நல்லா இருடா கணேசா
![](https://eluthu.com/images/loading.gif)
‘‘அப்பவே சொன்னேன், லஞ்சம் கொடுத்து உள்ளே போக வேண்டாம்னு, கேட்டீங்களா? இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில நம்மள யாரு காப்பாத்துவா? ’’- புலம்பினான் சீனு.
யாருக்குத் தெரியும் இப்படி ஒரு நூறு கிலோ வம்பு வரும்னு?
வருண், சீனு, ஆனந்த், பிரகாஷ், வசந்த் – எல்லோரும் கோயமுத்தூர் பாலிடெக்னிக் மாணவர்கள். சுற்றுலாவாக முதுமலை வந்தார்கள். சிறப்பு அனுமதி கிடைத்தவுடன் பார்வையாளர் பகுதியில் ரெண்டு சுற்று சுற்றினோமா, நாலு போட்டோ எடுத்தோமான்னு பெங்களூர் போய்ச் சேர்ந்திருக்கலாம். உலக மகாப் பொல்லாத அருவியை கண்டுகிட்டாங்களாம்.
செக்யூரிட்டி அப்போதே சொன்னார். யானைங்க உலாவுற இடம். அடிக்கடி பிளிறல் சத்தம் கேக்குது. ஏதாவது குட்டி யானை வழி தவறிப் போயிருக்கலாம். இந்த சமயம் மனுஷ வாடை அதுங்களுக்கு ஆகாது, துவம்சம் பண்ணிடும்னு. இந்த வருணும் பிரகாஷும்தான் கேக்கல.
விஷயம் இதுதான். எந்த குட்டி யானையைப் பற்றி செக்யூரிட்டி சொன்னாரோ அந்த குட்டி யானை அருவியோரமாய் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தது. இவர்களைப் பார்த்ததும் அதிலும் குறிப்பாக வசந்த்தை பார்த்ததும் அவன் பின்னாலேயே வந்து விட்டது. ‘‘ச்சூ ச்சூ’’ என்றாலும் போகவில்லை. கல்லை விட்டு எறிந்தாலும் அசரவில்லை.
ஏற்கெனவே வெறியோடு அலைகிற யானைக் கூட்டம் குட்டியை இவர்களோடு பார்த்தால் என்னாகும்?
குச்சி குச்சியான மூங்கில் மரக்காட்டில் பேந்த பேந்த விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர் ஐந்து பேரும். யானைக்குட்டி வசந்தின் மடியில் தும்பிக்கையை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது!
பயம் பயம்தான். ஆனாலும் குட்டி யானை அல்சேசன் நாய் மாதிரி பழகுவது அவர்களுக்கு ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது.
‘‘ஏண்டா வசந்த்? இதோட கண்ணுக்கு உன்னைப் பார்த்தா அங்கிள் மாதிரி தெரியுதோ? ’’
வசந்த் நல்ல உயரம், உயரத்துக்கேற்ற எடை, இளகிய மனம்...
‘‘பூனைக் குட்டின்னா பேக்கில் தூக்கி போட்டுட்டு போயிடலாம்; யானைக் குட்டிய என்னடா பண்றது? ’’
‘‘பேசாம வாராய்.. நீ வாராய்.னு பாட்டு பாடி அந்த மலையுச்சிக்கு கூட்டிட்டு போய் அங்கிருந்தே தள்ளி விட்டுர்லாமா? ’’- ஆனந்த் சொல்ல அத்தனை பேரும் பாய்ந்தனர் அவன் மேல்.
‘‘டேய். டேய். பேச்சு மாறக்கூடாது.. நீதான் மலையுச்சில போய் யானையை தள்ளி விடணும். ’’
‘‘ரெண்டு கிலோ ஷூவை போட்டுட்டு நின்னாலே வெயிட் நாப்பது கிலோ தேற மாட்டே; நீயெல்லாம் பேசற பேச்சா இது? ’’
‘‘இதோட அம்மா கிட்ட நிலைமையை விளக்கி சொல்லிடலாம்.. ’’
‘‘அடேங்கப்பா! இவங்க அம்மா அண்ணா யூனிவர்சிட்டியில படிச்சு பட்டம் வாங்கினவங்க; இவர் விளக்குவார், அவங்க விளங்கிக்குவாங்க. ’’
‘‘டேய். ரெண்டு யானை முடி பிடுங்குடா! ’’
‘‘முடி அவ்வளவா இல்லடா.. பன்னிக்குட்டி தோல் மாதிரி இருக்கு. ’’
ஆளுக்காள் தொட்டுப் பார்த்து விளையாடினர்.
‘‘ செக்யூரிட்டிய கூப்பிட்டு விடுவோமா? ’’
‘‘ அந்தாள் டூட்டி முடிஞ்சி போயிருக்கும். புது ஆள் நம்மள இங்க பார்த்துச்சு, கட்டி வச்சி அடிக்கும்.’’
