வீட்டில் சொல்லும் முன்னே வார்த்தை, செய்கை ,வெக்கம் எனை காட்டி கொடுத்தது .அதே சமயம் தான் பத்தாவது தேர்வு முடிவும் வந்தது .நான் பள்ளியில் வாங்கிய அதிக மதிப்பெண்ணுக்கும் மதிப்பின்றியே போனது .வாய்ப்பு என்ற பேரில் படிக்கலாம் என்றார்கள் ..

அப்படித்தான் படித்தேன் ...இருவருடம் ..11 , 12 வகுப்பு கற்றுக்கொண்டேன் பல . வெறுத்து விட்டேன் சில .எனை கேலி செய்த நண்பர்கள்...முறைத்து , வெறுத்து பார்த்த பெண்கள் .ஒதுக்கியே வைத்த டீச்சர்கள்....ஓரமாய் போட்ட ஒரு பெஞ்சில் என்னோடு அமர்ந்த ஒரே ஜீவன் என் நண்பன் ..இந்த ஜீவாவின் ஜீவன் அவன்.... அவனை தவிர வேறில்லை எனும் நிலைக்கு தள்ளி.. உணர்வையும் கிள்ளி விட்டார்கள்..

.உண்மைதான் ....என் வீட்டில் அத்துணை பேர் இருந்தும் அக்கறையில்லை .அன்பில்லை ....ஏன் என்னிடம் பேசுவதே இல்லை..குறை ஒன்று வீட்டில் குரங்காய் குடிக்கொண்டது போலவே பார்த்தனர்... ..
"உனக்கு வேற வேலையில்ல எத்தனை வாட்டி சொல்றது என்கிட்டே பேசாதனு" இப்படி என் தங்கச்சி சொன்னது உள்பட ...விரலோட தைத்த வேதனை வார்த்தை பல சொல்லலாம் ...அம்மா சொன்ன "சும்மா கெட சனியனே " ..அப்பா சொன்ன "போய் தொலைடா பரதேசி " .. அடித்து துரத்தும் அண்ணன் சொன்ன "டேய் ..போடா ..பொ********..தெரு நாயே ************நீ *********செத்து தொலைடா ****" இது தான் நான் கண்ட பாசம் .ஒரு அறையும் ஒரு தெருவும் ஒரே நண்பனும் என் தேசம் .

12 -வது முடிச்சி மூணு வருஷம் போச்சி ....பார்வையில் துரத்தும் பெற்றோர் .... துரத்தும் பார்வையில் சமூகம் ..எங்கே போக ..எப்படி போக ...மடிந்துப்போக கிடந்த என் வாழ்விற்கு மறுவழி காட்டியது இலவச மடிகணினி.. முதலீடின்றி அரசுப் பேரை மறைத்து முதல்வர் பேரில் விளம்பர செய்ய இதுவும் வழியாம் .

தட்ட தட்ட கண்முன் காட்டியது உலகத்தை ..திரையிலே திட்டுது சமூகத்தை ..ஆசையில் ஒரு பக்கம் .வறுமையில் மறுபக்கம் .. போதையில் ..புலம்பலில் .. இன்னொரு பக்கம் .. இப்படி இருக்குற உலகத்துல இவங்க ஏன் இப்படி இருக்காங்க ..கிறுக்கு பசங்க ..சரி பெரியாருக்கு மாலைப்போட்ட எத்தனை பேருக்கு அவரு கொள்கை தெரியும் ?... மனிதம் கேட்டே மடியும் மனிதனிடம் நமக்கென்ன பேச்சு..

வாய்ப்பின் வசதிகளை வரைமுறையோடு கணினி காட்ட ..இற்றுப் போன இமைகள் உலகை உற்று பார்த்தன ..முடங்கிப் போன நான் ..முனைப்பின் முகத்தை ..வெறியின் வேகத்தை ..தேடலின் தேகத்தை..உணர்வுகளில் ஊற்றி செயல்களில் எரிய வைத்தேன்..ஒரே மின்மினி மிதந்து மிதந்து என் நகங்களில் நடனமாடுவது போல் வாழ்வை வசீகரமான துணிகரத்தில் துவக்கி வைத்தேன்..

