எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்------------------விரல் மாறும் தொடர்கதை 9 புனிதா வேளாங்கண்ணி
விழாவில் சில்மிஷம் செய்து கொண்டிருந்த இருவரும் அங்கு போலீஸ் உடையில் நிற்கும் பெண்களைப் பார்த்து நழுவ முற்பட்டனர். சும்மா விடுவார்களா நம் ரெயின்போ நங்கைகள்... சும்மா பின்னி பின்னி பெடலெடுக்க கையெடுத்து கும்பிட்டு இருவரும் ஓட்டமும் நடையுமாக உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடிவிட்டனர்.
விழா முடிந்து அனைவரும் காரில் வீடு வந்தடைந்தனர்.
சரஸ்வதிக்கு காரில் வந்தது சேராமல் குமட்டிக்கொண்டே இருந்தாள். அனைவரும் ஓடிவந்து அவள் தலையை பிடித்துக்கொண்டனர்.
எவர்ஸ்மைல், “கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் குடிமா.. சாரியாய்டும்”, எனச் சொல்லி கலந்து கொண்டு வந்தாள்.
“வேண்டாம்மா! எனக்கு ரொம்ப குமட்டலா இருக்கு”, என்று சொல்ல,
“குடிச்சிட்டு நீ வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை.
கொஞ்சமாவது குடிம்மா, குமட்டல் நிற்கும்”, என்று சொல்லி அவள் வாய் வரை கொண்டு போகவும், வாங்கி பருகியவள் மீண்டும் குமட்ட, கமலி ஒரு கப்பை அவள் வாய்க்கு அருகில் வைத்து “பரவாயில்லை எடு”, என்றாள்.
சரஸ்வதி தாங்க முடியாமல் அனைவரையும் பார்த்து அழுதாள்.
“ஏம்மா அழற”, என்று எவர்ஸ்மைல் கேட்க,
“இத்தனை பேர் எனக்கு இருக்கீங்க. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு”, என்றாள்.
அதற்குள் சூர்யா.. புதிதாக வந்த நபர்... இந்த சூழ்நிலையை சகஜமாக்க...
“ஆமா சரஸ்வதி! உனக்கு பெண் குழந்தை பிடிக்குமா? ஆண் குழந்தை பிடிக்குமா?”, என்று கேட்க,
சரஸ்வதி, “எதுனாலும் ஓ.கே” என்றாள்.
“ஆமா.. அதை எப்படி கண்டு பிடிப்பாங்க?”, என்று கமலி கேட்க அந்த நேரம் அவர்களின் டாக்டர் காருண்யா அங்கு வந்தார்.
“அத நான் சொல்றேன். நீ தொடர்ந்து குமட்டவும் ஸ்மைல் தான் போன் செய்தாள். நான் ஆஜர் என்றாள். மேலும் ஸ்கேன்ல இப்பெல்லாம் என்ன குழந்தை என்று சொல்வது சட்டப்படி குற்றம்”
என்றவர் அவளை பரிசோதித்து விட்டு,
“அப்பறம் சரஸ்வதி! இப்போ எப்படி இருக்கு? இந்த மாதிரி நேரத்தில ரொம்ப தூரம் பயணம் எல்லாம் வேண்டாம்.....
....கமலி இப்ப நான் உன் கேள்விக்கு வர்றேன் ...
... ஒரு கரு ஆணாகவோ பெண்ணாகவோ மூன்றாம் பாலினமாகவோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பதில்லை. கர்ப்பப்பையில் கரு உருவாகும் போது நிறமூர்த்தங்கள் (குரோமோசோம்) தீர்மானிக்கிறது.
XY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும்,
XX நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழந்தையாகவும்,
XXY அல்லது XYY கருவில் சேரப்பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவரீதியான உண்மை.
ஒரு சில சமயங்களில் குழந்தை பிறந்த பின்னும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உடம்பில் ஏற்பட்டால் சில நேரம் XY நிறமூர்த்தங்கள் கூட மூன்றாம் பாலினமாக மாறலாம்”, என்று காருண்யா சொல்ல அனைவரும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அதற்குள் வெளியில் இருந்து ஒரு குரல். காருண்யாவின் டிரைவர்...
“அம்மா! இதை காரிலேயே வைத்துவிட்டு வந்து விட்டீர்கள்”, என்று ஒரு கவரைக் கொண்டு வந்து தந்தான்.
அதை வாங்கி காருண்யா எவர்ஸ்மைலிடம் கொடுத்தார்.
“இந்தா ஸ்மைல் இது உனக்கானது. ஒரு நியூஸ் தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்கான அத்தாட்சி. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடி உங்களைப் போல இருக்கும் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களின் அங்கிகாரத்தை நிலை நாட்டுங்கள்”, என்று சொல்ல..
“அண்ணி”, என்று எவர்ஸ்மைல் காருண்யாவின் காலில் விழ அனைவருக்கும் திகைப்பு...
எவர்ஸ்மைல் தொடர்கிறார்.
