பாரதம் செழிக்க வேண்டும்
நீர்வளம் தொகுக்க வேண்டும்;
=நிலவளம் பெருக்க வேண்டும்;
ஏர்வளம் சிறக்க வேண்டும்;
=எருதுகள் மலிய வேண்டும்!
சீர்வளம் காணும் வண்ணம்
=சிறப்புறு விதைகள் கொண்டு
பார்வளம் பெறும்ப டிக்குப்
=பாரதம் செழிக்க வேண்டும்!
.நிறைவளம் கொடுத்துப் பாயும்
=நித்திய கங்கை தன்னைக்
குறைவளம் உள்ள நாட்டின்
=கூறுகள் பலவற் றுக்கும்
துறைதொறும் பிரிந்து சென்று
=தூய்மையும் செழிப்பும் எங்கும்
கரைகளில் தங்கும் வண்ணம்
=காணுமோர் நாளும்வேண்டும்!
அன்பெனும் ஏரெடுத்தும்
=அவா,ஊக்கம் எருதாய்க் கொண்டும்
பன்மொழி வடத்தி னாலே
=பாரத நுகத்தில் சேர்த்தும்
தொன்மைசேர் பண்பாட் டை,நம்
=தொடர்கொழு வாகக் கொண்டும்
நன்மையிவ் வுலகம் சேர
=நடத்தி,நாம் காட்ட வேண்டும்!
====================== வாழ்க பாரதம்! வாழ்க அதன் குடியரசு ==============

