யிளந்தளி ரன்னநின் மேனிப் பசலை பழங்கண் கொள - கார் நாற்பது 16

இன்னிசை வெண்பா

சுருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கண் கொள! 16

- கார் நாற்பது

பொருளுரை:

பெரிய தோளினையுடையாய்! அசோகினது இளந்தளிர் போன்ற உன் உடம்பினது பசலையானது மெலிவு கொள்ளவும், கரிய குயில்கள் செயலற்றுத் துன்பமுறவும், பெரிய மயில்கள் களித்து ஆடவும், பெரிய ஒலியையுடைய முகில்கள் முழங்கா நிற்கும்!

கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார்காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை.
ஆல - அகல; ஆட . பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும் மெலிவின் பால' என்பது திவாகரம்.

பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி.
1.அசோகினிளந்தளிர் என்றும் பாடம்.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (10-Sep-25, 2:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3

மேலே