சென்னை சென்ட்ரல் - 555 - பாகம் 2 - சந்தோஷ்

சற்று உயரம் பறந்த சாம்பல்புறா மதிய வெயிலின் அனலை தாங்காமல் ஓய்வுக்கு மரத்தை தேடியும் கிடைக்காமல் மீண்டும் சென்ட்ரல் இரயில்நிலையம், நடைமேடை எண்கள் 3,4, 5 க்கு முன்புள்ள பயணிகள் காத்திருக்கு பகுதிக்கு இளைப்பாற வந்தது. முதலில் ஒரு ஒலிப்பெருக்கி மீது அமர்ந்த கீழே நோக்கியது.
அங்கு,
கிறிஸ்டோபரை, ஒரு காவலர் சோதனை செய்கிறார். சற்று நொடிகளுக்கு பிறகு அவன் மிரட்டப்டுகிறான்.
“ சார்! என்கிட்ட எதுவுமில்ல. இது லேப்டாப். இது ஹார்ட் டிஸ்க்.” கிறிஸ்டோபர் பதறுகிறான்.
“ ஹார்ட் டிஸ்க்கா இருக்கட்டும். முதல்ல கொடு, பாக்ஸ்லா என்ன இருக்குன்னு பார்க்கனும்.”
எச்சரித்த காவலர், அவனது மடிக்கணினி பையை பறிக்க முயலுகிறார்.
“ மிஸ்டர். அதுல பாம். இருக்கு டச் பண்ணாதீங்க. வெடிச்சிடும்..” இப்போது கிறிஸ்டோபரின் மிரட்டல்.
காவலரின் சமயோசித ரகசிய குறியீட்டு பாஷையில் கிறிஸ்டோபரை பல காவலர்கள் முற்றுகையிட்டு, கையை பின்னால் கட்டி, பத்தாவது பிளாட்பாரத்தில் இருக்கும் வெடிக்குண்டு சோதனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
சாம்பல் புறா... கிறிஸ்டோபரின் முதுகை நோக்கிவாறு அவன் பின்னால் செல்கிறது. கிறிஸ்டோபர் வெடிக்குண்டு சோதனை கூடத்திற்கு சென்றபின்.. அது 10 வது பிளாட்பாரத்தின் மேற்புற விளம்பரபலகையில் அமர்ந்து அங்கிருக்கும் மற்றொரு பயணிகள் காத்திருப்பு பகுதியை முழுவதும் அலசி பார்க்கிறது.
அப்போது நேரம் மதியம் 2 : 00 மணி.
அங்கு,
வெள்ளை டாப்ஸ் மற்றும் கருப்பு லெக்கின்ஸ் உடை அணிந்திருக்கும் கீதா, சற்று பதட்டத்துடன் காணப்படுகிறாள். அவளுக்கு அருகே இரு காதலர்கள் பேசிக்கொள்கின்றனர்.
“ ஹே யாரு பார்க்கமாட்டாங்க.. ஒரே ஒரு கிஸ் தான்டி.. ஊருக்கு போயிட்டு வரைக்கும் தாங்கனும்பா. ப்ளீஸ்”
காதலன் காதலியிடம் கெஞ்ச... அவள் மிஞ்ச.. ஒரே சில்மிஷம்.... சடாரென்று கீதா
“ அட கொடுத்து தொலையடி... சும்மா நொய் ய்ன்னுட்டு.. இவங்க இம்சை தாங்கல சாமி ”
கீதா வெறுத்தப்படி பேச.. அந்த காதலனின் காதலி...
“ ஹலோ உங்க வேலைய பாருங்க... பெரிய கண்ணகி மாதிரி பேச வந்துட்டா ? “ என்ற அந்த காதலியை சற்று நக்கலாக பார்த்த கீதா...
“ கண்ணகி துப்பாக்கி வச்சிருப்பதை பார்த்து இருக்கீயா ? . இங்க பாரு... ” தனது லெக்கின்ஸ் உடையில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து காட்டுகிறாள்.
அந்த காதல் ஜோடியின் ரியாக்ஷன் இப்போது “ ஆ ஆ ஆ ஆ ”
-----------------------------------------
சாம்பல் புறா.. மெலிதாக சிறகையடித்து பறந்து சென்று நிலையத்திற்கு அருகிலிருக்கும் RPF அலுவலக ஜன்னலோரத்தில் அமருகிறது. ஜன்னல் வழியே.......
