தங்கத் தண்டு ----பாகம் 18 ----------- மர்மத் தொடர்
நரேன் மேல் தன் உடம்பு அழுந்த படுத்திருந்தாள் ரிது ! அறைக்குள் ஒரே ஒரு ஜன்னல் வழியாக வெளிச்சமும் குளிர்காற்றும் வந்து கொண்டிருந்தது. நரேன் ஜன்னல் கதவை முழுதும் சாத்தினான் !
அறைக்குள் புழுக்கம் அதிகரித்ததால் ரிது அவனை விட்டு விலகி கட்டாந்தரையின் சில்லிப்பை விரும்பி அங்கு சென்று படுத்துக் கொண்டாள் !
தனக்கு மட்டும் காற்று வரும்படி லேசாக ஜன்னலை திறந்த நரேன், கன்னத்தை துடைத்துக் கொண்டு வசதியாகப் படுத்துக் கொண்டான்.......... அவன் மனிதன்தானே?
விடிந்தது.
ரிதுவின் தாயார் ரிது “போன மேனிக்கு” திரும்பி வந்தது கண்டு கண்கள் விரிய ஆச்சரியப்பட்டாள். அடுத்து “ நான் சந்தோஷப்படவா? துக்கப்படவா? ” என்று கண்ணீரோடு கையைப் பிசைந்தாள்! பிறகு கேட்டாள், “ பலி பீடத்தில போய் அனாதையா சாகிறதுக்கு ரிது, அம்மா கொஞ்சம் கஞ்சி காய்ச்சித் தர்ரேன்; அத குடிச்சுட்டு அம்மா மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கறியா? ” ரிது சரியென்றதும் தாய் ஏதோ செடியைப் பறித்தாள். அந்த நேரம் நரேன் வந்தான். அந்த தாய் நரேனைப் பார்த்த பார்வையில் அப்படி ஒரு மரியாதை!
“அம்மா என்ன பண்றாங்க? ” ரிதுவிடம் கேட்டான் நரேன்.
“அம்மா கஞ்சியில விஷம் கலந்து எனக்குக் கொடுக்கப் போறாங்க! ” சலனமற்று சொன்னாள் ரிது.
ரிதுவுக்கு தாய் சொல் வேதம் !
ஒரு நிமிடம் அதிர்ந்த நரேன் ரிதுவின் தாயிடம் பேசினான். பலியாகப் போவது ரிதுவா? அவன் இருக்கும் வரை அப்படி நடக்காது! பிறகு சுதாரித்தான்! ஒரு லாவண்யா இறந்தது போதும்..... !
“ உங்களுக்கு மகன் உண்டாம்மா? ” ரிதுவின் தாயிடம் நரேன் கேட்டான்..
இல்லை என்று தலையசைத்தாள் தாய்.
“ என்னை உங்கள் மகனா நினைச்சி என் தங்கையை என் கூட அனுப்பி வைக்கிறீங்களா? ”
அந்த தாய் அவ்வளவு சந்தோஷத்துடன் நரேனை நெட்டி முறித்தாள். தலையைப் பிடித்திழுத்து நெற்றியில் முத்தமிட்டாள். அந்த ஸ்பரிசம் நரேனுக்கு ஒரு புது சக்தியைக் கொடுத்தது. ரிதுவின் தாய் ஓடிப் போய் ஒரு குத்தீட்டி எடுத்து வந்து கொடுத்தாள். தோள் பையில் துணியில் சுற்றிய தோசைக்கல் அளவு பச்சை கற்பூரத்தையும், தீப்பெட்டியையும் வைத்து ரிதுவின் தோளில் மாட்டினாள்!
நரேன் நேரத்தை வீணடிக்கவில்லை. அவனிடம் ரிவால்வர் இருந்தது ! ரிதுவையும் அழைத்துக் கொண்டு, குத்தீட்டியையும், ரிவால்வரையும் பயன்படுத்தி யாரையும் கொன்று விடாமல் தாக்குவதும் ஓடுவதுமாக இருந்தான்! அகோரிகள் விடாமல் துரத்தினார்கள்.
“ நரேன் நில்லு! ” ரிது அழைத்தாள். “ இந்தப் பச்சை கற்பூரத்தை துணியோடு கொளுத்தி, அதோ தெரியுதே, அந்த கஞ்சா செடி மேல போடு! காத்து அந்தப் பக்கம் வீசுது! இப்ப போட்டா சரியா இருக்கும்! துரத்தி வர்றவங்க மயக்கமாயிடுவாங்க ! ”
அப்படியே செய்தான். புகை கருந்திரையென எழும்பியது!
இருவரும் கை கோர்த்துக் கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள்!
மலைச்சரிவிலிருந்து உருண்டு புரண்டு கீழே விழுந்த அவனை ஒரு கரம் தூக்கி நிறுத்தியது - அந்தரீஸ் !
சுதர்சனா ரிதுவை அழைத்து வந்தாள்.
