புரியாத மனசு -குறுங்கதை
அம்மாவுக்குத் தெரியாமல் மெதுவாக பிரிட்ஜைத் திறந்து சாக்லேட் எடுக்க முயன்ற சுரேஷுக்கு முதுகில் படார் என அடி விழுந்தது. அதிர்ந்து திரும்பிய சுட்டி சுரேஷ் அம்மாவிடம், அடிக்காதேம்மா ஒரே ஒரு சாக்லேட் என்றான். காலையிலே இருந்து இது நாலாவது சாக்லேட் பல்லு கெட்டுவிடும் என்றாள் அவன் அம்மா. அடிக்கு பயந்த சுரேஷும் சாப்பிடாமல் வைத்து விட்டு அவன் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தான். இன்று வழக்கத்தை விட மிகத்தாமதமாக வந்த அப்பாவிடம் சுரேஷ் அம்மா, என்ன குடித்து விட்டு வந்துருக்கீங்களா?, உடம்பு கெட்டு விடும்னு எத்தனை தடவை சொல்றது என கோபமாகக்கேட்டாள். பதில் எதுவும் பேசாமல் உள் அறைக்குச் சென்ற அப்பாவை பின் தொடர்ந்தாள் அம்மா. இதைப் பார்த்த சுரேஷ், அவன் சாக்லேட்டுக்காக அடி வாங்கியதைப் போல அப்பாவுக்கும் திட்டு விழும் என்று நினைத்தான். ஆனால் அடி விழுந்ததோ அம்மாவுக்கு இதைப்பார்த்த சுரேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.