முதல் சந்திப்பு - அறிஞர் அகன் அய்யாவின் இல்லத்திலிருந்து

தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.

என் வாழ்வில் மிக பெரிய ஒரு சந்தோஷம் / மகிழ்ச்சியான சம்பவம் கடந்த ஞாயிறு அன்று
நடந்தேறியது...

அது நமது தளத்தில் அனைவரும் அறிந்த மூத்த எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான பெருமகனார் திரு அகன் அய்யாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த தினம் அது...

நீண்ட நாட்களாய் எனது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த அந்த பொன்னான தருணம் எனக்கு இவ்வளவு விரைவாக அதுவும் இந்த சிறுவனுக்கு இவ்வளவு எளிதாக கிடைத்து விடுமென்று நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது...

நான் பெங்களூரில் வசிப்பதால் எப்படி சாத்தியப் படுமென்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்கு அய்யாவின் அலைபேசி எண் கிடைத்தது.

அய்யாவின் உடல் நிலைவேறு சரியில்லை என்று அறிந்ததால் நலம் விசாரிக்கலாமே என்றுதான் முதலில் நினைத்தேன்...

பிறகு எனது முடிவை மாற்றிக் கொண்டு ஏன் நேரில் சந்தித்து பேச கூடாது என நினைத்தேன்...
அவ்வாறே புதுச்சேரிக்கு பயணச் சீட்டும் வாங்கினேன். பக்கத்து ஊர் கடலூர்தான் எனக்கு சொந்த ஊர் என்பதால் சனிக்கிழமை எனது ஊருக்கு சென்று விட்டு மறுநாள் ஞாயிறு அய்யாவிற்கு அலைபேசியில் அழைத்தேன்...
முகவரி தந்தார் கூடவே பேருந்து நிலையத்திலிருந்து வரும் வழியையும் சொன்னார்...

அவருடைய வழிகாட்டுதலின் பேரில் ஞாயிறு சரியாக மாலை 4.40 க்கு அவருடைய இல்லத்திற்கு சென்றேன்...

"வணக்கம் வாங்க தம்பி" என்று வாயிலில் நின்று இரு கரம் கூப்பி தமிழரின் முறைப்படி என்னை வரவேற்றதில் நான் திக்கு முக்காடி போனேன்...
ஏனெனில் இதுவரை நான் பார்த்ததில்லை அவரை
அவரும் என்னை பார்த்தது கிடையாது மேலும் இதற்கு முன்னாலும் பேசியது கூட கிடையாது எனினும் அவ்வாறு என்னை அவர் முக மலர்ச்சியுடன் வரவேற்றது என்னை உள்ளே அழைத்தது சந்தோசத்தின் எல்லைக்கே சென்று விட்டேன்... அதை எப்படி சொல்வது ? எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன்....

தங்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்றுதான் நான் ஆரம்பித்தேன் எனது முதல் சொற்களை அவரிடம் நேரடியாக பார்த்து...

"பரவாஇல்லை இப்போது" என்று ஒரு சின்ன இருமலுடன் பதில் அளித்தார் அப்போதுதான் அவரின் தொண்டைக் குழியில் உள்ள பிலாஸ்த்ரியைக் (bandage) கண்டேன்..

இந்த நிலைமையிலும் என்னை சந்திக்க சம்மதித்து இருக்கிறாரே என்று நினைத்து அவர் தமிழுக்கும் தமிழருக்கும் நமது தளத் தோழர் தோழமைகளுக்கும் அவர் வைத்திருக்கும் அன்பிற்கும் உள்ள நெருக்கத்தை கண்டு உருகிக் கொண்டிருந்தேன்...

நான் வாங்கி வந்திருந்த பழங்களை அவரிடம் கொடுத்தபோது "என்னை நோயாளியாகவே ஆக்கி விட்டீர்களா" என்று அவர் புன்னகைத்தபோது, என்னவொரு தன்னம்பிக்கை அவரிடம் உள்ளது என்று பிரமித்தேன்...

"வீட்டில் யாரும் இல்லை தம்பி... மகனும் மனைவியும் வெளியே சென்றுள்ளார்கள். தனியாகத்தான் இருக்கிறேன்" என்று சொல்லியாவாறு தேநீரை கொடுத்தார்.

தனியாக இருப்பவர் கையில் எப்படி இவ்வளவு சூடாக தேநீர் வந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே...
"சூடு சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். தங்களுக்காக நானே போட்ட தேநீர்" என்று அவர் சொன்ன போது தேநீரை விட மிகவும் சூடாகிப் போனது எனது இதயம்...

