சினிமா என்னை அறிந்தால்
ஒரு மெல்லிய கோடு... அந்தக் கோட்டுக்கு அந்தப்பக்கம் மாஸ் ஹீரோ, தமிழகத்தின் கிராண்ட் ஓப்பனிங்க் ஸ்டார், ரசிகர்களின் தல என மாஸாக பயணித்திருந்தால் எதிர்பார்ப்புக்களை பொடித்துத் தூளாக்கிய பில்லா-2 போல காணாமல் போயிருக்கும். கோட்டுக்கு இந்தப்பக்கம் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு கொடுத்த கௌதம் மேனனின் கரத்தில் சாதாரண அஜீத்தாக பயணித்ததால் தொடர்ந்து நான்காவது வெற்றியை ருசிக்க வைத்திருக்கிறது.
படத்தின் கதையை அனைத்து இணைய விமர்சகர்களும் அக்குவேர் ஆணிவேராக அலசி ஆராய்ந்து விட்டார்கள். கதையைப் பற்றி பேசப்போவதில்லை. ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையையும் ஆர்க்கான் திருடும் கும்பலையும் மையப்படுத்திய கதை. ஆரம்பத்தில் ஆராவாரமாய்த் தொடங்கி தேவையில்லாத காட்சிகளால் முதல் பாதியில் தொய்வாகும் படத்தை இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க வைத்து கடைசி ஒரு மணி நேரத்தில் அதிரடி காண்பித்து அனல் பறக்க வைத்து வெற்றிப்படமாக ஆக்கியிருக்கிறார்கள்.. படத்தைப் பற்றிய விமர்சனங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு சிலவற்றைத் தவிர்த்து பெரும்பாலானவை படத்தைப் பாராட்டியே பதியப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம்.
கௌதம் வாசுதேவ மேனன் : தொடர்ந்து சில படங்களின் தோல்வியால் துவண்டிருந்த இயக்குநர், அஜீத் என்னும் குதிரையின் மீது லாவகமாகப் பயணித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். பிரமாண்டங்களின் பின்னால் செல்லாமல் நான் இப்படித்தான் கதை சொல்வேன்... என் நாயகன் மாஸாக இருந்தாலும் என் கதையின் நாயகனாக மட்டுமே இருக்க வேண்டும் என அஜீத்துக்காக தன்னைக் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் தமது பாணியில் நாயகனை நடிக்க வைத்து மீண்டும் தனது கதை சொல்லும் திறமையை நிரூபித்திருக்கிறார்.
சின்னச் சின்ன வசனங்களாக இருந்தாலும் இயக்குநரின் படங்களில் அதிகமான வசனங்களும் பெரும்பாலும் ஆங்கிலம் தூக்கலாக இருக்கும். அது இதிலும் அப்படியே... எல்லோரும் பேசிக் கொண்டே இருப்பதுடன்... நாயகனும் வில்லனும் கதை சொல்லிகளாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அது சில இடங்களில் சலிப்பாய் இருக்கிறது. 'இவங்கதான் அவங்களா?" என குழந்தையைப் பார்த்து த்ரிஷாவிடம் அஜீத் கேட்பது, அனுஷ்காவை வீட்டில் தங்கவைக்க மகளிடம் கேட்கும் போது, அழகாய் கண்களை விரித்து 'அப்கோர்ஸ் அப்பா' எனச் சொல்லும் குழந்தை, என ஒவ்வொரு வசனமும் அருமையாய் இருக்கிறது.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு கதைகளின் கூட்டுக் கலவையே இது என்பது ஒரு பக்க வாதம்... ஒரு இயக்குநர் தொடர்ந்து போலீஸ் ஸ்டோரியை இயக்கும் போது அவரின் முந்தைய படங்களின் பாதிப்பு இருக்கத்தானே செய்யும்... அப்படியே இருந்தாலும் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று வெற்றிக்கனியைப் பறித்துவிட்டார்.
த்ரிஷா : பரத நாட்டியக் கலைஞர் ஹேமானிகாவாக வருகிறார். ஒரு குழந்தைக்கு தாய்... விவாகரத்து ஆனவர்.... இவரை திருமணம் செய்ய விரும்பும் போலீஸ் ஆபீசர்... இவர்களுக்குள் அரும்பும் அழகான காதல்... திருமணத்து முதல்நாள் கொடூரக் கொலை... என இவருக்கான போர்ஷனை கவிதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் தனது உடைகளில் அதிக கவனம் செலுத்தி கலக்கலாய் வந்த த்ரிஷா (செங்கோவி விளிக்கும் கமலாகாமேஷ்) முகத்தில் ஒரு முதிர்ச்சி, அதைவிட கொடுமை ரொம்ப சோகமாக இருக்கிறார். ஒருவேளை விவாகாரத்தான பெண் என்பதால் சோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ... மொத்தத்தில் இவர் முகத்தில் துள்ளல் மிஸ்ஸிங்...
