விதையாய் விழு
இழப்பின் சுகம் தான் என்னவோ!
இழத்தலின் சூட்சுமம் தெரிந்தவனே-தன்னை
இழந்து சுகம் பெறுகின்றான்!
இளைஞனே நீயும் உன்னை இழ -விதையாய்;
விருட்சமாய் வளர்வாய் ஓர் நாள்!
புத்தனைப் போல் ஆசை அறுத்து,
இயேசுவைப் போல் தன்னலம் துறந்து,
காந்தீயம் பேச இன்றே விழு, விதையாய்!
இளைஞனே விழு;விழுவதில் தவறில்லை - ஆனால்
இருளை நீக்கும் ஒளியாக,
குறிஞ்சி தரும் கனியாக,
முல்லை தரும் மணமாக,
மருதம் தரும் பசுமையாக,
நெய்தல் தரும் தென்றலாக மீண்டும் எழு!
திணை திரிந்த பாலையாக,
மரக்காலுக்குள் இருக்கும் விளக்காக மட்டும்
மடிந்துவிடாதே!!
காப்பியங்கள் பேசும் தலைவனாய்
காவியம் படைக்க, இன்றே விழு!விதையாய்!!
கடுகினைப் போல் விழு-மீண்டும்
விருட்சமாவாய் நீயும் மண்மேலே!!
இளைஞனே விழு!
விவேகானந்தரின் விவேகமாய் - மாவீரன்
அலெக்ஸ்சாண்டரின் ஆளுமையாய்
அண்ணல் காந்தியின் அகிம்சையாய்
பெரியாரின் பேராற்றலாய்-அறிஞர்
அண்ணாவின் அரிய எழுத்தாய் மீண்டும் எழு!
வரலாறு படிப்பவனே -விழு!விதையாய்;
வரலாறுகள் உன்னைப் படிக்கட்டும்.....
காவியம் படைக்க
காதல் மயக்கம் தவிர்த்து விழு!இன்றே,விதையாய்!
முகநூல் விடுத்து
அக ஒளி பெற
விழு!இன்றே,விதையாய்!
கவலை விடுத்து
கலைஞன் ஆக
விழு! இன்றே,விதையாய்!
சரித்திர நாயகனாய்! காவியத் தலைவனாய்!-இந்
நாட்டின் மன்னனாய்!உயர்குடி மகனாய்!
சாதனை படைத்திட இளைஞனே விழு!
இப்புவியினிலே விதையாய் விழு!!

