அச்சம் தவிர்

அச்சம் தவிர்.

அச்சமென்ன அச்சமென்ன அச்சமென்ன சொல்லடா
இச்செகத்தை வெற்றி கொள்ள அச்சந்தன்னைக் கொல்லடா..!

அச்சமென்ற சொல்லெதற்கு அதனைதுவம்சம் செய்யடா
மிச்சம்மீதம் ஏதுமின்றி வேரறுத்துத் தள்ளடா..!..!

பூலித்தேவன் வாழ்ந்த நாட்டில் புழுவின் தோற்றம் ஏனடா
பொய்யுலாவும் நாட்டினில்நீ புலியைப்போல மாறடா.. !

கோழை கோழை கோழையென்று ஓடஉன்னை ஓட்டுவார்
கொஞ்சம் நின்று நீவிரட்டக் கும்பிடுகள் போடுவார்..!

தாழ்ந்தசாதி என்று உன்னை நோகடிக்கும் ஊரடா
மனித சாதி நானுமென்று மார்நிமிர்த்திக் கூறடா..!

மூன்றுசாதி பாரில் உண்டு மூர்க்கசாதி தேவையோ
நோய்ப்பிடித்த சாதி கண்டு வாய்ப்பிடித்து மூடுவோம்..!

இந்தி மொழிப் பூச்சாண்டி இந்தத் தமிழ்நாட்டிலா..?
வீறுகொண்டு வேப்பிலையால் அந்தப் பேய்கள் ஓட்டடா..!

மூத்தத்தமிழ் மூச்சு கொண்டு வாழும்பல மொழியடா
ஏச்சுக்களை கீழடியும் ஏறிமிதிக்கும் நாளடா. !

உணவளிக்கும் நிலமழித்து சாலைகளும் ஏனடா
விளை நிலத்தை மீட்டெடுக்க இனித்தொடுப்போம் போரடா..!

வன்கொடுமை வளரும் நாட்டில் வாய்ப்பூட்டைத் திறவடா
துன்பத்திற்கு மரணம் தந்து வாய்க்கரிசி போடடா..!

விதைத்த வீரம் செழித்திருக்கும் பாவலனின் பாட்டிலே
கதைகள் பேசித் திரியாமல் அதனையேற்றுக் கூட்டிலே.!

தீக் குடித்துப் பாவடித்தான் தீர்க்கதரிசி பாரதி
தீமையெல்லாம் நடுங்கிட நீ தீப்பிடிக்கப் பாவடி..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (17-Jul-25, 3:58 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 9

மேலே