கூந்தலற்றகூதல்
உன்னால் ஆகாது
என்னால் மட்டுமே
முடியும்
உனைக் காதலிக்க...
என்னால் ஆகாது
உன்னால் மட்டுமே
முடியும்
என்னைக் காமனாக்க...
காமமும் காதலும்
ஒன்றென்ற புள்ளியின்
முன் முனை நீ...
பின் முனை நான்...
சுழலும் வட்டத்தில்
முக்கோணம்
இதயமாகிறது
ஒரு யோனிச் சிமிழென..
பகலை இரவாக்கும்
இறவா நேரத்தில்
திறவா பார்வை உனது...
தாகமென ஒரு காம நெடுந்துளிர்
சுழியாக கோடை
விதைக்கும்...
முடமாகிப் போன பனி
நீ வந்த பின் முன்பனி,
பின் பளிங்கு சுடர்...
ஆரம்பித்தல் வசம் ஆகிறது
தீரம் அதுவெனில்
உன் நிர்வாண சூடலில்
திக்கற்ற பெருமழை
காதலாகிறது எனக்குள்...
மல்லிகை அடர்ந்த
அக்குள் வாசம்
வேண்டிய இரவெல்லாம்
நீ வேசியாகும் தருணமே
உன்னத காமத்தின்
நான்காம் பால்...
அற்றைத் திங்கள்களை
கொவ்வைச் செவ்வாயில்
கொன்று தீர்க்கும்
மார்பின் வரிகளில் வழிந்தோடும்
எச்சில் துளிகளில்
கடவுளாகி தீர்த்தமாகிறது
மூச்சுத்
திணறும் காற்று...
சாகடித்த பின்னும்
விடிகிறது...
மார்பு பிடித்திருக்கும்
பற்களின் வலியை
தலை துவட்டிய தேநீரில்
தந்து போகிறாய்...
பகல் நீண்டு கிடக்கும் பரிதவிப்பில்
தேநீருக்குள் சுருண்டு கிடக்கிறது
உன் ஒற்றை முடி...
கவிஜி

