இது ரோஜாவின் கவியோ ராஜாவின் கவியோ அல்ல-வித்யா

இது ரோஜாவின் கவியோ ராஜாவின் கவியோ அல்ல........!-வித்யா
நம் அறியாமையின்
மறுப்பக்கத்தில் அரசியல்
நரிகளின் உறக்கம்.......

சாவித் துளைகளினூடே வாழ்க்கை
அழகியப் பொய்களின் விற்பனை
அனுபவிக்கப் பெண்களின் புன்னகை
இதற்கு
வங்கிக் கணக்கில் உயரும் இலக்கம்........!!

இருட்டின் வெளிச்சத்திலே
சரிகளின் நிழலொதுங்கி
தவறுகளில் மேய்ந்து
கொழுத்துத் திரயும்
பன்றிகள்..........!!

பிச்சை வாங்கிய வாக்கு
மேல்தட்டு வாழ்க்கை
வெட்டியெடுத்து ஒட்டிக்கொண்ட
பழம்பெருமை
சாட்சியில்லாக் குற்றங்கள்
தண்டனை இல்லா வழக்குகள்.....!!

வாக்குறுதிகளின் பொழுதுதான்
தெரிகிறது
வார்த்தைகளின் அர்த்தம்
அரசியல் அகராதியில்
மாற்றம் என்று......

சுவரொட்டிகளில்
நஞ்சில்லை...
வரலாறுகள்
மாற்றியமைக்கப்படுமாயின்

சாட்சி இல்லாததால்
குற்றவாளிக்கு விடுதலை
நீதிக்கு தண்டனை.......!

மான்களின் இளைப்பாறலில்
புலிகளின் அயராத உழைப்பு
உணவுத் திருவிழா......!

இங்கு
விதிகள் வகுப்பவர்களுக்கு
மட்டும் விதிவிலக்கு......!

வரைமுறையில்லா
வன்முறை
அடக்குமுறையில்லா
அத்துமீறல்.......!

கொஞ்சம் யோசித்தால்
சுதந்திரம் வாங்கிய
அடிமைகள் நாமென்று
தோன்றும்..........

ஆம்
ஏனெனில் இது
ஒரு ரோஜாவின் கவிதையோ
ஒரு ராஜாவின் கவிதையோ அல்ல

இன்னும் பெயர் வைக்கப்படாத
அரசியல் அசிங்கங்களுக்கான கவிதை.....!!

எழுதியவர் : வித்யா (15-Oct-14, 4:10 pm)
பார்வை : 127

மேலே