நிஷா...! நாற்காலியில் கட்டப்பட்டிருக்கிறாள். போலிசாரால் பலமாக அடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவளருகில் ஒரு மகளிர் போலீஸ், வாட்டசாட்டமாக.
செல்போன் சிக்கனலை தடுக்கும் ஜாமர் மூலம் நிஷாவிற்கும் மற்ற நால்வருக்குமான தொடர்பு துண்டிக்க செய்தது நுண்ணறிவு போலீசார். இதனையடுத்து நிஷா.. பலமாக கவனிக்கப்பட்டாள். ஆனாலும் ஏதும் சொல்லாமல் இருந்தவளை இந்த பெண் இரயில்வே போலிஸ் எஸ்.ஐ பலமாக விசாரணை செய்து உண்மை வெளிக்கொணர முயலுகிறார்.
நேரம் மதியம் 2 :20 :
” என்னடி ரொம்ப திமிரா பார்க்கிற? உன்கூட வந்தவங்கல ஒருத்தன் மாட்டிகிட்டான். ? இன்னும் 3 பேரு தான்...” என்ற பெண் எஸ்.ஐ யை நோக்கி
வாயில் இரத்தம் வழிந்த நிலையில் நிஷா “ ஓ இன்னும் 3 பேரு இருக்காங்களா ? அதுபோதுமே.. “
“கொழுப்பு ம்ம்.. நீ விஷூவல் கம்யூனிகேசன் படிச்சிட்டு. டிவி நியூஸ் சேனல் ரிப்போர்ட்டரா வேல பார்க்கிற. உன் அப்பா அம்மா பெங்களரூல இருக்காங்க. உனக்கு ஒரு காதலன் இருக்கான். அவன் இப்போ சென்னையில தான் இருக்கான். அவன் பேரு கார்த்திக். சரியா. ? அவனை டிரேஸ் பண்ணிட்டு இருக்கோம். பெங்களூர்ல உன் பேரண்ட்ஸ் அரெஸ்ட் பண்ண இன்பார்ம் அனுப்பியாச்சு. சோ உன்ன பத்தி எல்லா டீடெயிலும் கலெக்ட் பண்ணிட்டோம், நீ இங்க குண்டுவெடிச்சாலும் வெடிக்காட்டியும் நீ தப்பிக்க முடியாது மிஸ். நிஷா பானு “
“ யப்பா ப்ரிலியெண்டுங்க. தமிழ்நாட்டு போலீஸ் சும்மாவா ? .இன்னும் ஒரு இன்பர்மேஷனும் உங்களுக்கு வரலையா.. ? வந்து இருக்கனுமே....
அட அங்க பாருங்க மாம்ஸ் ஓடி வர்ரார் நம்மகிட்டதான் வருவார்... மாம்ஸ் செம அழகுல... ஆண்டி...”
பெண் எஸ்.ஐ நோக்கி ஒடிவந்த ஒரு காவலர்.. பதட்டத்துடன்
“ இவள விடணுமாம். இல்லன்னா.. பயங்கரமா குண்டுவெடிக்குமுன்னு ஒரு மிரட்டல் வந்திருக்கு. ஐ.ஜி சொல்ல சொன்னார். ”
நிஷா இப்போது.. “ உ ஊ... கார்த்தி செமடா.. ஷார்ப்பா ஒர்க் பண்ணுறடா செல்லம்.
மேம்... அட மேம் உங்களதான். கட்ட அவுத்துவிடுங்க.. இடுப்புலாம் வலிக்குது... “
“ ஏய் .... இரு.. கார்த்தியும் இதுல இருக்கானா ? “ எஸ்.ஐ. கட்டை அவிழ்த்தவாறே கேட்கிறார்.
“ ஆமா.. அவன் என் லவர் பா.. அவன் ஆளு நானு. என்னை அடிச்சா சும்மா இருப்பானா. .. சரி சரி ஆண்டி.. லவ் மேட்டர பத்தி அப்புறம் பேசலாம். முதல்ல டிமாண்ட்ஸ் என்னான்னு சொல்லனும். வழி விடுங்க.. ஐ.ஜி அங்கிள் எங்க இருக்கீங்க.... அங்கிள் அங்கிள்... “ படு நக்கலாக கத்திக்கொண்டே மாநில காவல்துறை ஐ.ஜி இருக்கும் அறைக்கு செல்கிறாள்.
