நானூறுக்கு முன் நான் திரும்பிபார்க்கிறேன் - சந்தோஷ்
----------------------------
வணக்கம் தோழர்களே !
எழுத்து.காம் என்கிற இந்த இணையத்தளம் கடந்த 29- 6- 2013 அன்று எதேச்சையாக கூகுள் தேடலில் என் விழியில் சிக்கிய ”ஒர் அழகிய தமிழ் சொர்க்கம்” கவிதைகள் என்றாலே நீர் ஆகாரமின்றி விடிய விடிய ரசிக்க கூடிய ஒரே ஒரு தலையெழுத்தாய் எனக்கு இருப்பது மட்டுமே என் வாழ்வில் நான் பெற்ற இரண்டாவது அதிர்ஷ்டம். ( முதலாவது என் அன்னையின் வயிற்றில் கருவாகி உருவாகி பிறந்தது.)
30-06-2013இல் இந்த தளத்தில் என்னை இணைத்துக்கொண்டு தோழர்களின் சில கவிதைகளை வாசித்தேன். படித்து ரசனையில் மிரண்டுப்போனதும் மட்டுமின்றி... நான் எப்படி இத்தளத்தில் இவர்களுக்கு இணையாக கவிதைகள் எழுத முடியும் என்கிற தாழ்வு மனப்பான்மையும் பிறந்தது.
ஆம்..! இந்த தளத்தில் மிகச்சிறந்த மரபு பாவலர்கள், இலக்கிய மேதைகள், இளம் கவிச்சிங்கங்கள், பெண் பாரதிகள், பேராசிரியர்கள், கவிதைகளுக்கு என்றே பிறந்தது போல கவிஞர் பெருமக்கள் , தமிழ் மொழி அறிஞர்கள் என ஒரு பெரிய இலக்கிய பட்டாளமே இருப்பதை கண்டு வெறும் வாசகனாய் இருப்பதே சால சிறந்தது என்று எண்ணினாலும்,
கல்லூரி காலத்தில் தோழன் தோழிகளின் உற்சாக தூண்டலில் எழுதிய சில கவிதைகள் எழுதிய அனுபவம் , ஒர் அசாத்திய தைரியத்தை கொடுத்தது.
முதலில் ஏற்கனவே எழுதி வைத்த கவிதைகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன். என் முதல் கவிதை பதிவுக்கு முதல் கருத்திட்டது திரு. பழனிகுமார் அய்யா அவர்கள். அவர் ஆரம்பித்த வைத்த அந்த உற்சாக மருந்தின் பயனாக சில பதிவுகளுக்கு பிறகு, ஒரு மாதத்திற்கு பிறகு... முதன்முறையாக இந்த தளத்தில் பதிவு செய்வதற்கு என்றே சிந்தித்து கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.
அந்த வகையில் நான் எழுதிய முதல் கவிதையின் தலைப்பு “ நண்பா நீ வா “
இந்த கவிதையின் இறுதியில் இப்படி எழுதியிருந்தேன்.
----------------------------------
முயற்சி என்பது பெண் இதழ்- அதை
முத்திமிடு !!
வெற்றி தேவதையின்
சுவையென்ன
என்பதை நீ அறிவாய் !!!
-----------------------------------
இந்த கவிதைக்கு பிறகு மெல்ல மெல்ல தளத்தின் திறமையான படைப்பாளி தோழர்கள் அனைவரும் என் படைப்புக்கு கருத்து சொல்லியும். உற்சாகம் கொடுத்தும், தவறுகளை எடுத்துரைத்து சொல்லிக்கொடுத்தும் ஒரு புரவியின் வேகத்தை பெற்றவனாக தன்னம்பிக்கை கம்பீரத்தை வரவழைத்தார்கள்.
தளத்தில் சேர்ந்த நாளில் என் சுயவிவர பக்கத்தில் எனனை வாசகர் என்று அழைத்தது இந்த தளம். சற்று நாட்களில் எழுத்தாளர் என்றது இந்த தளம். “ எழுத்தாளர் நானா ? ” எனக்கு எழுத்தாளர் என்பது வெறும் ஒரு சாதாரண சொல் அல்ல. இந்த சொல் ஒரு போராளிக்கு இணையான சொல். இந்த சொல் வீரத்திற்கு , தன்மானத்திற்கு , சுயமரியாதைக்கு இணையான சொல் எனும் நம்பிக்கை உடையவன். அகில உலகத்திலும் பெரிய பெரிய எழுத்தாளர்களை என் முன்மாதிரியாக கொண்டு... நானும் எழுத்தாளர் என்கிற ஒரு பெயரை சம்பாதிக்க வேண்டுமென்ற ஒர் இலட்சியம் இருந்தது. எழுத்து தளம் “ எழுத்தாளர் “ என்று பெயரிட்டு என் சுயவிவரத்தை அலங்கரித்தாலும்.. இன்னும் அந்த நிலைக்கு தகுதி நான் பெறவில்லை என்பதை சுயவிமர்சனத்தில் உணர்ந்து.. தொடர்ந்து இத்தளத்தில் பயணிக்க ஆரம்பித்தேன்..
