கனவே கலைந்து போ பாகம்- 16 துப்பறியும் திகில் தொடர்
முன் கதைச் சுருக்கம்
ஆகஸ்டு இருபது அதிகாலை தொடங்கி ஏழு நாட்களுக்குள் ஆறு பேர் கொலை...உயரதிகாரி ஆனந்த் தலையிடுகிறார்...
................................................................................................................................................................................................
ப்ரியம் அபார்மெண்ட்டில் மப்டியில் இரவு ரோந்துப் பணியில் இருந்தார் கான்ஸ்டபிள் வரதன். அங்கு வருவோர் போவோரை கண்காணிக்க வேண்டியது அவர் வேலை. பாழ்பட்டுப் போன அந்த ஏரியாவில் சொறி நாய் கூட வரக் காணோம். மின் சாதனங்களை கொத்தோடு அகற்றிய பிறகு பேயோ பிசாசோ வராது என்று தெரிந்து தெம்பாக நடந்து கொண்டிருந்தார்.
கால் வலித்தது.
ப்ரியம் அபார்மெண்ட்டில் சேட்டுக் குடும்பம் இருந்த பகுதியின் முன் வளைவில் கால் நீட்டி உட்கார்ந்தார்.
“அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் போலிஸ் வேலைக்கு வரவே கூடாது”...
பீடி பற்ற வைத்துக் கொண்டு தீக்குச்சியை தூக்கி எறிந்தார்.
ஒரு பீடி தீர்ந்தது.
சடசடவென்று சத்தம்.. பூச்சிகளின் கீச்சொலி... ! ! !
அப்படியே திரும்பிப் பார்த்....
வெண்....ண்....ண்ணிற உருவம்.... ! ! !
நந்தினி வீட்டு பால்கனி பக்கமாக.... ! ! !
கை போன்ற ஏதோ ஒன்றை உயர உயர நீட்டி.... ! !
“ பப் பப்.... ” வாய்க்குள் வார்த்தை சிக்க, மூக்கில் ரத்தப் பிசுபிசுப்பு.... ! ! !
அப்படியே மயக்கமானார் ! ! !
டிஎஸ்பி முரளி, ஏசிபி ஆனந்த், டாக்டர் மேனகா மூவரும் கன்னிகாபுரம் சப்வே பகுதியை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
“ மேனகா மேடம், இப்ப சொல்லுங்க, இந்த கொடூரக் கொலை ஒரு வேளை ஆவி அடிச்சதா மத்தவங்களை நம்ப வைக்க செய்திருக்கலாமில்லையா? ” ஆனந்த் கேட்டார்.
“ நான்தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே ஆனந்த், கேஸை திசை திருப்ப பிணத்தைதான் சிதைப்பாங்க; இங்க, பாறாங்கல்லை தூக்கிப் போட்டுத்தான் கொலையே நடந்திருக்கு.”
“ ஏன் பிணத்து மேல பாறாங்கல்லை தூக்கிப் போடக் கூடாதா? ”
மேனகா ஆனந்த்தை கொலை நடந்த இடத்தை கவனித்துப் பார்க்கச் சொன்னார். அப்படியே “ ஒருத்தருக்கு உயிர் போயிட்டா அடுத்து என்ன நடக்கும் ? ” என்று கேட்டார்.
“ ம்...ம்...ம்...சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புவாங்க; பந்தல் போடுவாங்க... ”
முரளி சட்டென்று சிரிப்பை அடக்க, மேனகா முறைத்தார்.
“ மாலை போடுவாங்க; பாடை கட்டுவாங்க... அதை யார் கேட்டா? இதயம் துடிக்காது; இரத்தவோட்டம் நின்னுடும்- சரியா? ”
“ ஓ, அதைக் கேட்டீங்களா? சரி.. ”
“ அப்போ பிணத்து மேல பாறாங்கல்லை தூக்கிப்போட்டா ரத்தம் பீச்சியடிக்குமா இவ்வளவு தூரத்துக்கு? ”
ஆனந்த் சிந்தனை வயப்பட்டார். மேனகா சொல்வது சரியோ சரி ! ! ! அதில் மாற்றுக் கருத்தில்லை...
