கூடல் நகர்

****அக்கால தமிழகத்தின் சிறப்புகள் ஆயிரம் ஆயிரம் *****
கூடல் நகர் .....
சிறப்பு பெயர்கள் :
தென் இந்தியாவின் ஏதென்ஸ் , தூங்கா நகர், திருவிழா நகர்,கோவில் மாநகர் , சங்கம் வைத்து செந்தமிழ் வளர்த்த நகரம், தமிழகத்தின் இரண்டாவது பெருநகரம் என்ற சிறப்புகளுக்கு உரியது மதுரை .
பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாக விளங்கியது மதுரை .
"மதுரை" என்னும் சொல்லுக்கு "இனிமை" என்று பொருள் .தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை.

நான்மாடக்கூடல் :
மதுரைக்கு "கூடல்" எனவும்,"ஆலவாய்" எனவும் வேறு பெயர்களும் உண்டு .திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்தமையால் நான்மாடக்கூடல் என்றும் ,கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிகோவில், ஆலவாய்க் கோவில் காவலாய் அமைந்ததனால் நான்மாடக்கூடல் என்றும் கூறுவர். வருணன் மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பியதாகவும் அதனைப்பற்றி இறைவன் பாண்டியனிடம் முறையிட இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பியதாகவும் ,அந்நான்கு மாடங்களே மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்று பெயர் வந்ததாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார்.எந்நாட்டவரும், எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால் "கூடல் " என்று பெயர் பெற்றது.

சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை,கொற்றவை,சிந்தாதேவி, எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை ,அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்ச்சாலைகள்,நாளங்காடி ,அல்லங்காடி முதலியனவும் இருந்துள்ளன.
அக்கால மதுரை வீதிகளின் பெயர்:
அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைவீதி
கூலவீதி- தானியக்கடை வீதி
பொன்வீதி- பொற்கடை வீதி
மன்னவர்வீதி-மன்னர் வாழும் வீதி
மறையவர் வீதி -அந்தணர் வீதி

நிகழ்வுகள்:
பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணம் தருமிக்கு தண்டமிழ்ப்பாடல் தந்தமையைப் பற்றி
கூறுகிறது . மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் "நாலடியார் " இயற்றப்பட்டது. குமரகுருபரருக்கு மீனட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தது .

மாண்புமிகு மதுரை:
சிவபெருமான் சுந்தர பாண்டியனாகவும்,செவ்வேள் உக்கிரகுமாரப் பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர். பாண்டிய நாட்டை ஆண்ட மன்னருள் பலர் சிறந்த புலவர்களாகவும் விளங்கினர் . அவருள் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் ,வரகுண பாண்டியன் , அதிவீரராம பாண்டியன் நற்காவலர்களாகவும் சிறந்த பாவலர்களாகவும் திகழ்ந்தனர்.

மண்டபம்:
ஆயிரங்கால் மண்டபம், அட்டசக்தி மண்டபம்,புதுமண்டபம், நகரா மண்டபம்,நூற்றுக்கால் மண்டபம் .மேலும் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் "கோவலன் பொட்டல்" என்ற பெயரால் இன்றும் வழங்கப்படுகிறது.கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரமே "மதுரை மூதூர் " என்று குறிப்பிடுவதால் மதுரையின் பழைமை அறியப்படுகிறது .

மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்கு கோபுரம்,உயரமானது தெற்கு கோபுரம். இது 160.9 அடி உயரமும் 1511 கதை உருவங்களும் உடையது .மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால் .இதன் ஒவ்வொரு தூணும் 82அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.

வியத்தகு தொன்மை நிறைந்த மதுரை இன்றும் இச்சிறப்புகளை காத்துவருகிறது .

எழுதியவர் : sudarvizhi (9-Feb-15, 9:01 pm)
பார்வை : 1298

மேலே