அங்கு, ஐ.ஜி யை நோக்கி நிஷா.
“ ஐ.ஜி அங்கிள்! இதுதான் டிமாண்ட்ஸ்.. பிரைம் மினிஸ்டருக்கு போன் போடுங்க. அவர்கிட்ட பேசனும். ”
“வாட்.. பி.எம் கிட்டயா ? அதுவும் நீ நேரடியா..... “
“ஏன் நான் பேசினா பி,எம் பேசமாட்டாராம்... அட போன் போடுங்க சார். “
“இல்ல அவர் இல்ல. பாரீன் டூர் போயிட்டார் ”
” அச்சோ.. ம்ம்ம்... அப்போ தமிழ்நாடு சி. எம் க்கு போன் போடுங்க. “ நிஷா.. ஏதோ ஒரு முடிவுடன் கேட்க ..
ஐ. ஜியின் கண்கள் விரிகிறது.
“ என்னமா.. விளையாடுறீயா........... ம்ம்ம்ம் ? “
“ ஒ ஒ .. உங்க கவல எனக்கு புரியது. தமிழ்நாட்டுல எந்த சி.எம் க்கு கால் பண்ணுவதுன்னு புரியல இல்ல.. நான் பேசறது
ஆட்சில இருக்கிற முதல்வர்கிட்டயா.. இல்ல
ஆட்சில இருக்கிற முதல்வரை ஆட்டிகிட்டு இருக்கிற முதல்வர்கிட்டயான்னு தானே உங்க குழப்பம்.. ? ம்ம்ம் ஹா ஹா.. ஆட்சில இருக்கிற முதல்வர்கிட்டயே பேசுறேன். அவர்தான் நமக்கு லாயிக்கு...”
“லுக் நீ ரொம்ப பண்ணுற.. டிமாண்ட்ஸ் என்கிட்ட சொல்லு . அத யார்கிட்ட சொல்லனுமோ அந்த வேலயா நான் பார்த்துக்கிறேன். ”
“ ஒ ஒகே சார்... கோவப்படாதீங்க
கோரிக்கை நம்பர் 1 : ஆல் இந்தியாலயும் சிகரெட் விற்பனை தடை செய்யனும். இது அடுத்த ஒன் ஹவர்ல நடக்கனும். டிவில கவர்மெண்ட் அறிவிச்சதா Flash News வரணும். இல்லன்னா.. பாம் பிளாஸ்ட் நிச்சயம்.
கோரிக்கை நம்பர் 2 : தமிழ்நாட்டுல இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளும் உடனே மூடனும். கல்வித்துறை முற்றிலும் கவர்மெண்ட் கட்டுப்பாட்டுல இருக்கனும். கல்வி வியாபாரமா எந்த தனியாரும் செய்யக்கூடாது. இதற்கான அரசாணை உடனே போடணும். . இது அடுத்த 1 மணி நேரத்தில நடக்கனும். இல்லன்னா பாம் வெடிப்பது நிச்சயம்.
அப்புறம் ஒரு இலவச இணைப்பா ஒரு கோரிக்கை.. 4 : 55 க்கு எங்களுக்கு ஒரு இன்னோவா கார் ஸ்டேஷன் வாசல்ல நிக்கனும்.. “
ஐ.ஜி வியந்து பார்க்கிறார் நிஷாவை.. “ நீங்கலாம் யாரும்மா.................? இப்படி ஒரு டிமாண்ட்ஸ் எதிர்பார்க்கவே இல்ல. “
“ சார் ப்ளீஸ் ஏற்பாடு பண்ணுங்க இப்போ டைம் 2 : 55 . இன்னும் 2 ஹவர்ஸ் தான் இருக்கு. “
பரப்பரப்படைகிறது இந்தியா.......................!!
உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சிகரெட் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் மத்திய மந்திரி ஒருவர்.
தமிழகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்திலிருந்து காவல்துறை ஐ.ஜிக்கு ஒரு தகவல் அனுப்படுகிறது.