யானைக்குட்டிக்கு தாகம் போலும். ஆடி அசைந்து அருவிப் பக்கம் போனது.
‘‘டேய்.இதான் சமயம்... ஓடிடுவோம் வாங்கடா... ’’
அத்தனை பேரும் ஓடிப் போயினர். வசந்த் ஓட யத்தனிப்பதை பார்த்த குட்டி யானை நீர் அருந்துவதை விடுத்து அவசர அவசரமாகத் திரும்பியது. அதன் சின்னக் கால்கள் பாறையில் வழுக்கி சுதாரித்தது.
வசந்த் நின்று விட்டான். குட்டி யானைக்குப் பக்கத்தில் போய் தட்டிக் கொடுத்தான். குட்டி யானை இப்போது நிம்மதியாக நீரருந்தியது!
பாதுகாப்பு தேவைப்படுவது மனிதர்களுக்கு மட்டும்தானா?
ஓடிப் போனவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு திரும்ப வந்தனர்.
அதற்குள் குட்டி யானை அருவியில் ஆனந்தக் குளியல் போடத் தொடங்கியது. நீரைப் பூவாளியாக வாரியிறைத்தது. தும்பிக்கையால் ஒவ்வொருத்தர் கையையும் பிடித்து அருவிக்குள் இழுத்தது.
தும்பிக்கை அழைப்பைத் தட்ட முடியாமல் எல்லோரும் அருவிக்குள் இறங்கினர்.
காலை பதினோரு மணி வெயில் அது. காரமில்லாத சூடு வெயில். ஆனாலும் நசநசவென்ற பருவ நிலைக்கு அருவிக் குளியல் அமிர்தமாக இருந்தது.
அரை மணி நேரம் போலச் சென்றிருக்கும்...
குட்டி யானை அருவிக் குளியலில் ஒன்றி விட்டது. அதுதான் சமயமென்று அவர்கள் ஓடியிருக்கலாம். ஏனோ அப்படிச் செய்யவில்லை.
தாய்ப்பால் குடிக்கிற குட்டி; எவ்வளவு சீக்கிரம் குட்டி யானையை கூட்டத்தோடு சேர்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேர்த்தாக வேண்டும்.
முதலில் இதை அருவியிலிருந்து கிளப்ப வேண்டுமே!
வசந்த் திடலில் நின்று கைந்நீட்டி அழைத்தான். குட்டி யானைக்கு அந்த சமிக்ஞை புரியவில்லை போலும். அருவியில் நன்றாக காலை நீட்டி உட்கார்ந்து தும்பிக்கையால் நீரை இறைத்து விளையாடியது.
நான்கு பேர் சேர்ந்து கைலி கட்டி குட்டி யானையை இழுத்து கைலிதான் கிழிந்தது.
நண்பர்கள் ஒரு ஐடியா பண்ணினார்கள்.
யானையோடு யானையாகப் போய் அருவியில் உட்கார்ந்து கொண்டார்கள். வசந்த் ‘‘வா வா’’ என்று கைந்நீட்டி அழைத்ததும் முழங்கை ஊன்றித் தவழ்ந்து அவனிடம் வந்தார்கள்.
இப்படி ஒருமுறையல்ல, இரு முறையல்ல; பத்து பதினோரு முறை செய்து முட்டி பேர்ந்து அழாக்குறையாக ஆன பின்னர் குட்டி யானைக்குப் புரிந்தது. அதுவும் அவர்களோடு சேர்ந்து திடலுக்கு வந்தது.
வந்தவுடன் அதற்கு பசி வந்து விட்டது! அவரவர் சட்டைக்குள் துழாவத் தொடங்கியது.
அவர்களிடம் இருந்ததே நாலு பாக்கெட் மேரி பிஸ்கட்டும் பெரிய ஃப்ளாக்ஸ் நிறைய காபியும்தான்.
மேரி பிஸ்கட்டை பிரிப்பதற்கு முன்னே பிடுங்கியது. வயிற்றுக்கு ஒத்துக்குமா, கொடுக்கலாமா- ஒன்றும் புரியவில்லை!
இரண்டே நிமிடத்தில் நாலு பாக்கெட்டும் காலி. ஃப்ளாக்ஸ் காபியை ஐந்து பேப்பர் கப்புகளில் ஊற்றி பதமாக ஆற்றி, திரும்பவும் ஃப்ளாக்ஸ்கில் ஊற்றி அப்படியே யானைக் குட்டியின் வாயில் கவிழ்த்தார்கள். லொச்சு லொச்சு என்று சப்புக் கொட்டி குடித்தது யானை. ஃப்ளாக்ஸ்கையும் உள்ளே தள்ள முற்பட்டபோது பதறிப் போய் தொண்டையிலிருந்து பிடுங்கினார்கள்.