“ஆமா! இவங்க என்னோட அண்ணி.. அண்ணனின் மனைவி. இவங்க என் வீட்ல காலடி எடுத்து வைக்கும் போது நான் அவ்வளவாக விபரம் தெரியாத சிறியவள். திடீரென அண்ணன் காலமாகிவிட எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அம்மா அப்பாவே அறியாத போது இவர்கள் மருத்துவராக இருந்ததால் என்னவோ என்னை முழுமையாக புரிந்து கொண்டார்கள். என் அப்பாவிடமும் அம்மாவிடமும் வாதாடினார்கள்.
“இதுவே உங்களுக்கு ஒரு பெண் இருந்து 13 வயதில் பெரியவள் ஆகியிருந்தால் அதை ஊர் அறிய கொண்டாடி இருக்க மாட்டீர்களா? ஏன் உங்க பையனுக்கு இதே வயதில் ஹார்மோன் சுரக்கும் தருணம் ஆரம்பிக்கும் பொழுது உடலில் தன்னையே அறியாமல் பெண்மைக்கான குணாதிசயங்களை உணரும் வேளை தன்னைப்பற்றி யாரிடமாவது சொல்லவேண்டும்.. சொன்னால் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்று மனதிற்குள்ளேயே அழுது அழுது பாசத்துக்காக மட்டுமே ஏங்கும் வேளை... நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா.. இதனால் உங்கள் சுய கௌரவம் பாதிக்கம்படும் அல்லவா” என்று எனது அண்ணி, அம்மாவிடமும் அப்பாவிடமும் வாதாடி என்னை தரதரவென இழுத்து வந்தது என் கண்முன்னே இப்போதும் நிற்கிறது.
....எனக்கு இவர் தான் தாய்.....
என்னை வேறு இடத்தில் தங்கவைத்து, படிக்கவைத்து தகுந்த சிகிச்சைக்கு உட்படுத்தி இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர் இவர் தான்”
இதனைக்கேட்ட அனைவரின் கண்களிலும் நீர்த்துளி.
அப்போது காருண்யா,
“நான் வந்து உங்க எல்லோரையுமே என்னுடைய பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன்.....
.....திருநங்கையாகப் பிறப்பது தவறில்லை. அதை நினைத்து நினைத்து சங்கடப்படக்கூடாது. நிச்சயமாக ஏதாவது சாதிக்கத்தான் நம்மை கடவுள் படைத்திருக்கிறார் என்று நினைத்து ஒவ்வொரு செயலையும் விழிப்புடன் செய்ய வேண்டும். தோல்வியை தோல்வியாக நினைக்காமல் வெற்றியின் படிக்கட்டாக மாற்றவேண்டும். அதற்கான முதல் படிக்கட்டு தான் இந்த தொலைக்காட்சி ஆரம்பிப்பது. இதில் வைராக்கியத்தை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி அனைவரும் ஒன்றாக செயல்படுங்கள். உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக நானிருப்பேன்”
அப்போது எவர்ஸ்மைல்,
“இவ்வளவு பணம் ஏது அண்ணி?”, என்று கேட்க
“நம்ம வீடு வித்ததுல உன்னோட பங்கையும் உன் அண்ணனோட பங்கையும் அத்தையும் மாமாவும் வந்து எங்கிட்ட கொடுத்தாங்க.. நானும் என் சேமிப்பையும் கொஞ்சம் போட்டு இருக்கேன்....!” என்று சொல்லி, “நான் வருகிறேன். எனக்கு லேட்டாயிடுச்சு....!”, என்றவாறு காருண்யா காருக்கு சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து உணவருந்திவிட்டு அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர்.
எவர்ஸ்மைல் ஜீவாவிடம்,
“இப்ப நீயூஸ் பாத்தியா ஜீவா? பெங்களூர்ல நம்ம திருநங்கை ஒருத்தர இரண்டு பேர் சேர்ந்து வம்பிழுத்ததுமில்லாம ஓடுற ரயில்ல இருந்து தள்ளிவிட்டுட்டாங்க.. அந்த இடத்திலே அவர் துடி துடித்து..”
“போதும் போதும் சொல்லவேண்டாம்...”,என்று சொன்ன ஜீவாவின் கண்களில் இருந்து நீர்த்துளி விழ, நம்மள மாதிரி எத்தனை கனவுளோடு அவர் ரயிலில் ஏறியிருப்பார்.. என்று எண்ணிக்கொண்டிருந்தான்..... நெஞ்சம் துடித்துக்கொண்டிருந்தது.. கண்கள் சிவந்து கொண்டிருந்தது.....
“சரி சரி படு, நாளைக்கு காலைல விழாவிற்கு போக வேண்டும்”, என்று சொல்லி விட்டு எவர்ஸ்மைல் தூங்கச் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் காலை...
விழாவிற்கு அனைவரும் கிளம்பிச்சென்றனர். விழா நேரம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று ஜீவாவைக் காணவில்லை......
அப்போது நான்கு போலீஸ்காரர்கள் எவர்ஸ்மைலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்....
.....ஜீவா எங்கே? எங்கே? எங்கே?
.......போலீஸ்காரர்கள் எதற்கு வருகிறார்கள்??
......யாரேனும் தெரிந்தால் சீக்கிரம் சொல்லுங்கள் தோழமைகளே!