அனுஷ்கா : மாடர்ன் பெண் தேன்மொழியாக வருகிறார். பெண் பார்க்க வருபவர்கள் பாடச்சொல்ல ஊதாக்கலரு ரிப்பன் எனப்பாடி கலகலப்பூட்டுகிறார். அஜீத்தை விரும்பி, அதை தைரியமாக இரண்டாவது சந்திப்பில் சொல்லி அசத்துகிறார். இதயத்துக்காக தன்னைக் கடத்த ஒரு கூட்டம் அலைவதும், அஜீத்துடன் தங்குவது, குழந்தைக்காக தான் வில்லனிடம் செல்வது என தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அனுஷ்காவை எப்பவும் போல் காட்டியிருந்தாலே அழகாய் இருப்பார். இதில் மாடர்ன் கேர்ள் என்பதால் முன்னால் முடியை இழுத்து விட்டு அது சரியாக எடுபடாமல் கரிச்சட்டியை கவிழ்த்து வைத்தது போலாகிவிட்டது. இயக்குநருக்கு என்ன கோபமோ..?
அனிகா: த்ரிஷாவின் மகளாக வந்து அஜீத்தின் மகளாக வளரும் அழகான கவிதை. தனது நடிப்பால் கவர்ந்து விடுகிறாள். அஜீத்தை சத்யா எனப் பெயர் சொல்லி அழைப்பவள், 'உனக்கென்ன வேண்டும் சொல்லு' என்ற பாடலில் ஹாப்பி பாதர்ஸ்டே என கார்டு கொடுத்து அப்பாவாக்கி, பாடல் முடிவில் அம்மாவாவும் ஆக்கி அவரின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் இடம்பிடிக்கிறாள். இவளுக்கும் அஜீத்துக்குமான காட்சிகள் அழகாய் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் ஈர்க்கும்படி காட்டியிருக்கலாம்.
விவேக்: ரொம்ப நாளைக்குப் பிறகு விவேக், போலீஸ் ஆபீசராக அஜீத்துடன் பயணிக்கிறார். 'ஹேமா ஏன் நிக்கிறா... உக்காரச் சொல்லு...', 'பேய்ன்னா எனக்குப் பயம்...', 'சத்யா நின்னுட்டீங்க... கொஞ்சம் உக்காருங்க...' என ஒன்லைனரில் அசத்தினாலும் சீரியஸ் ஆபீசராகவே காட்டப்பட்டிருக்கிறார். அதிகம் நடிப்பதற்கான காட்சிகள் இல்லை. முகத்தில் சால்ட் அண்ட் பெப்பராக லேசான தாடி... அவருக்குப் பொருந்தவில்லை... காய்ச்சலில் படுத்து எழுந்து வந்தவர் போலிருக்கிறது. போலீஸ் ஆபீசருக்கு எதுக்குத் அப்படி ஒரு தாடி... விளங்கவில்லை.
தாமரை : கௌதம் மேனனின் படங்களுக்கு கவிஞர் தாமரையின் பாடல்கள் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமையும். அது இதிலும் அப்படியே தொடர்கிறது. இயக்குநர் பாடல்களுக்கு என லொக்கேஷனோ தனி டிராக்கோ அமைப்பதில்லை. இவரின் படத்தில் பாடல்கள் கதையைச் சொல்லிச் செல்லும். அதற்கு ஏற்ற வரிகள்.... பாடல்கள் அனைத்தும் அருமை... 'இதயத்தில் ஏதோ ஒன்று...', 'உனக்கென்ன வேணும் சொல்லு...', 'மழை வரப்போகுதே..' என எல்லாப் பாடல்களும் அருமை. அருமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் தாமரையை வாழ்த்துவோம். படத்தின் அதிரடிப் பாடலான 'அதாரு உதாரு'வை மட்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். அந்தப்பாடலும் கலக்கல்.
ஹாரிஸ் ஜெயராஜ் : கௌதம் மேனனுடனான இவரின் கூட்டணி கலக்கல் இசையைக் கொடுக்கும். சில காலம் இருவருக்குள்ளும் இருந்த பிரிவை, என்னை அறிந்தால் தகர்த்து சேர வைக்க அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசையில் எப்பவுமே ராஜா மட்டுமே ராஜ்ஜியம் செய்வார். மற்றவர்கள் அத்தி பூத்தாற்போல்தான் பின்னணி இசையில் ஸ்கோர் பண்ணுவார்கள். ஹரிஸ்க்கு அப்படி ஒரு பூ இப்படத்தில் பூத்திருக்கிறது. மற்ற படங்களைவிட இதில் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவில் டான் மெக் ஆர்தர் கலக்கியிருக்கிறார். 'உனக்கென்ன வேண்டும் சொல்லு...' பாடலில் காட்சிப்படுத்தப்படும் இடங்களை எல்லாம் அழகாய் உள்வாங்கி அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.
