24 உலகுன்னைப் பார்க்க வேண்டாமா
ஏழையென்றும் இல்லைஎன்றும் சோர்ந்து விடாதே! - நீ
இரக்கத்தில் வாழ்வதற்கு ஆசைப் படாதே!
இலவசத்தை நம்பிநம்பி ஏங்கி இராதே! - நீ
ஏமாந்துன் வாழ்க்கையை நழுவ விடாதே!
கல்வியும்ஓர் ஆடம்பரம் உனது வாழ்விலே! - தினம்
கவலைஅச்சம் போராட்டம் உனது வழியிலே!
கண்கலங்கும் பெற்றோர்க்கோ வளர்க்க முடியலே! - உன்னைக்
காப்பாற்றிக் கரைசேர்க்க வழியும் தெரியலே!
பிரச்னைகள் நடுவில்நீ வளர்ந்து வருகிறாய்! - எதிலும்
பின்தங்கி ஏமாறும் நிலையில் இருக்கிறாய்!
விழித்துக்கொள் இப்போதே வாழ்க்கை உணதடா! -கொஞ்சம்
விளையாட்டாய் இருந்தாலும் எல்லாம் கனவடா!
உனக்குநீயே தாய்தகப்பன் ஆகிக் கொள்ளடா! - இந்த
உலகைப்பார்த்து உன்னைநீயே வளர்த்துக் கொள்ளடா!
அறிஞர்களின் வரலாற்றில் பாடம் கொள்ளடா! - உன்
அடிமனதில் முன்னேற்றக் கருத்தை வையடா!
வறியவர்க்கே சோதனைகள் வாழ்வில் நிரம்ப! - அதை
வலுக்கொண்டு தாங்கிவிடு காலம் திரும்ப!
அடுத்தவரைப் போலநீயும் வாழ்வில் உயரலாம்! - சற்றும்
அலட்சியமாய் இருக்காதே! மேலும் வளரலாம்!
பிறந்துவிட்ட சூழ்நிலையைக் காரணம் சொல்லி - நாட்டில்
பிழைக்கத்தெரி யாதிருப்பான் வம்சக் கொல்லி!
உனக்குக் கிடைத்தவாழ்வில் சலித்து விடாதே! - நாளை
உலகுன்னைப் பார்க்கவேண்டும் வெறுத்து விடாதே!