சாதிவெறி

சாதிவெறி
- கவிஞர் சி. அருள்மதி

என் காதல் கரு
உன்னில் வளர விடாமல்
கருத்தடையாய் உன் சாதி!

சங்கம் வைத்து சாதி வளர்க்கும்
தந்தைக்கு மகளாய் நீ !

சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா
சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் !

நான் உன் உயிரைத் தொட நினைக்கையில்
நீ என் நிழலையும் தள்ளுகிறாய் !

சாதிக்குப் பொட்டிட்டு பூச்சூட்டி
நெற்றியில் ஒற்றைக் காசு வைத்து
பாடைகட்டும் நாள் எந்நாளோ ?

பிறந்து பல நூறு ஆண்டாகியும்
மூப்படைய மறுக்கும்
சாதிச்சதுப்பு நிலத்தில்
உன் விஷ வேர்களால்
நித்தம் மரிப்பது மனிதம் !

அனாதையாய் பிறந்த உன்னை
ஆதரிக்க இத்தனை பேர்களா ?

அணுக்கரு உலை அபாயம்
வெறும் அணு அளவுதான்
சாதிவெறி முன்.

எமனுக்கு நேர்ந்து விட்ட உயிர்கள் - சாதி மக்கள் !

தோலின் நிறம் வேறாயினும்
சாதிப்பேய் குடித்த ரத்தம் ஒரே நிறம்தான் !

அரசியல்வாதியிடமும்
ஆன்மிகவாதியிடமும்
மதவாதியிடமும்
சல்லாபிக்கும்
சாதிப்பரத்தையே !

நீ ஈன்றெடுப்பது
சமூகக்கொல்லி (எயிட்ஸ் ) சமுதாயம் !
சாதிநோய்த் தலைமுறைகள் !

என் மூன்றாம் தலைமுறையும்
முப்பதாம் தலைமுறையும்
சாதி முகமூடியுடன்தான் பிறக்க வேண்டுமா ?!

மூளைச் சலவை செய்யப்பட்ட
மூதாதையர்கள் சொத்தாய் விட்டுச்சென்றது
சாதியும் வறுமையும் !

சாதிக் குப்பையிலும்
சாதிப் புழுதியிலும்
புரண்டு பெற்ற மன அழுக்கை
கங்கையில் கழுவினால் கருமம் தொலையுமா ?
காசியில் புதைத்தால் மோட்சம் கிடைக்குமா?!

சாதிப் பித்துப்பிடித்த
மனநோயாளிகளின் கூடாரமாய்
மானுடம் !

சட்டத்தின் ஓட்டைகளில்
தண்டனையின்றி வெளிவரும்
சாதிப்பைத்தியம் !

சாதி பயத்தில் என் வீரம் அழிக்கப்பட்டு
சாதிக் கூண்டில் என் சுதந்திரச் சிறகுகள் அடைக்கப்பட்டு
சாதிச் சாக்கடையில் என் சுவாசம் நிறுத்தப்பட்டு
சாதித் தீயில் என் ஆன்மா கருக்கப்பட்டு
சாதி விடத்தில் என் நாக்கு தோய்க்கப்பட்டு
சாதி மலத்தில் என் உடல் அமுக்கப்பட்டு
நடைப்பிணமாய் நான் !

சாதியின் மரண ஓலம்
மானுடத்தின் இனிய பூபாளம் !

எழுதியவர் : கவிஞர் சி. அருள்மதி (3-Mar-15, 3:38 pm)
பார்வை : 139

மேலே