மாமியாரின் அறம்

மாமியாரின் அறம்

கதிர் பிறந்து சில வருடங்களில் தனது தந்தையை ஒரு விபத்தில் இழந்தான். அவன் அம்மாவிற்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திட அவள் எதிலும் நாட்டமில்லாமல் தன்னை எந்த விதத்திலும் கவனிக்காமல் தனது நேரம் முழுவதையும் அவன் வளர்ச்சியிலேயே செலுத்தினாள். அவனை வளர்ப்பதற்கு வேலையை எடுத்து கொண்டு ஒரு வயதானவர்கள் காப்பகத்தில் உதவியாளராக இருந்து அங்குள்ளவர்களுக்கு வேண்டியவற்றை செய்து வந்தாள். அவளது குணத்தையும் பணிவிடையையும் பாராட்டாதவர்களே அந்த காப்பகத்தில் இல்லை. நல்ல உணவு சமைப்பதும்,இருக்கும் இடத்தின் சுத்தமும் அவள் விரும்பி எடுத்து செய்த வேலைகளில் முக்கியமானது.கதிர் நன்றாக படித்து ஒரு வேலைக்கு சேரும் அளவிற்கு வளர்ந்தவுடன் அவள் சிறிது காலம் வேலையில் இருந்து ஓய்வெடுத்து அவனுக்கு வேண்டிய உதவியை செய்து வந்தாள். வெகு விரைவில் அவனுக்கு ஒரு நல்ல வேலை அமைந்தது. அவன் வேலையில் சேர்ந்ததும் அவள் மீண்டும் காப்பகத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். கதிர் வீட்டிற்கு வந்து அவளிடம் அம்மா நீ வேலையை விட்டு விட்டு வீட்டில் நிம்மதியாக இரு.எனக்காக இவ்வளவு காலம் உழைத்தது போதும் எனக் கூறிட அதை ஏற்று அவள் காப்பகத்தில் சென்று அவர்களிடம் தனது முடிவை தெரிவித்து ஏதாவது தேவை ஏற்பட்டால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு வந்தாள். சில ஆண்டுகள் கதிர் அவள் இருவரும் மகிழ்ச்சியுடன் வீட்டில் வாழ்ந்தனர். அதன் பின் கதிருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து ஒரு நல்ல பெண்ணை தேடிய பொழுது காப்பகத்தில் உள்ள ஒரு தம்பதியர் தங்களது உறவில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றி கூறிட அவளைத் தன் மகனோடு சென்று பார்த்து இருவருக்கும் அவளை பிடிக்க திருமணத்தை முடிவு செய்து நடத்திய பின்,மூவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர். மருமகள் வந்தவுடன் அவளை வேலை ஏதும் செய்ய விடாமல் தானே எல்லாவற்றையும் செய்து அவளுக்கு எல்லா விதத்திலும் உதவி புரிந்தாள். கதிரிடம் அவன் மனைவி அவன் தாயைப் பற்றி நல்லவைகளைக் கூறிட கதிரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அந்த மகிழ்ச்சியின் விளைவால் மனைவி வயிற்றில் ஒரு வாரிசு உருவாகியது. கதிரும் சுதாவும் இந்த நல்ல செய்தியை அம்மாவிடம் கூறிட அவள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து அவர்கள் இருவரையும் மனதார வாழ்த்தி சுதாவை அணைத்துக் கொண்டாள்
. கதிர் தனது வேலைக்கு செல்வதைத் தொடர்ந்தான். சுதாவை அவன் அம்மா நன்றாக கவனித்து வந்ததால் அவன் ஒரு வித கவலையும் இல்லாமல் இருந்தான். சில மாதங்கள் சென்றபின் சுதாவை அவன் அம்மா வீட்டில் உள்ள பல வேலைகளில் அவளுக்கு உதவ கூப்பிட்டாள். சுதாவும் அவைகளைப் பக்குவமாகச் செய்து முடித்தாள். வேலைகள் முடிந்ததும் களைப்பு மேலிட படுத்து உறங்கினாள். மெல்ல மெல்ல கதிரின் தாயார் சுதாவையே வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யச் சொல்லி வெளியே சென்று காப்பகத்தில் அவர்களுக்கு உதவி செய்து பின் வீட்டிற்கு வரும் வழியில் அக்கம் பக்கத்துக்கு மாமிகளுடன் பேசி விட்டு வந்து