“அந்தரீஸ்! ” கட்டித் தழுவினான் நரேன். “ உனக்கு ஒண்ணும் ஆகலியே? ”
அந்தரீஸ் சுதர்சனா வந்து கொண்டிருந்த திசையை பிரமிப்பு அகலாமல் பார்த்தபடி சொன்னான், “ மேடம் இருக்கறப்ப எனக்கு என்ன சார் ஆகும்? ”
சுதர்சனாவை பிரியமாகப் பேர் சொல்லிக் கூப்பிடுகிற அந்தரீஸ் இப்போது என்ன மேடம் என்கிறான்? நரேன் கவனித்தான்; எதையும் கேட்கவில்லை. சுதர்சனா இல்லாத நேரம் அவனே சொல்லுவான்.
நீருக்கடியில் மூச்சுப் பிடிப்பதே கஷ்டம்! அவ்வளவு நேரம் மூச்சுப் பிடித்து, மூச்சு கொடுத்து உயிரைக் காப்பாற்றி நாடித் துடிப்பையும் கட்டுக்குள் வைத்திருந்த சுதர்சனாவை பிரமிக்காமல் என்ன செய்வது?
“ சார், உங்க கூட இன்னும் யாராவது வந்திருக்காங்களா? ” ரிதுவை பார்த்தபடி கேட்டான் அந்தரீஸ்.
இல்லை என்ற நரேன் நடந்ததை விவரித்தான். அவனும் ரிதுவும் தனியறையில் தங்க நேர்ந்ததை அந்தரீஸிடம் சொல்லவில்லை!
“ உங்களை ஏன் சார் அடைச்சி வச்சாங்க? உங்க மேல ஏதோ நல்ல வாசம் வருதே? ” அந்தரீஸின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நரேன் சிரித்தான். அந்தரீஸிடம் எதையும் மறைக்க முடியாது!
லாவண்யாவின் மறைவுக்கு அப்புறம் நரேன் முதன் முதலாகச் சிரித்து அந்தரீஸ் பார்த்தான். அது இன்னொரு சூரியோதயமாய் இருந்தது..!
“ரெண்டு பேரும்... ”- நரேன் ஆரம்பித்தான்.
“ஒரே ரூம்ல படுத்துத் தூங்கினீங்களா? ”
“இல்லப்பா, ஒரே கட்டில்ல... ! ஏய், நீ வேற அந்தரீஸ் ! அவ என் தங்கச்சி ! ”
“ உங்க தங்கச்சி எனக்கும் தங்கச்சிதான் ” என்றவன் ரிதுவைப் பார்த்தான். கையில் மந்திரக்கோலுடன் காட்சியளிக்கும் தேவதைப் பெண்களைப் பற்றி அவன் தாய் வர்ணா கதை சொல்லியிருக்கிறாள்... மந்திரக்கோலே பெண்ணாக வந்தால்...? ரிது அவன் கண்ணுக்கு அப்படித்தான் தெரிந்தாள்.
“ஆனா சார், உங்க இடத்துல நான் இருந்திருந்தா ஒரு தங்கச்சியை சம்பாதிச்சிருக்க மாட்டேன்! நீங்க கிரேட் சார்! ” காதோடு கிசுகிசுத்தான்.
நரேன் சிரித்தான், “ சே, வளர்ந்த குழந்தைப்பா அவ! உன் இடத்துல நான் இருந்திருந்தா மூச்சடக்க முடியாம செத்திருப்பேன்! ”
“ ஐயையோ! அப்படி மட்டும் சொல்லிடாதீங்க.. சுதர்சனா மேடம் இருக்கற போது அப்படி நடக்க சான்ஸே இல்லை. கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத பெரிய கை சார் அது! அவங்க எங்கம்மாவுக்கு சமானம்!”
“அப்படி என்னதான் செஞ்சாங்க? ”
இப்போது அந்தரீஸ் சிரித்தான்.
“ஸாரி சார், இப்பத்தான் உங்க நிலைமை எனக்குப் புரியுது. ஆணும் பெண்ணுமா இருந்து உடம்போடு உடம்பு மோதுனா அது ஒரே விளைவைத்தான் ஏற்படுத்தணுமுன்னு ஒண்ணும் கிடையாது. நோக்கம், பாவனை, சூழ்நிலை இப்படி எவ்வளவோ இருக்கே? ”
“யார் இல்லைன்னா? அதத் தான் நான் உங்க வீட்டு பூஜையறையிலேயே பார்த்தேனே? ”
“போங்க சார் ” அந்தரீஸ் வெட்கினான். “மேடம்தான் என்னுயிரை காப்பாத்தினாங்க”
“ஏன் அந்தரீஸ், காதலி உயிரை காப்பாத்த மாட்டாளா? ”
“கண்டிப்பா... ஆனா காப்பாத்துனவங்க எல்லாம் காதலியாக மாட்டாங்களே? ”
“ஏதோ தெளிஞ்சிட்டீங்க.... ”
இப்படி ஆசை ஆசையாக ஒருவரையொருவர் வாரிக் கொண்டனர். காரணம், மறுபடி பார்ப்போமா இல்லை, போய்ச் சேர்ந்து விடுவோமா என்ற நிலைமையிலிருந்து தப்பித்து வந்தவர்கள் இல்லையா இருவரும்?
