வானம் ஒரு போதிமரம்
வானம் ஒரு போதிமரம்
உலகம் பிறந்தது முதல் பாரவையாளனாக இருந்து கொண்டிருப்பது இந்த வானம் மட்டும்தான். வானம் என்பது நாம் வசிக்கும் பூமியின் மேல் நீல வண்ணத்தில் காட்சி அளிப்பது மட்டுமன்று.
நம் பூமியை போல பல்லாயிரக்கணக்கான கோள்கள், அதில் உயிர்கள் வாழ்கிறதோ இல்லையோ அது நமக்கு தெரியாது, ஆனால் அவைகளுக்கும் இந்த வானம் ஒன்றுதான்.
நாம் மேலிருக்கும் ஆகாயத்தை வானம் என்று அழைப்பது போல நம் கீழ்புறமும் இருப்பது ஆகாயம்தான். ஆனால் அவைகள் நம் பார்வைக்கு தெரியாது. காரணம் நாம் வாழும் பூமி என்பது ஒரு கோள் என்று ஒப்புக்கொள்வீர்களானால் நாம் வசிக்கும் இந்த பூமி அதாவது நிலம் கீழ்ப்புறமாய் ஒரு இடத்தில் முடிவடைத்தானே செய்யும்.
அங்கும் உயிரினங்கள் வசித்து கொண்டிருக்கலாம். அவைகளில் மனிதர்களும் இருக்கலாம் கட்டிடங்களும் இருக்கலாம். ஏன் பெரும் கடல் பரப்புக்களும் இருக்கலாம் அல்லவா?
அப்படியானால் அங்கிருக்கும் எல்லா உயிரினங்களுக்கும், வானம் என்பது இதேதானே..!
புரியும்படி சொல்வதென்றால் பூமி என்பது உருண்டை வடிவம் கொண்டது. பந்து போன்ற வடிவமைப்பு. அதில் மேல்புறம் கீழ்புறம் இரண்டும் இருக்கிறது. நடுவில் காற்று நிறைந்திருந்தாலும் மேல்புறத்திலும் கீழ் புறத்திலும் நுனி இருக்கத்தானே செய்கிறது. இரண்டுமே ஒன்றை ஒன்று சந்திக்க முடியாது. மேல் நுனி, கீழ் புறம் (அனேகமாக பந்து வளைவு வட்டமாக) இருக்கும்.
பூமி என்னும் பந்தில் மேலும் கீழும் வளைவாகத்தான் இருபக்கமும் செல்லும்
வானம்
பூமி என்னும் கோள்
வானம்
பூமியை போல பல கோள்கள், துணை கோள்கள், நட்சத்திரங்கள், இன்னும் எத்தனை எத்தனை மேலும் கீழும் பிடிமானமில்லதது போல் வானத்தில் (அண்ட வெளியில்) மிதந்து கொண்டிருக்கின்றன. அப்படியானால் வானம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்.
வானம் அப்படியே இருந்தாலும் நாம் கண்ணுக்கு தெரியும் வானமாக காட்சி அளிப்பது பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தூசியும் தும்புமான வாய்வு மண்டலம்தான். இவைகள் ஓசோன் மேற்படலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஓசோன் படலம் சூரிய கதிர்களின் கதிர் வீச்சின் வீரியங்களை நேரடி பாதிப்பை உண்டாக்காவண்ணம் பூமியின் மீது விழச்செய்கின்றன.
இந்த வாயு மூலக்கூறுகள் கதிர்களை சிதறடிக்கும்போது நீல ஒளி அலைகள் குறுகிய அளவில் இருப்பதால் அதிகமாக சிதறடிக்கப்பட்டு அதனால் பெருமளவு நீல நிறமாக வானம் காணப்படுகிறது. இதற்கு “ரேலே” சிதறல் என்று பெயர்.
இன்னொரு அதிசய தகவலும் உண்டு. நம் பூமியின் மேலிருந்து வானத்தின் எல்லை எதுவரை என்பதை அறியவே முடியாது. போகப்போக போக சென்று கொண்டேதான் இருக்கும்.
அதனால்தான் அதனை அண்டவெளி என்கிறோம். அல்லது கற்பனைக்கும் எட்டாத கோளம் என்கிறோம்.
வானத்தை தனக்கு ஞானம் தரும் போதி மரமாகவும், “நாளும் எனக்கொரு சேதி தரும்” என்று வைரமுத்து கவிதையாய் சொல்லியிருப்பார். வானம் தரும் போதி என்னவாக இருக்கும்? இப்படி ஒரு எண்ணம் வருவதாய் இருந்தால்..!
நிர்மலமாய் இரு, அதாவது எத்தனை சிக்கல்கள் வந்தாலும் வானம் ஒரே நிலையில் வெளிர் நீல வண்ணத்தில் மிளிர்வதை போல இருக்க வேண்டும் என்று சொல்கிறதோ?
பூமி தன் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு விடுவதால் வானம் நிலவுடன் உறவாடி வெளிச்சத்தை கொடுக்க நினைக்கிறது. தடைகள் வந்தாலும் உதவி செய்வதை மட்டும் நிறுத்தி விடாதே என்கிறதோ?
மேகக்குழந்தைகளை பாரமரித்து அவைகள் வயிற்றில் சுமக்கும்
நீரை பிரசவிக்க வைத்து மழையாய் பெய்விக்கிறதே.
வானம் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது. நான்குபுற திசைகளையும் தன்னுள் வைத்திருக்கும் நட்சத்திரங்களின் வழியாக நாடோடிகளுக்கு வழி காட்டவும் செய்கிறது.
வெட்ட வெளியை
வானம் என்கிறோம்
அதனுள் சுற்றி வரும்
பஞ்சு பொதிகளை
மேகங்கள் என்கிறோம்
சண்டையிட்டு
மோதி கொள்ளும்
மேகங்களின் கூச்சலை
இடி என்கிறோம்
அதனால் அழுது சிந்தும்
கண்ணீரை மழை
என்கிறோம்
மடி விரித்து காட்டும்
பொற்காசுகளை
நட்சத்திரங்கள் என்கிறோம்
இன்னும் என்னென்னவோ
அதிசயங்களை தன்னுள்
வைத்திருந்தும்
இன்றும் அவைகளை
முதலும் முடிமில்லா
வெட்ட வெளி
வானம்
என்றுதான் அழைக்கிறோம்

