சிந்தனை ஒளிரட்டும்

அகல் தீபங்கள் ஒளிரட்டும் -மனிதர்
அகத்தில் தூய்மை, வாய்மை பரவட்டும்
அரசியல் தத்துவம் நிலைக்கட்டும் -அதன்
அடிப்படையில் அரசு இயங்கட்டும்!

அறுசுவை உணவு பரிமாறி -அதில்
அரசியல் நெய் ஊற்றி -கொள்கையில்
அன்பு பெரிதென ஏற்றி -மண்ணில்
மக்களாட்சி மகிமை புரியட்டும்!

நீதி தவறாத செங்கோல் - ஏழைகள்
அநீதிக்கு எதிராக வாளாகட்டும் -மோசடி
நயவஞ்சகரை தண்டிக்கும் வேலாகட்டும்
நன்மையுற உழைப்பவர்க்கு மந்திர கோலாகட்டும்!

முடியாண்டவர் காலத்தில் நாட்டில்
மன்னருக்கு மேல் பெரியவரில்லை
மக்களாட்சி தத்துவத்தில்
சட்டத்துக்கு மேல் பெரியவரில்லை!

சாட்சிகள் வேண்டுமானால்
சட்டத்தை ஏமாற்றட்டும்
மனசாட்சி உள்ளவர்கள்
சத்தியத்தை காக்கட்டும்!

வாதத்தில் கூட தீவிரம்
காட்டாத இந்தியாவில் தலைதூக்கும்
தீவிரவாதத்தை தடுக்க மீண்டும்
கண்ணன் பிறந்து சங்கநாதம் முழங்கட்டும்!

எழுதியவர் : விஷ்ணுதாசன் (15-Oct-14, 3:20 pm)
Tanglish : sinthanai olirattum
பார்வை : 103

மேலே