உயிர் நீர்

உயிர் நீர்!!!
தாளப் பறக்கும் தட்டான்களை
கண்கள் காணாது தவித்தன...
சிற்றெறும்புகள் மேடு நோக்கி போவது காண
உற்று நோக்கி காத்திருந்தோம்...
தார் சாலைகளில் கானல்நீர்
மட்டுமே மாயம் செய்தது...
காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏதும்
உருவாகிற்றா என்று
வானிலை செய்தி காண எல்லா செய்தி
அலைவரிசைகளையும் விரல்கள்
மாற்றிப் பார்த்தது...
கீச்சிட்டு ராகம் பாடும்
மழைக் குருவிகளை
காண்பதே அரிதாகிவிட்டது...
சூரியனைச் சுற்றி கரு வட்டம் ஏதும் காணவில்லை...
மாலைப்பொழுதில் செவ்வானம் ஏதும் திரளவில்லை...
வெண்மேகங்கள் எப்போது
கரிய நிறமாறும் என்று
எதிர் நோக்கி கழுத்து சுளுக்கிற்று...
கார் மேகங்கண்டு ஆண் மயில் எப்போது
தோகை விரித்து ஆடும் என்று
விழிகள் ஏங்கியது...
ஒற்றை செம்பூத்து எப்போது கூவும் என்று
காதுகளை கூர்மையாக்கிக் காத்திருந்தோம்...
இரவில் வரட்டுத் தவளைகளின் கத்தல்
ஏதும் கேட்பதே இல்லை...
உஷ்ணம் பொங்கி வியர்வை ஊற்றியது...
வறண்ட நிலத்தில் நுண்ணுயிர்கள் மடிய தொடங்கின...
உயிர் நீர் வேண்டி மரம் செடி கொடிகள் வாடியது...
யாரும் எதிர் பாராமல்
வினாடிகளில் வானம் மாற்றம் கொண்டது...
கீழ் வானில் மின்னல் வெட்டியது
இடி முழக்கம் செவிப்பிளந்தது
மேகம் பிழந்து வந்தது உயிர் நீர் பூமிக்கு
ஆனந்த தாண்டவத்தில் யாவரும்....
நன்றிகள் பல வருண பகவானே...
எழுதியவர்
Suriya Amalraj