இதற்கிடையில் வருணும் பிரகாஷும் ஃபாரஸ்ட் ஆபிசரைத் தேடிக் கொண்டு கீழே போய் விட்டனர். யானைக் கூட்டம் எங்கிருக்கிறது என்ற தகவலாவது கிடைக்கும்.
யானைக் குட்டிக்கு கணேசன் என்று நாமகரணமாகி ஒருவன் ஆராரோ ஆரிரரோ பாட, இன்னொருவன் பாபா ப்ளாக் ஷீப், ஏபிசிடி ரேஞ்சுக்குப் போயிருந்தான்.
யானைக் குட்டியும் சும்மாயில்லை. கை வாட்சை கழட்டுவதும், தோள் பையை தூக்கி எறிவதும் மண்ணை அள்ளிப் போடுவதுமாக இருந்தது.
வருணும் பிரகாஷும் வந்து விட்டனர். ‘‘ எம்மா வசந்தா, அதோ தெரியுதே பாதை.. அதுல நெடுக்கால போனா உன் சொந்தக்காரங்கள பாக்கலாமாம். நீ புள்ளய கூட்டிகிட்டு மொதல்ல இறங்கு, பின்னால நாங்க வரோம். ’’
வசந்த் முன்னே போக, அவன் கையை துதிக்கையால் பிடித்தபடி பின் தொடர்ந்தது கணேசன்.
வசந்த்துக்கு நெஞ்சு முழுக்க பயம். யானைக் கூட்டம் குட்டியோடு அவனைக் கண்டால்...? வீட்டில் அரைக்கப்படும் புதினாத் துவையல் ஞாபகத்துக்கு வந்து படாத பாடு படுத்தியது.
யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓட வேண்டுமாம். தும்பிக்கைக்கும் நமக்கும் ஒரு ரெண்டடி தூரத்தையாவது மெயிண்டைன் பண்ணணும்...
ஒரு கட்டத்தில் அவனை நடத்திக் கொண்டு போனது குட்டியானை!
ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்பார்கள். இன்னொரு குறுக்கு வழி அந்தப் பாதையோடு இணைந்தது. கொஞ்ச தூரம் சென்றிருப்பார்கள்..
தபதபவென்ற சப்தம்..
திரும்பிப் பார்த்த வசந்த் அரண்டு விட்டான்.
செந்நிறமாய் வானுயர எழுந்த புழுதியில் கரிய மலைகளைப் போல் ஏழெட்டு யானைகள்.. இன்னும் தூரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய்...
குட்டியானை அப்படியே திரும்பி அசுர வேகத்தில் தலையாட்டியபடி அந்த கூட்டத்தை நோக்கி ஓடியது. ஏதோ ஒரு பெண் யானை துதிக்கையை நீட்டியது.
குட்டியானை சட்டென்று நின்றது. நிதானமாகத் திரும்பி வசந்த்திடம் வந்தது. சரிவில் நின்றிருந்த வசந்த்தின் காலைப் பிடித்து இழுத்தது. வசந்த் என்ன ஏதென்று உணர்வதற்குள் கால் இழுபட அப்படியே உட்கார்ந்து விட்டான். அமர்ந்த நிலையிலேயே அவனை இழுத்தபடி பின் பக்கமாகவே நடந்து சென்றது யானை.
தன்னையும் அதனோடு அழைத்துச் செல்கிறது என்று வசந்த்துக்கு தெரிந்தது. மண்பாதையில் இழுபட்டு, பேண்ட் கிழிந்து, தோல் சிராய்ந்து எரிய ஆரம்பிக்க, ‘‘ ஐயோ அம்மா ’’ என்று கத்த ஆரம்பித்தான்.
கூட்டத்திலிருந்து வயதானது போல் தோன்றிய பெண்யானை முன்னாடி வந்தது. உடம்பெல்லாம் நிறைய நிறைய சுருக்கங்கள்; வெள்ளைப் புள்ளிகள். தன் துதிக்கையை குட்டி யானையின் தலையில் வைத்தது. முதுகை தடவிக் கொடுத்தது. அப்படியே இறக்கி லாவகமாக வசந்த்தின் காலை விடுவித்தது. குட்டியை அரவணைத்தபடி திரும்பியது! மற்ற யானைகளும் ஒரு வித பிளிறலை வெளியிட்டன. நான்கைந்து துதிக்கைகள் குட்டி யானையை வரவேற்றன!
யானைக்கூட்டம் வந்த வழியே திரும்பியது. வசந்த் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். போன உயிர் திரும்பி வந்தது. சிராய்ப்பு எரிந்தது. அதுவும் சுகமாக இருந்தது.
‘‘ நல்லா இருடா கணேசா! ’’
அருணை ஜெயசீலி