சாம்பல் புறா.........இப்போது அமைதியாக 3 ம் எண் நடைமேடைக்கு எதிரே வந்து அமர்கிறது. அங்க மிக அகண்ட திரையில் விளம்பரம் ஒளிபரப்பி ஆகிகொண்டிருக்க. அதன் அருகில் வெள்ளை டாப்ஸ் கருப்பு லெக்கின்ஸ் அணிந்த கீதா.. ஒர் ஆடவனுடன் எதோ பேசிக்கொண்டிருக்கிறாள். அவன் மெளனமாக கையிலிருக்கும் டச் போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறான். இருவரும் பதட்டமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பதை சந்தேகப்பட்ட ஆர்.பி.எப் அவர்களை வலுக்கட்டயமாக அழைத்து செல்கிறது.
புறா இப்போது மேலெம்பி 7ம் எண் நடைமேடைக்கு பறந்து அங்கிருக்கு சாய்வுநாற்கலியில் அமர்கிறது . அதன் விழிப்பார்வையில் ஒரு பெட்டி. அதன் அருகில் யாரும் இல்லை. அப்பெட்டியில் “ T.W " என்று எழுதப்பட்டிருக்கிறது. மீண்டும் சாம்பல் புறா... நடைமேடை எண் 10 க்கு பறந்து சென்று அங்கிருக்கும் ஒரு இரயிலின் காலி பெட்டிற்கு உள்ளே செல்கிறது. அங்கு இளவேந்தன்.. ஒரு தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் அருகில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஒரு மொபைல்.
NSG எனும் தேசிய பாதுகாப்பு படை. ஆயுத்தமாக இருக்கிறது . எந்நேரமும் . எந்த அசம்பாவிதம் நடந்தாலும் பொதுமக்களை பத்திரமாக பாதுகாக்க தயார் நிலையில். வெடிக்குண்டு சோதனையாளர்கள் தீவிரமாக சோதனை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
நேரம் இப்போது மதியம் 3 :05
சாம்பல் புறா.. மீண்டும் நிஷா இருக்கும் R.P.F அலுவலக அறையின் வாசல் அருகே இருக்கும் ஒரு தூணில் வந்து அமர்கிறது. அதன் விழி உள்ளே கண்ணாடி அறையினை தாண்டி நோக்குகிறது.
அங்கு,
மாநில காவல்துறை ஐ.ஜி நிஷாவிடம்
“நிஷா.........! ஸ்டேட் அண்ட் சென்ட்ரல் கவர்மெண்ட்ஸ் உங்க கோரிக்கை பரிசலீனை பண்ணுவதா உறுதி சொல்லி இருக்காங்க. பட் உடனே இன்னிக்கே முடியாது. அதற்கான சட்ட முன்வடிவுலாம் இயற்றனும் சொல்லியிருக்காங்க. சோ.... உறுதி தந்து இருக்காங்க. இதை நீங்க நம்பி.............”
“ உறுதியாம் உறுதி மண்ணாங்கட்டி. சார். நாங்க தப்பு பண்ணிட்டோம். படுபயங்கர தீவிரவாதிங்களை விடுதலை பண்ணுங்கன்னு மிரட்டி இருக்கனும். சாரி சார்.. ஒரு கால் பண்ண வேண்டி இருக்கு .. எனக்கு இங்க செல்போன் சிக்னல் கிடைக்கல. செல்போன் ஜாமர் டிஆக்டிவேட் பண்ணுங்க . ” பயங்கர ஆத்திரத்துடன் நிஷா.
“ சாரி முடியாது........... ஆல்ரெடி உன் கூட வந்தவங்கல கிறிஸ்டோபர், கீதா, உன் லவர் கார்த்திக் ஆகிய 3 பேரை அரெஸ்ட் பண்ணியாச்சு. இன்னும் ஒரு ஆள்தான் அவனும் மாட்டிடுவான். பாம் டிரேஸ் பண்ணிட்டு இருக்கோம். “ ஐ. ஜி சொல்லிக்கொண்டிருக்கும் போதே
நடைமேடை எண் 9 இல் ஆளில்லாத ஒரிடத்தில் வெடிச்சத்தம் கேட்கிறது. வெடிக்க செய்தது இளவேந்தன்.
சாம்பல் புறா திடுக்கிட்டு அங்குமிங்கும் சிறகடித்து பயத்துடன் பறக்கிறது. அதன் பார்வையில்
அலறுகிறது சென்னை சென்ட்ரல்..............!!
( தொடரும் )
-இரா.சந்தோஷ் குமார்