ஒருவன் கணனடங்கக் கற்றானும் இல் - சிறுபஞ்ச மூலம் 30
நேரிசை வெண்பா
ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்று
மொருவ னறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல் 30
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
எல்லாவற்றையும் அறிவான் ஒருவனும், யாதொன்றையும் அறியாதான் ஒருவனும், நற்குண முழுதும் இல்லாதவனாகிய ஒருவனும், குற்றம் முழுதும் இல்லாதான் ஒருவனும், நூற்றொகுதி முழுதுங் கற்றான் ஒருவனும் இவ்வுலகத்தில் இல்லை!
கருத்துரை: எல்லாவற்றையும், எதுமறியாதவனும் நல்லியல்பே யில்லாதவனும், குற்றமே யில்லாதவனும், எல்லாக் கல்விகளையுங் கற்றவனும் இவ்வுலகில் இல்லை.
இச்செய்யுளால் மக்களில் ஒருவரை யொருவர் இழித்துரைக்கும் இழிகுணம் கூடாதென்பதும், எவரும் தற்பெருமை கொள்ளுதல் கூடாதென்பதும், உணரப்படும்;
'குணனடங்கக் குற்ற முளானும்' எனவும் பாடம்!