என்னடா எல்லாரையும் சொல்லிக்கிட்டு வர்றான்... முக்கியமான ஆட்களைப் பற்றிப் பேசலைன்னு நினைக்கிறீங்களா... எப்பவும் முக்கியமானவர்களைப் பற்றி முதலில் பேசுவதைவிட இறுதியில் பேசுவதே சிறப்பு. இனி இவர்கள்....
அருண் விஜய் : அப்பா பீல்டில் இருந்தால் போதும் எந்தத் திறமையும் இல்லாமல் முன்னுக்கு வரமுடியும் என்று பலர் சினிமாவில் வலம் வரும் போது குடும்பமே சினி பீல்டில் இருந்தும் தன்னிடம் திறமை இருந்தும் முன்னுக்கு வரமுடியாத சிலரில் இவரும் ஒருவர். இவரின் நடிப்பில் வந்த 'பாண்டவர் பூமி' படத்தை எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.
ரொம்ப நாளாக வாய்ப்பில்லாமல் வாடிக்கிடந்த தனக்குக் கிடைத்த எதிர்மறையான கதாபாத்திரத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ அதைவிட ஒருபடி மேலே பயன்படுத்தி தனக்குள் புதைந்து கிடந்த வலியை திறமையாக வெளிக்கொணர்ந்து தியேட்டரில் கைதட்டலை அள்ளியிருக்கிறார்.
ஆரம்பத்தில் அஜீத்துக்கு இணையாக பயணிக்காவிட்டாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் ஆட்டம் காட்டி தலயுடன் போட்டி போட்டு நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். கலக்கல் நடிப்பு... அந்த வேகம்... இனி இவருக்கு ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தன்னைக் கொண்டாடிய தல ரசிகர்களுக்கு முன்னர் அழுதது ஆற்றாமையால் அல்ல... தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடி அதில் வெற்றி பெற்ற மகிழச்சியில் என்பதை அனைவரும் அறிவோம்... வாழ்த்துக்கள் விக்டர்... மன்னிக்கவும் அருண்.
அஜீத் : 40 வயசுக்கு மேல ஒரு சிலருக்கு மாற்றம் வரும்ன்னு சொல்லுவாங்க... உண்மைதான்... 40க்கு அப்புறம் தொடர்ந்து நாலு படம் ஹிட்... அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் அதிகமான தோல்விப் படங்களையே பார்த்தவர். இப்போ வெற்றிப் பாதையில்... ஏற்றிவிட ஏணியின்றி தானே சுயமாய் முன்னுக்கு வந்தவரின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துவோம்.
'இப்படி ஸ்மார்ட்டாகிக்கிட்டே போனால் நாங்க எல்லாம் என்னாகுறது?' என திரிஷாவும் 'உலகத்துலயே நீதான்டா அழகன்' என அனுஷ்காவும் சொல்வது உண்மைதான். என்ன தேஜஸ்... ஆஹா... விமானத்தில் இருந்து இறங்கி வெள்ளைக்காரிகளுக்கு மத்தியில் வரும்போது அவளுக கலரு தல கலருல மங்கிப் போயித்தான் தெரியுதுன்னா பாத்துக்கங்களேன்..
ஆரம்பத்தில் அனுஷ்காவுடன் பயணிக்கும் கதையில் விமானத்தில் தூங்கியபடி பயணிக்கும் தல வந்ததும் தியேட்டர் அதிர்ந்தது. ஒரு மாஸ் ஓபனிங்க் இல்லாமல் மேலே பறக்கும் விமானத்தில் தூங்குவதாக காட்டும்போதே இது மாஸ் நிறைந்த தல படமல்ல.... கௌதமின் நாயகனாகப் பயணிக்கும் படம் என்பதை உணர முடிகிறது.
ரவுடியாக வரும் காட்சிகள் கிளாஸ் என்றாலும் அமர்களம் அஜீத் மிஸ்ஸிங்க்... போலீஸ் ஆபீசராக கலக்கியிருக்கிறார். கெட்ட வார்த்தைகள் பேசுவதை ஏனோ இப்போ வழக்கமாக்கியிருக்கிறார். இதில் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறார். அதைத் தவிர்க்கலாம். போலீஸ் கெட்டப்பில் வேட்டையாடு விளையாடு ராகவனை (கமல் - அந்த மிடுக்கு இல்லை) ஞாபகப்படுத்துகிறார் என்றாலும் தலக்கே உரிய ஸ்டைலும், வேகமும் இருக்கிறது.