தளத்தின் சிறப்பம்சம் எது என்றால் இங்கு எனக்கு.... நட்பு வட்டங்கள் கிடைத்தது. தோழர்கள், தோழிகள், அம்மா, அக்கா, தங்கை, அண்ணா, தம்பி என்று உறவுப்பெயரிட்டு அழைக்க கூடிய தமிழ் சொந்தங்கள் கிடைத்தது. இதில் சில துரோகிகளும் உருவாகி அவமானப்படுத்தியதான் துரதிருஷ்டமானது.
வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். நட்புக்கள், உறவுகள் ஏற்பட எப்படி என் அணுகுமுறை காரணமானதோ .. அதேப்போலத்தான்.. துரோகிகள் உருவாகியத்திற்கும் என் அணுகுமுறைகளில் ஏற்பட்ட பிழைகளே காரணமாக இருக்கும். சரி விசயத்திற்கு. வருகிறேன்.
50 , 100 , 200 , 300 , 350 என்று எனது படைப்புகளின் எண்ணிக்கை உயர உயர என் தன்னம்பிக்கையும் என்னை மிகுதியான உறுதியான ஒர் எழுத்தாளன் நிலைக்கு தள்ளியது. இந்த பயணத்தில் தொடர்கதைகள் பாகங்களின் எண்ணிக்கையும் சேர்த்து உள்ளிட்ட சிறுகதைகளின் எண்ணிக்கை 50 ஐ தொட்டது. பூரித்தேன். 300 வது படைப்புக்கும் 350 வது படைப்புக்கும் இடையேயான என் எழுத்து தள பயணத்தில்... சில அரிய வாய்ப்புக்கள் என்னை தேடி வர ஆரம்பித்தன. குறும்படம், திரைப்பட வாய்ப்புக்கள் வந்து என்னை உசுப்பி விட்டது. இந்த வாய்ப்புக்களை சரியாக திட்டமிட்டு உபயோகித்துக்கொள்ள சில தியாகங்களையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு இப்பொழுது தமிழக தலைநகரில் மேலும் சில வாய்ப்புகளின் கதவுகளை வெறித்தனமாக தட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிலை. இதுவும் நல்ல நிலைக்கு வரக்கூடிய நம்பிக்கை நிலைதான்.
நான் எந்த ஒரு படைப்பு எழுதினாலும்..அது காதல் படைப்புகளோ, சமூக படைப்புகளோ எதுவாக இருப்பினும் அது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் ஒரு வித கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்று முயலுவேன். அந்த கிளர்ச்சி குறிப்பாக சமூக கவிதைகளில் ஒரு புரட்சி விதையினை வாசக நெஞ்சத்தில் விதைத்து நல்லதொரு சமூக மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்று நினைப்பேன். அதில் இதுவரை நான் வெற்றி பெற்றேனா....என்பது கேள்விக்குறிதான்.
இங்கு இத்தளத்தில் நூற்று கணக்கான , ஆயிர கணக்கான படைப்புக்கள் எழுதி அசத்தி கொண்டிருக்கும் திறன்மிக்க படைப்பாளிகளின் மத்தியில் , எழுத்து உலகில் சிறுவன் நான் , இப்போது கதைகள், கட்டுரைகளை தவிர்த்து கவிதைகளின் எண்ணிக்கையில் மட்டும் 400 வது படைப்பை எழுத ஆயுத்தமாகி கொண்டிருக்கிறேன் என்பதை ஒரு வித திருப்தி மனநிலையில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எந்த ஒர் இலக்கிய அறிவும், இலக்கண அறிவுமின்றி என் அளவில் நான் இந்த எண்ணிக்கையை தொடுவது பெரிய விடயமே..!
(தளத்தில் பதிவு செய்து சில காரணங்களால் என்னால் நீக்கப்பட்ட படைப்புக்கள் மட்டும் 50 எண்ணிக்கையிலிருக்கும் )
தோழர்களே..! எனதருமை சொந்தங்களே...!
மிக சாதாரண ஒரு ரசிகனை, ஒரு வாசகனை.. ஒரு படைப்பாளியாக என்னை உருவாக்கிய பெருமை முழுக்க முழுக்க உங்களையே சேரும். ஆம்...! உங்கள் ஆதரவும், அன்பும், கருத்துகளில் நீங்கள் என்னை உற்சாகமூட்டிய செயல்களும் தான் நானும் ஒரு படைப்பாளியாக உருவாக காரணம். . உங்களால் சாத்தியமாக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட இந்த “ இரா.சந்தோஷ் குமார்” என்கிற நாளைய எழுத்தாளனுக்கு தொடந்து ஆதரவு தர அன்புடன் நட்புடன் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
விரைவில்.. 400 வது கவிதையாக ........... “ செம்மொழி தோட்டா “ பதிவு செய்கிறேன்.
இந்த கட்டுரையை எனது 1000 மாவது படைப்புக்கு முன் எழுதவே விரும்பினேன். ஆனால்............................................மிகுதியான மன அழுத்தம் ..... ........திசை மாற்றிவிடுமோ......? முதன் முறையாக அஞ்சுகிறேன்.
எழுத்து தளம்.......! .இலக்கிய இணையத்தளம் மட்டுமல்ல.. என் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் என் இதயத்தளம்.!
நன்றி தோழர்களே..........!!
-இரா.சந்தோஷ் குமார்.