சுதாவிடம் உணவைப் பெற்று ஓய்வு எடுத்து கொண்டாள். சில மாதமாக உங்கள் அம்மா மிகவும் மாறி விட்டாள் என்னை எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வைத்து விட்டு அவர்கள் மகிழ்ச்சியோடு வெளியே காப்பகத்தில் வேலைக்குச் சென்று வரும் வழியில் அக்கம்பக்கத்து வீட்டிற்கும் சென்று அங்குள்ள மாமிகளுடன் பேசி நேரத்தை கழித்து விட்டு இங்கு வீட்டிற்கு வந்து என்னிடம் உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு என்னிடம் என் நலனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஓய்வு எடுக்க செல்கிறாள், எனத் தனது குரலை உயர்த்தி கோபமாக கூறிட, கதிருக்கும் கோபம் வந்தது.
ஒரு நாள் மதிய வேளையில் மனதில் நினைத்தாள்,வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டு இருக்கும் நான், வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் என் மாமியார் காப்பகத்திலோ பக்கத்து வீட்டிலோ உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறாளே? இவள் ஒரு நல்ல தாயாக என் கணவனை வளர்த்தவளுக்கு நான் படும் கஷ்டங்கள் ஏன் தெரியவில்லை இவளுக்கு எப்படி இதைப் புரியவைப்பது
தன் வம்சத்தின் வாரிசை சுமக்கும் மருமகள் மீது கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் வேலைகளை எல்லாம் என்னை செய்ய விட்டிருக்கிறாளே ?
சுதா, அன்று கணவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்
“என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியவில்லையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலைமையைப் பற்றி பேசி புரியவைக்கக் கூடாதா என்று மிகவும் பரிதாபமாகக் கூற,
கதிர் அவள் சொல்வதை கேட்டு கொதித்துப் போனான். “நிச்சயம் அம்மாவிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன் என்று அவளிடம் கூறினான். அவளை மெல்ல தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தான். பின்னர் இருவரும் வீட்டிற்கு வெளியில் வந்த பொழுது பக்கத்து வீட்டு சரசாவிடம் கதிரின் அம்மா “கடவுள் புண்ணியத்திலே என் மருமகள் சுதாவிற்கு சுகப்பிரசவம் நடந்தா, திருப்பதிக்கு நான் நடைப் பயணமா வருவதாக வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று நான் எந்த வேலையையும் செய்யாமல் அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சு உடல் அசைச்சு பயிற்சி செய்தால் தானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்கு சுகப் பிரசவம் நடந்து குழந்தையும் நல்ல ஆரோக்கியமா பிறந்தால் அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்போ அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். அவளுக்கு இதனால் நல்லது நடந்தா சரி!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதைக் கேட்டு கொண்டிருந்த இருவரின் கண்களும் கண்ணீரினால் நனைந்தன. கோபம் பாசமாகி அம்மாவின் மீது
அன்பு அதிகமாகியது. இருவரும் உடனே அம்மாவிடம் சென்று அவளை வணங்கினர்.
அம்மாவின் அன்புக்கு ஈடு எல்லை இல்லை
தன்னிகரில்லாத அதை அறியாதவர் நிந்திப்பர்
அதை அறிந்தபின் அவள் பாதம் பற்றி பயனடைவர்

எழுதியவர் : கே என் ராம் (11-Sep-25, 11:25 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 23

மேலே