கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் – முத்தொள்ளாயிரம் 36
சோழன்
நேரிசை வெண்பா
கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள் - கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு! 36
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
உறையூர் அரசன் வளவன். அவனைப் பார்த்தது என் மையுண்ட கண். அவனோடு கலந்தது என் நெஞ்சம். தண்டனை பெற்றதோ என் தோள் (தோள் வாடி என் வளையல்கள் கழன்றோடுகின்றன) வளவன் முறை செய்து நீதி வழங்குவது இப்படித்தான் முறைமாறிக் கிடக்கிறது!