ரவுடி, போலீஸ், காதலன், அப்பா என ஒவ்வொரு பாத்திரத்திலும் அழகாய் மிளிர்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் முடியுடன் கோட்டுப் போட்டு கண்றாவி கலர் பேண்டுடன் டூயெட்டெல்லாம் பாடவில்லை. படத்தை தனது தோளில் சுமந்து தோல்வியில் துவண்ட தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் மற்றும் இயக்குநருக்கு வெற்றிக்கனியைக் கொடுத்து வாழ்வளித்திருக்கிறார். வாலி, அமர்க்களம், முகவரி, வரலாறு வரிசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனல் பறத்துகிறார். சால்ட் அண்ட் பெப்பரில் தியேட்டரில் கைதட்டலை அள்ளுகிறார்.
தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் அஜீத்துக்குள் இருக்கும் நடிகனை இன்னும் மெருகேற்றலாம். இல்லை மாஸ் என்று பயணித்தால் ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களைப் போல் வெறுக்க வைத்துவிடும் என்பதை உணர்ந்து நடிக்க வேண்டும். 'யாருடா நீ?' என அனுஷ்கா கேட்க 'தல' என தியேட்டரில் குரல்கள்.... சண்டைக் காட்சிகள், வசனங்களில் தியேட்டரில் ஒரே விசிலும் கைதட்டலும்தான்... மொத்தத்தில் அமர்க்களமாய் கலக்கியிருக்கிறார் தல.
நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி, பார்வதி நாயர், செல் முருகன் என அவரவர் கொடுத்த பாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். எப்பவுமே கௌதம் மேனன் நாயகிகளை அவிழ்த்து காட்டாமல் அழகாய்க் காட்டுவார், மேலும் அழகான தமிப்பெயர்களைச் சூட்டுவார். இதிலும் அப்படியே... இருப்பினும் ஹேமாவுக்குப் பின்னே ஏன் நிக்கா போட்டாருன்னு தெரியலை (ஹேமானிகா). சதையை நம்பாமல் கதையை நம்பும் இயக்குநர்கள் சிலரில் இவரும் ஒருவர். அதற்காக இவரை வாழ்த்தலாம்.
தமிழ் சினிமாவின் சமீபத்திய டிரண்டான தண்ணியடிக்கும் காட்சிகள், பாரில் பாடல், குத்துப்பாடல் என எதுவும் இல்லாமல் வந்திருக்கும் படம் என்னை அறிந்தால் என்று சொல்லலாம். அதற்காகவேனும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரைப் பாராட்டலாம்.
பெரும்பாலும் அஜீத் தன்னுடன் நடிக்கும் முக்கியமான நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அப்படியே இதில் அருண் விஜய்க்கும் அவருக்கு இணையான காட்சிகள். முதல் பாடலில் அருணுக்கே முக்கியத்துவம். இதை மற்ற நடிகர்கள் செய்வார்களா தெரியாது.
படம் பார்க்கும் போது எங்களுக்குப் பின்னே அமர்ந்திருந்த இருவர், ஆங்கில வசனங்கள் அதிகம் இருந்ததாலும், ஆரம்பக்காட்சிகள் கோர்வை இல்லாமல் இருந்ததாலும் 'பேசாம மலையாளப் படத்துக்கே போயிருக்கலாம்... ஒண்ணும் புரியலை' என்று புலம்பினார்கள். 'மழை வரப்போகுதே...' பாடல் 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாடலை ஞாபகத்தில் கொண்டு வந்தது.
இங்கு ஒரு தியேட்டரில் சூடமெல்லாம் காட்டினார்களாம்... இதெல்லாம் ரொம்ப அதிகம்... தலயே குடும்பத்தைப் பாருங்கடான்னு சொன்னாலும் தலயின் வெறிபிடித்த வால்கள் எல்லாம் திருந்தப் போவதில்லை. ஒரு நடிகரை ரசிப்பதற்கும் தீவிரமாக ரசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு... நடிகருக்கு ரசிகனாய் இருப்போம்... தீவிரமாய் ரசித்து கட் அவுட்டுக்கு பால் ஊத்துறேன்னு உன்னை நம்பியிருக்கிற குடும்பத்தை பால் ஊத்த வச்சிட்டுப் போறதுனால பாதிப்பு யாருக்குன்னு தீவிரமான ரசிகர்கள் யோசிக்கணும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
மொத்தத்தில் என்னை அறிந்தால் தலயின் வெற்றிப்பட வரிசையில்.... தல ராக்ஸ்.
-'பரிவை' சே.குமார்.