இந்த நிலையிலும் எனக்கு தேநீர் போட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார்களே என்று நினைக்கும் போது அவர் அன்பிலும் நேசத்திலும் அதிசயித்து நின்றேன் அந்த தருணம்....

பிறகு தேநீரை அருந்தியவாறு பேசத் தொடங்கினோம்...

அய்யாவின் பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போனேன் என்பதை விட அசந்து போனேன் என்று சொன்னால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்....

சங்க இலக்கியம் தொட்டு சரித்திர இலக்கியம் தொட்டு
உலக இலக்கியம் தொட்டு இக்கால இலக்கியம் வரை அலசி ஆராய்ந்து அவர் தரும்
விளக்கங்களும் வரிகளின் எடுத்து காட்டுகளும் என்னை பிரமிக்க வைத்தது...

நம் தளத்தில் தவழும் கவிதைகளைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றியும்
அவர் எடுத்து சொன்ன விதம் எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியது...

இத்தனை வேலை பளுவுக்கு இடையேயும்
இத்தனை உடல் நிலை பிரச்சனைகளுக்கு இடையேயும்
ஓயாமல் நம் தளத்திற்காகவும் தமிழுக்காகவும் அவர் எப்படி எல்லாம்
ஓடிக் கொண்டிருக்கிறார் என நினைக்கும் போது அவருக்கு நான் உண்மையில் சிஷ்யனாகிப் போனேன் என்றே சொல்வேன்....

அவருக்கும் தமிழின் மா மேதைகள் பல பேருக்கும் உள்ள நெருக்கத்தை
அவர் விவரித்தபோது நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்ததை கனவா நிஜமா என கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்....

அவர் எத்தனை நூல்கள் எழுதி உள்ளார்...
எத்தனை இதழ்கள் நடத்தி உள்ளார்
அதுவும் எவ்வளவு பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து
சிற்றிதழ்கள் நடத்தி உள்ளார் என்று அறிந்து கொண்ட போது
இவ்வளவு பெரிய மனிதரிடமா நாம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்
என்று மயக்கம் வந்தது எனக்கு...

சுமார் மூன்று மணி நேரம் நீண்டிருந்த எங்கள் சந்திப்பு
பெங்களூர் பேருந்து நேரம் நெருங்கியதை உணர்ந்து நான் புறப் பட தயாரானேன்....

அப்போது நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப் படம்தான் அது (இந்த கட்டுரையில் இணைத்துள்ள புகைப் படம்)

புறப் படும்போது அவர் ஏகப் பட்ட நூல்களை எனக்கு அளித்தார்
அதில் அவர் எழுதிய நூல்களும்
நம் தளத் தோழர் தோழமைகள் எழுதிய படைப்புகளின் தொகுப்பும் அடங்கும்...

மேலும் அவர் தன் சொந்த பணத்திலிருந்து ஒரு தொகையை எனக்கு பரிசாக அளித்து
என்னை வாழ்த்தியபோது கண்ணீரே வந்து விட்டது எனக்கு...

இதுவரை நான் பெற்ற பரிசு பொருட்களிலேயே மிக உயர்ந்ததாக கருதுகிறேன் அதை...

ஒரு தமிழனுக்கும் தமிழுக்கும் அவர் தரும் ஊக்கத்தைக் கண்டு நாமும் இப்படிதான்
வாழ வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டேன் அப்போதே...

இப்படிப் பட்ட நல்ல உள்ளம் படைத்த மா மனிதர்கள் நம்மை தளத்தின் மூலமாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்களே என்று எண்ணும்போது மிக பெருமை அடைகிறேன் தமிழனாகவும் இந்த தள உறுப்பினராகவும்....

இப்படிப் பட்ட நல்ல மனிதரின் நேசம் கிடைக்க காரணமான இந்த தளத்திற்கும் எனது நன்றியினை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்....

அய்யாவை போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் நீண்ட காலம் வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

என் போன்ற ஒரு சாதாரண தள உறுப்பினரையும் சந்தித்து, உபசரித்து, பரிசளித்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்த பேரறிஞர் திரு அகன் அய்யாவிற்கு வாழ்த்துகளையும் நன்றியையும்
என் சார்பாகவும் தளத் தோழர் தோழமைகள் அனைவரின் சார்பாகவும் சொல்லிக் கொள்கிறேன்...

இந்த சந்திப்பு எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன்...

ஐயா அவர்கள் நம்மை எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பை
ஏதோ நிகழ்ச்சியின் வாயிலாக ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கையோடு
உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் இப்போது...

வாழ்க தமிழ் !
வளர்க தமிழர்கள்!!

எழுதியவர் : ஜின்னா (4-Feb-15, 1:00 am)
பார்வை : 266

சிறந்த கட்டுரைகள்

மேலே