சுதர்சனாவும் ரிதுவும் அவர்களை நெருங்கி வரவும் ஆண் பிள்ளைகளின் ரகசியப் பேச்சு நின்றது. நரேன் பேச்சை மாற்றினான். “ அந்தரீஸ் ! விக்டர் மார்ஷல் இப்ப இந்த மலையில இல்லைங்கிறது என் யூகம் ” என்றான் .
“ அம்பல சித்தர் குகையைப் போய் பார்த்தா தெரிஞ்சிடும் சார் ”
“சித்தர் சாமி குகையா? எனக்குத் தெரியுமே? ” ரிது வழி காட்டி முன் நடக்க, தொடர்ந்தனர் மூவரும்.
சுரமுனீசுரர் சுனையின் உற்பத்தி ஸ்தானம் வந்தது. பிறந்த பச்சைக் குழந்தை கை கால்களை ஆட்டுவது போல நீர்த் திவலைகளை சிதறடித்துக் கொண்டிருந்தது சுனை. “இங்கேதான் படையல் போடுவோம்” நின்று விட்டாள் ரிது.
அவளை பூப்பறிக்க அனுப்பி வைத்தான் நரேன். “பூப்பறிச்சி மாலையாக்கி கொண்டுட்டு வா. பத்திரம்! ரொம்ப தூரம் போயிடாதே! ”
“அந்தரீஸ் ! சுதர்சனா! வாங்க, குகையைத் தேடுவோம்! ”
செங்குத்து மலையின் ஒரு பக்க புடைப்பில் சுரமுனீசுரர் சுனை உற்பத்தியானது. அதிலிருந்து தேடினார்கள். அங்கிருந்து பத்தடி தூரத்துக்கு ஏதோ பலகையை சரித்தாற் போல் பாறை. வழுக்குப் பாசிகளும், மண்ணும் புதருமான அந்த இடத்தை சின்னக் கோடரியால் லேசாக வெட்டியபோது படிகள் தெரிந்தன!
“விக்டர் மார்ஷல் இங்க வந்த மாதிரி அறிகுறியே இல்லையே? ” என்றான் நரேன்.
“ மேடம் ! படிகளை எக்ஸ்போஸ் பண்ண வேண்டாம் ! ” என்றான் அந்தரீஸ். “ சார் இந்தப் படிங்க முடியற இடத்துக்கு கயிறு கட்டிப் போயிடலாம். படிகள் வெளிய தெரிஞ்சா ரசவாத ரகசியம் வெளியே தெரிய வாய்ப்பு அதிகம். அதனால பிரசினைகள் வரும்.. யாருக்கும் தெரிய வேணாங்கிறதுக்குத் தானே நீங்க ரிதுவை அனுப்பி வச்சீங்க? ”
அப்படியே செய்தார்கள்.
மலையின் மத்தியில் இரண்டு பேர் நிற்கக் கூடிய சமதளம் வந்தது. அந்த இடத்து பாறைப் பகுதியை தட்டித் தட்டி ஓரிடத்தில் நெம்ப, ஒரு ஆள் புகுமளவு இடைவெளி கிடைத்தது !
உள்ளே நுழைந்த மூவரும் பிரமித்தார்கள் !
அறுங்கோண வடிவில் இருந்தது குகை. குகைக்குள் புகுந்து வெளியே சென்ற காற்று ஓம் என்ற நாதத்தை உண்டாக்கியது. மண் வாசனையா, மூலிகை வாசனையா என்று ஊகிக்க முடியாத நல்ல வாசம். சில்லென்ற தரை.
அம்பல சித்தர் படுத்திருந்த பாறைப் பலகை!
சுதர்சனா ஓடிப் போய் மண்டியிட்டாள். உணர்ச்சிப் பெருக்கை முகம் காட்ட, பயபக்தியோடு வணங்கினாள். அந்தரீஸும் நரேனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களும் வணங்கினர்.
சுதர்சனா சில ஓலைச் சுவடிகளையும் மூலிகை கற்களையும் எடுத்துக் கொண்டாள். பாறையை பழையபடி பொருத்தி, வந்த சுவடு தெரியாமல் மீண்டனர்.
மூவருக்கும் ஒரே கேள்வி..............
விக்டர் மார்ஷலின் ஒரே நோக்கம் ரசவாத ரகசியம்தான். அது பத்திரமாக இருக்கிறது; அம்பல சித்தர் குகைக்கு மட்டுமல்ல; இரண்டு மலைகளுக்கிடையில் அவன் வந்ததற்கான அறிகுறியே இல்லை ! ஆனால் தனகிரிக்கு வந்திருக்கிறான்; காட்டுவாசிகளை கொன்றிருக்கிறான் ! ஏன்? இப்போது எங்கிருக்கிறான்? என்ன ஆனான்?
தொடரும்