கன்னடத்துப் பைங்கிளிக்குக் கண்ணீர் அஞ்சலி
#கன்னடத்துப் பைங்கிளிக்குக்
கண்ணீர் அஞ்சலி😢😢😢
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி னாளே
கொள்ளை யழகுப் பைங்கிளி
வஞ்சம் வைத்துத் தூக்கி னானோ
வானு லக எமனடி..!
அபி நயத்தின் களஞ் சியமே
அவச ரந்தான் ஏனம்மா
சபிக்கி றோமே கூற்று வனை
சயன கதியில் நீயம்மா..!
கன்ன டத்துப் பைங்கி ளியே
கண் திறந்து பாரம்மா
உன்னை எண்ணி கதற விட்டு
உறக்க மின்னும் ஏனம்மா..?
அசைந்து நடக்கும் தேர் நீயே
அசை யாதிருக்கத் தாங்கல
கசை யடிதான் மரணச் செய்தி
காது வலித் தீரல..!
அழகை யுருட்டிச் செய்த சிலை
அழுகை தந்து போவதோ
பிழை செய்த எமனை எவர்
பிடித் திழுத்துக் கொல்வரோ?
நெஞ்சம் திருடிப் போன வளே
நினைவில் நின்று வாழுவாய்
கொஞ்சுங் குரல் வெள்ளித் திரையில்
கொண்டாட நீயும் வாழுவாய்..!
#சொ.சாந்தி