அதுவொரு மழைக்காலம்---அஹமது அலி---

கதிரவன் கரையேறி மேற்கில் புகும் நேரம்
இதமான குளிர்காற்று இதழ் நடுக்கம் தருகிறது
சற்று நேரத்தில் வானம் ஊசி மாரி பொழிகிறது

நாமிருவரும் மழையை ரசித்துக் கொண்டிருக்கிறோம்
மழை பிடிக்குமா உங்களுக்கு எனக் கேட்கிறாய்?
குடையிருந்தும் நனைகிறேனே தெரியவில்லையா என கேட்கிறேன்...

மழை பற்றி ஒரு கவிதை கேட்கிறாய்...

"பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழாவோ
பூக்குளியல் நடத்துகிறதே
வானம்.! "

மழைத்தூறல் நசுங்கும் படி கை தட்டுகிறாய்.....

நிலா பிடிக்குமா என்கிறாய்
பிடிக்கும் என்கிறேன்...
அமாவாசை அன்று நிலா எங்கே போகும் எனக் கேட்கிறாய்?

"என் நிலா
வானத்தில் இல்லா நாட்களில்
என்னவளின் கண்களுக்குள் வந்து
ஒளிந்து கொள்ளும்"

ஓ...அவள் அத்துனை அழகா?

" அவள் அழகை
பட்டாம்பூச்சியின்
சிறகு சொல்லும்"

அப்படியா....என்று வாய் பிளக்கிறாய்..

"அப்படியா?
இப்படியா?
என்று கேட்டால்
எப்படிச் சொல்வேன்
அழகானவை எல்லாம்
அவளை நியாபகப்படுத்தும்"

பொறாமையில் ம்கூம்ம்ம் என்று உன் முகம் கோணுகிறது..

"அடியே
நீ
நாணினாலும் அழகு
கோணினாலும் பேரழகு"

இதுவும் அவளுக்கா என்கிறாய்..
யாருக்கென்று சொல்ல முடியாது
சொன்னால் நமக்குள் சண்டை வரும் என்கிறேன்..
என் செல்லம்ல சொல்லுங்க என்கிறாய்..

"நீ
செல்லம் கொஞ்சுவதற்காகவே
கோபித்துக் கொள்கிறேன்
நீயும்
கொஞ்சுவதற்காகவே
கோபம் கொள்ள வைக்கிறாய்
கோபமும் கொஞ்சலும்
மிஞ்சித்தான் போகின்றன"

எப்படி இப்படிலாம் ......கவிதை?

" சில நேரம் கொட்டும்
சில நேரம் சொட்டும்
சில நேரம் முட்டும்"

ஹாஹா...ஹாஹா.. அருமை அருமை
இதெல்லாம் எங்கே கத்துகிட்டிங்க?

" உன்னிடமிருந்து என்றால்
நம்ப மாட்டாய்
என்னிடமிருந்து என்றால்
நம்பிடுவாயா?
என்னில் தான்
நீயிருக்கிறாய் என்பதைக் கூட
அறியா பேதைப் பெண்ணே"

நல்ல கவிதை மூடில் இருக்கீங்க.....
உங்கள் கவிதை யார் கூடவோ பேசுகிற மாதிரி இருக்கிறது

" உன்னிடம் பேச முடியால் தானே
கவிதையை பேச விடுகிறேன்
யாருக்கோ என்கிறாயே...
யாரோடும் பேச
காதலுக்குத் தான் கண்ணில்லையாம்
கவிதைக்குமா?"

இதுவும் நல்லாயிருக்கு.


"நல்லாயிருக்கு என்கிறாய்
புரிந்தது எனச் சொல்லாமல்
கள்ளி"

யாரந்தக் கள்ளி?
போடி என்ன சொல்லியும் உனக்கு புரியப் போவதில்லை..
என்னது போடியா.....?

"போடி என்று
சொல்லும் போது
கோபத்தில் பொங்கி எழுகிறாய்
பிறகு
போடா என்று சொல்லி
போடி என்று சொல்ல வைத்து
ரசிக்கிறாய்...
என்னடி உன் விளையாட்டு"

என்னது நான் ரசிக்கிறேனா?
அப்படி ஒன்றும் இல்லை....
ஆமாம் என்னோடு எப்போதும் ஏன் சண்டை வளர்க்கிறீர்கள்?

"உன் மீது
அன்பு வளர்க்கக்
கூடாதென்றே
சண்டை வளர்க்கிறேன்
சண்டையும்
அன்பு வளர்த்தால்
நானென்ன செய்வேன்"

சரி போங்கள் என்கிறாய்..

"போ என்றால்
போவதற்கு போக்கிடம் ஏது?
உன் இதயம் தவிர
அதை திற"


இப்படியாக கழிந்தது இன்றைய மாலை மழைப் பொழுது!

எழுதியவர் : அஹமது அலி (27-Feb-15, 10:02 am)
பார்வை : 373

மேலே