அறை எண் பதினேழு - பாகம் 4

முன்கதைச் சுருக்கம்
(சசிகலா தற்போது தங்கமணி மருத்துவமனையின் டூட்டி டாக்டர். சஞ்சய் அவள் கல்லூரித் தோழன்; கூடிய விரைவில் மாப்பிள்ளையாகப் போகிறவன்...)

சசிகலா துணுக்குற்று எழுந்தாள். அவனை உன்னிப்பாகப் பார்த்தபடி கேட்டாள்.

‘‘பெண் பார்க்கப் போனியே? பொண்ணு உனக்குப் பிடிச்சிருந்ததா? ’’

‘‘வெறுக்க காரணமில்ல.. எனக்கேற்ற உயரம், நிறம், படிப்பு, அந்தஸ்து,பணம்... ’’

‘‘ஏய், மழுப்பாதே; கான்சரை விட மோசமான விஷயம் மனசை மறைக்கிறது. சொல்லு..மனசுக்குப் பிடிச்சிருக்கா ? ’’

‘‘அதுல யாருக்கு அக்கறை? பொண்ணு பிடிச்சிருக்கான்னு நீ என்னைக் கேட்டியே? என் அப்பா அம்மாவும் இதே கேள்வியை எங்கிட்ட கேட்டிருக்கலாமில்ல? கேக்கலியே.. ’’ சஞ்சய்க்கு மனதின் ரணம் ஆத்திரத்தோடு வெளிப்பட்டது. ‘‘இத பாருப்பா, பொண்ணு எங்களுக்குப் பிடிச்சிருக்கு. இவளைக் கல்யாணம் பண்ணிகிட்டா நீ நல்லா இருப்பேன்னாங்க; அதுக்கு என்ன அர்த்தம்? ’’

அவர்கள் பேச்சிலுள்ள ப்ளாக்மெயில் சசிகலாவுக்கும் புரிந்தது!

‘‘நீ ‘அந்தப் பொண்ணை’- கூட்டிட்டு வா.. நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு ஒரு வார்த்தை அவங்க சொல்லியிருந்தா நான் இப்படியா உட்கார்ந்துட்டிருப்பேன்? கல்யாணம் அவங்க பண்ணி வைக்க மாட்டாங்களாம். நான் திருட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தா போனாப் போகுதுன்னு என் ஃப்ரெண்டுக்கு பிச்சை போடுவாங்களாம். ’’

சஞ்சய்யின் கண்கள் தளும்பின. அவன் வேதனை சகியாது சசிகலா துடித்துப் போய் டேபிளைத் தள்ளி விட்டு அவன் பக்கத்தில் மண்டியிட்டாள்; அவனைத் தவிர அனைத்தையும் மறந்தாள்!

‘‘அவங்கள விடு; இது உன் வாழ்க்கை; நீ முடிவு பண்ணு; இந்தா..எங்கே கூட்டிட்டு போகணுமோ போ!’’, தன் இரு கைகளையும் அவனிடம் நீட்டினாள்.

அந்த நிலையில் சஞ்சய்க்கு சசிகலா தெரியவில்லை. கிருஷ்ண ப்ரேமைக்கு முன் எதுவும் பொருட்டல்ல என்கிற பாவனையில் ராதை தெரிந்தாள்!

சஞ்சய் அப்படியே பின்னுக்கு நகர்ந்தான். குரல் உடையப் பேசினான்.

‘‘நானும் ஆரம்பத்துல சந்தோஷ பட்டுட்டேன். யோசிச்சுப் பார்த்தப்ப தான் தெரிஞ்சுது, அவங்க மனப்பூர்வமா சம்மதிக்கலேங்கிறது; என்னைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்துல சொன்ன வார்த்தைங்க.. அவங்க இயலாமை... இயலாமை வெறுப்பா மாற எவ்வளவு நேரமாகும்? ’’

சஞ்சய் மேலும் தொடர்ந்தான்.

‘‘கல்யாண மார்க்கெட்டுல என் ரேட் என்ன தெரியுமா? நூறு சவரன் நகை, கார், கொழுத்த மாமனார்.. இதெல்லாம் இப்ப அந்தப் பொண்ணு கிட்ட இல்லே. இப்படியெல்லாம் அந்தப் பொண்ணு வந்தா, அவளை எங்க வீட்டுல மருமகளா நடத்துவாங்க; இல்லேன்னா மருமகள்கிற பேரில வேலைக்காரியா நடத்துவாங்க. தைரியமான பொண்ணுன்னாலும் வாழ வந்த வீட்டுல போராடிகிட்டு இருந்தா போராட வேண்டிய விஷயங்களுக்கு என்ன செய்றது?’’

சசிகலா அதிர்ந்தாள். சஞ்சய்யின் குடும்பப் பின்னணி அவள் அறிவாள். சஞ்சய் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! பணமும் கௌரவமும் அவர்களுக்குச் சாதாரண விஷயமல்ல. இன்னும் சொல்லப் போனால் ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்வதும், பெரிய இடத்து சம்பந்தம் கிடைத்தால் ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருப்பவளை கழட்டி விடுவதும் அவர்கள் குடும்பத்தில் உண்டு! ஏன், சஞ்சய்யின் அம்மா கழட்டி விடப்பட்டது அப்படித்தானே?

சட்டென்று சசிகலாவுக்கு சஞ்சய் தெரியவில்லை. மனது கொள்ளாத பிரியத்தில் தன் மனதை அடக்கிய நிலையில் கிருஷ்ணன் தெரிந்தான்!

‘‘சசி, இந்தச் சின்ன இடத்துலேயே உன் சுயத்தை அழிச்சவன் நான். நான் உனக்கு வேணாம் சசி.’’

‘சடசட’வென்று சஞ்சய்யின் கண்ணீர் சசிகலாவின் முகத்தில் பட்டுத் தெறித்தது.

‘‘அதீதப் பிரியம் சில சமயம் கல்யாணத்துல முடியாதும்மா... நீ நல்லாயிருக்கணும்;’’

‘‘இப்ப நான் என்ன செய்யட்டும், சொல்லு.’’

‘‘நான் கூப்பிடாமலேயே என் கல்யாணத்துக்கு வந்துடு. அதுக்கப்புறம் அப்படியே போயிடு. நிமான்ஸ் என்ட்ரான்ஸ் எக்ஸாம் வருது.. மறக்காம அட்டெண்ட் பண்ணு; இப்போதைக்கு இந்த ரூமை விட்டு உடனே போயிடு... போ’’

இந்த நிமிஷம் சசிகலா உடைந்து அழுதாள். அப்படியே எழுந்தாள். டேபிள் தடுக்கி அவன் மேல் பூக்கூடையாய்க் கவிழ்ந்தாள்!

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (25-Sep-14, 3:55 pm)
பார்வை : 131

மேலே