ஆகாசப்பார்வை - ரகு

ஆகாசராயர் கோவிலில்
இரண்டுமூன்று கெடாக்களைப் பார்க்கிறேன்
கயிறுகள் நீங்கலாக
வெகுசுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
கோயிலெங்கும்

பழுப்பு நிறத்தில் கறுப்புக்கோடுகளோடு
ஆப்பிரிக்கநாட்டின் வரைபடமாய்க் காட்சிதரும்
கெடாயொன்றின் தலைநிமிர்தலில்
தெரிந்தததன் ஆஜானுபாகுவானத் தோற்றம்

வேர்பொறுக்க கிளைவலிக்க
களைந்து கொணர்ந்த இலைதழைகளும்
புல்லுக்கட்டுகளும்
வழிகளில் இரைந்துகிடக்கின்றன

அப்பாக்கள் சம்பாத்தியத்தில்
கோடிகளில்புரளும் இளைஞனின் பார்வைச்சாயல்
அசைபோடும் மும்மூறத்திலிருந்த
ஒற்றைக்கொம்புக் கெடாய்க்கு

கர்ப்பகிரஹத்திற்குள் முடங்கிய
ராயர்கையில் அரிவாள்போன்ற
ஆயுதம் எதுவும் இல்லை
தடபுடல் விருந்திற்கு
கெடாயொன்று கறியாகிக்கிடந்ததுகூடத்
தெரியுமோத் தெரியாதோ

திடீர்க் கட்டவிழ்ப்பு
மலையாய்க்குவியும் உபசரிப்பில்
யாதுணர்ந்ததோ
மிரண்டோடும் புதிதாய் வந்தக்கெடாயை
விரட்டுகிறார்கள் பூசாரியும் வேறுசிலரும்

மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரொருவர்
கோவில்மணியை சளைக்காமல்
அடித்துக்கொண்டேயிருக்கிறார் நெடுநேரமாய்

அது யாருக்கோ அடிக்கும்
எச்சரிக்கை மணியாகவேத்
தோன்றியது எனக்கு !

எழுதியவர் : அ.ரகு (9-Dec-14, 4:03 pm)
பார்வை : 88

மேலே