தீபாவளி இது, தீபங்களின் ஆவளி
ஆடலின் நாயகன், கார்முகில் வண்ணன்!
ஆடு மாட்டத்திலோ ரங்கமிம் மன்னன்!!
பிள்ளையைக் கிள்ளித் தொட்டிலு மாட்டும்
கயவர்கள் வாழுங் கழிநிலந் தன்னில்,
பிள்ளையைக் கிள்ளுங் கயவரைக் கிள்ளிக்
குறுநகை கொள்ளும் பெருங்குணக் கள்வன்!
நரகன்....,
தாயின் கரமே தன்மரணத்தைத்
தழுவுதல் வேண்டும் எனும்வரம் பெற்றான்!
பெரும் வரம் பெற்றே பேருவகைக் கொண்டான்!!
அறஞ்செலும் வழியில் ஆட்சியுமில்லை!
மறமே ஆட்சியி னறமெனக் கொண்டான்!!
தன்குஞ்சு, காக்கைக்கும் பொன்னெனு மொழிபோல்
இன்னா செய்தாலு மீன்றாள் - தன்னுடை
தனயனின் உயிரதைப் பறித்திடுவாளோ?!
அதனால் தோன்றிட்ட செருக்குந் திமிரும்
அழைத்தன அவனை அழிவினை நோக்கி!
*
முகத்திலழியா புன்னகையேற,
அறுந்திடா நாணுடை வில்லினை யேந்தி
அம்பறாத்தூணி யொருபுறம் துலங்க
ஏறினான் கண்ணன் பொன்மணி ரதத்தில்!
பொன்மணித் தேரிலோர் சுடர்விடுங் கல்லாய்
அமர்ந்தனள் சாரதி சத்யபாமை!
பூ முடி கயிற்றினை யேந்திடுங் கரங்கள்,
புரவியின் கயிற்றினைத் தாங்கின இன்று!
உற்றவன் செயச்செலும் போர் அதற்காக
உதவிடு முளமுடன் செலுத்தினள் தேரை!!
நடப்பதும் நடந்ததும் நாயக னறிவான்!
நரகன் அதனை எவ்வித மறிவான்?!
அழிவினை நல்கு மம்பினைச் செலுத்தி
அதனாற் புரிந்தான் உக்கிர விற்போர்!
அருகே விரைந்திடு மம்பினை விலக்கி
ஆட்டங் காட்டின ஆடல் வல்லான்,
நுதல்தனிற் தைக்க முனைந்திடு மம்பினை
தடுக்காதேந்தி மயங்கியே வீழ்ந்தான்!
மயங்கி வீழ்ந்ததும் நடிப்பென வறியா
மங்கை பாமை மனத்துயர்க் கொண்டாள்!
அருமை நாயக னாருயிர்க் கண்ணன்,
சாய்ந்ததுகண்டு மனமிக நொந்தாள்!
சாய்த்தவன் முகந்தனை கனன்று நோக்கினாள்!
சீரும் பாம்பதன் சீற்றம் கொண்டாள்!!
வில்லினை எடுத்தாள்!
அம்பினைத் தொடுத்தாள்!!
எய்தாள்....அரக்கனின் நெஞ்சு பிளக்கவே!!
*
அரளிச் செடியினை விதைத்தவன் - கிளையில்
அருஞ்சுவைக் கனியினை விரும்பிடல் தகுமோ?!
விழுங்கிய கனியது விஷக் கனியன்றோ?!
விழுங்கியது, அது விதைத்தவ னுயிரை!!
தேவரையெல்லாம் வாட்டின நரகன்,
தாயின் கரத்தாற் தரைவிழல் வரமாம்!
இன்றோ,
நேரெதிர்ப் பகைவனின் மனையாளிவனை
மரணக்கிணற்றினில் அழுத்துகின்றனளே?!
உள்ளங்குமைந்தான் இருள்சேர் நரகன்!
நரகன் தவிப்பினை யுணர்ந்தான் பெருமான்!
அவன்,
நரகன் வதையின் காரணம் நவின்றான்!!
பாமை இவளே பூ-மகளென்னும்
பழங்கதையுரைத்து உபதேசித்தான்!!!
உண்மையுணர்ந்தனன் நரகன் - அவனும்
செய்தவறெண்ணி மனத்துயர்க் கொண்டான்!
மனக்கலக்க மதை விலக்கிட வேண்டி
மாயக் கண்ணனின் தாளடி பணிந்தான்!!
கண்ணன் நரகனை கனிந்தே நோக்கினான்!
நரகனின் மறைவிது நன்னாளாகும்,
ஆவளித்தீப மலங்கார முதலாய்
புத்துடை யேற்கும் பொன் நாளாகும்,
புத்துணர்வூட்டும் திருநாளாமென
அசுரர்க் குரைத்து அகமகிழ்வித்தான்!!
அசுரர்க்கு முடிவினை யளித்திட்ட இந்நாள்!
அகிலம் மகிழும் அற்புதப் பொன்னாள்!!
அனைவரும் ஏற்றுவர் சுடர் விடு தீப ஒளி!
அதுவே நந்நாள் தீப ஆவளி!!
சொல்லும் காரணம் நிஜமென்றாலும்,
பகுத்தறிவார்க்குப் புனைகதையாயினும்,
கொள்வோம் அதனுள் நற்பொருள் மட்டும்!
எளியோரை வாட்டும் வலியோரை -வாட்டும்
அறமெனு மழியா மறைபொருள் மட்டும்!!
வைகறை நீராடி...
வாங்கிய உடையணிந்து
தொழுவோம் கண்ணனைத் தொல்லைகள் நீங்க!
அழகிய விளக்கின் ஒளிச்சுடர் பரவ,
எங்கும் இருளது மருண்டு மறைந்து,
மங்கல ஒலியால் மனம் மிக மகிழும்!
நற்செயல் நற்சொலால் நன்மைகள் பெருகும்!!
தீமையை நன்மை அழித்தது வெண்ணி
உள்ளம் மிக மிக உவகை கொள்வோம்!
ஆடலும் பாடலும் கூடக் களித்தே,
ஏற்றுவோம் மகிழ்வுடன் தீப ஆவளி!
தீப ஆவளி; தீப ஆவளி;
தீபாவளியிது தீப ஆவளி!!!
(2004ல் எழுதியது - சிறு திருத்தங்களுடன் பதியப்பெற்றிருக்கிறது :) )
**************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்