"சிகண்டி" என்ற அரவாணி இல்லையென்றால் வில்வித்தை வீரன் அர்ஜுனன் அன்றே தோற்றிருப்பான் குருச்சேத்திரப் போரில்...பெயரே சொல்லா அலி ஒருவன் அலெக்சண்டரின் படுக்கையறை வரை தினமும் பாதுகாப்பும் அன்பும் அளிக்கவில்லையெனில் அன்றே திரும்பியிருப்பான் தன்தாய் நாட்டுக்கு..மறைக்கப்படும் வரலாறும் படிக்கவேண்டிய வரலாறுதான் .. அது தேடலில் தான் கிடைக்கும்..

அரவாணிக்கு அக்கறையோடு வழிகாட்ட கனடா என்றோ கண்விழித்தது.. இந்தியா இன்னும் இருட்டிலே தான் இருக்குது .. இருட்டில் மட்டுமே இருக்க சொல்லுது .. திருநங்கையர் தினத்திற்கே மூன்று வருடத்திற்கு முன் தான் தமிழக அரசு அனுமதி அளித்தது . பின் எப்படி விடியல் வரும் ???.. வரும். விடியல் வரும் ....வந்து எங்கள் மடியிலே விழும்..அதுவரை பயணம் பலகரம் பிடித்துப் பயமின்றி பறக்கும் ..

சிலமாதத்திற்கு முன் குரூப் 4 தேர்வெழுத ..அதுமுடிவில் வெற்றியை வெக்கமாய் தந்தது....வீட்டில் இதையறிய கூட ஆளில்லை ...ஆனால் நண்பனவன் அறிவான் ..அரசு வேலை செய்யும் ஆணுக்கே பெண் என சொல்லும் குடும்பங்கள் ..எனக்கு கிடைத்த அரசு வேலையை அறியுமா ?,,,பணியில் சேர இப்போது செல்கிறேன் . அரசாணை கையில் . அடுத்தமாதம் பணியில் சேர வேண்டுமாம்.ஆனால் இப்போதே இந்த பயணம் ..வெறுத்த வாழ்விற்கு நிழலென்ன?.. வெயிலென்ன ..?வீடென்ன ..?வீதியென்ன.?

தனியா பெண் சென்றால் தானே கவலை ..நான் சென்றால் என்ன ?..விருதுநகரிலிருந்து விடியும் முன் விடைபெற்ற நான் இப்போ கோவை மாநகரில் பாதம் பதித்து விட்டேன்,,,,இனி இங்கே தான் ..புது இடம் ..புது வாழ்வு .. புது தடம் .. ஆனால் அதே தனிமை ..இனி இன்னலை எடுத்து இமைமுன் வைத்து அதன் தோலை உரித்துத் தூர வீசுவேன் ..

இலக்கை தொட்டுவிட்டேன் ....அரசு பணியில் அமர போகிறேன்..இனி அடுத்த இலக்கில் அடியெடுத்து வைப்பேன் ..தொடும் வரை தான் இலக்கு ..தொடத்தான் இலக்கு ..தூரத்தில் தான் எங்கள் இலக்கு ..அதை துரத்துவதே தேடலின் கணக்கு ..

குழந்தை மனமில்லா மனிதனின் எந்த இனபெருக்கமும் எனை பெற்றெடுக்க முடியாது தேடலை துரத்தும் தீயாய் நான் ..அத்தீயின் முகமும் நான் ...முதுகும் நான் ,,ஆணாய் பிறந்தவன் ..பெண்ணாய் இருப்பவள் ..இனி யாதுமானவள்(ன்) நான் .

நான் விலகி வந்தாலும்.. விட்டு விலகாமல் ..நட்பில் நகராமல் ..சற்றும் ஓயாமல் ..ஓரத்தில் நிற்காமல் ஓய்வில் உறங்காமல் எனை தேடி வருவான் ...இருவரும் இணைந்து சரித்திரம் சற்றும் திரும்பிப் பார்க்கா திசைகளின் பயணத்தை பற்றி எரியும் பாதத்திற்கு பழக்கிடுவோம் ..இலட்சியத் தேடலை தண்டித்த தருணங்களின் தலைகளை சீவி முயற்சியோடு மோதவிடுவோம்.

சத்தியமாய் வருவான் என்னுயிர் நண்பன் ....."சத்யா" ....

அதுவரை ....
.....எனது அறை சுவரின் துளையில் நுழையும் சூரிய ஒளியின் நுனியில் ஒளித்து வைக்கிறேன் ..
எனது லட்சிய தேடலின் ரகசியத்தை ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Sep-14, 8:06 pm)
பார்வை : 223

மேலே