“ இப்ப இன்னொரு விஷயம் நான் சொன்னா உனக்கு மயக்கமே வந்திடும்... ” மேனகா தொடர்ந்தார்.
“ சொல்லுங்க.. ”
“ சடலத்துக்கு பக்கத்துல கிடந்ததே சூட்கேஸ்... அது மேல ரத்தக்கறை இல்ல ! ! ! அடியில மட்டும்தான் ரத்தக்கறை இருந்தது; மண்ணும் இருந்தது ! ! !
இது என்ன விசித்திரம்? ஒரு பெண் சூட்கேஸை தரையில் வைத்து விட்டு நிற்கிறாள்.. பாறாங்கல் தாக்கி ரத்தம் பீச்சியடித்தால் சூட்கேசின் மேல் பாகம்தானே ரத்த சகதியாகும்? பக்கவாட்டிலும் ரத்தம் படும்..... ஆனந்த்துக்கு உண்மையிலேயே மயக்கம் வந்தது.
“ சடலத்தோட சிதைஞ்ச காதுல தங்கத் தோடு இருந்தது; கழுத்துல தங்கச் சங்கிலி. கையோட நசுங்கிப் போன ஒரு ஜோடி பவுன் வளையல் இருந்தது; இது தவிர கவரிங் சங்கிலி, அமுக்குத்தோடு, ஒரு ஜோடி கவரிங் வளையலும் இருந்தது... ”
“ இதுக்கு என்ன அர்த்தம்? ”
“ இந்த இமிடேஷன் அயிட்டங்களை கொலையான பொண்ணு யாருக்கோ வாங்கி வந்திருக்கணும்; இல்ல, கொலையாளி போட்டிருக்கணும்... ! ! ! ”
“ மேடம் ! ! ! ”
இப்போது முரளி பேசினார்.
“ சார், சடலத்துல இருந்து பதினைஞ்சு அடி தொலைவில ஒரு மெட்டி கிடைச்சது ! ! ”
“ அப்ப கொலையாளி ஒரு பெண்ணா? அதுவும் கல்யாணமானவளா? ”
“ சார், ஒரு பெண்ணால பாறாங்கல்லை தூக்க முடியும்னா அந்த அளவு திடகாத்திரமான பொண்ணு நம்ம மேனகா மேடம்தான். இவங்களை அரெஸ்ட் பண்ணலாம்னா இவங்க கல்யாணம் ஆகாதவங்க....! ”
ஆனந்த் சிரித்தார்.
“ சார், உங்க இன்பார்மர் பிரசாத் எப்படி? ”
“ நல்ல பையன்தான் சார். அவனுக்கு மெடிக்கல் ரெகார்டுல கொஞ்சம் பிரசினை இருக்கு; போலிஸ் ரெகார்ட் க்ளீன்... ! ”
“ இந்த கேசுல அவர் எப்படி வந்தார்? ”
“ அவரா வரல்ல சார்.. திக்கு திசை தெரியாம ஒரு பெண் சடலத்தை வச்சிட்டு போலிஸ் திணறினபோது யாரும் அடையாளம் காட்ட முன் வரல்ல. அப்ப நான்தான் பிரசாத் பேரைச் சொன்னேன். இந்த ஏரியாவில போதை மருந்து கடத்தல் பத்தி முதல்ல தகவல் சொன்னது பிரசாத் தான். பிரசாத் மனுஷாளுங்களை ஈசியா புரிஞ்சிக்குவான்.. அவன் இல்லாட்டி கேஸ் இந்த அளவு நகர்ந்திருக்காது.. ”
“ ஏன், ஆகஸ்டு இருபத்தி ஆறாம் தேதி நாலு மணியில இருந்து ஆறு மணி வரை பிரசாத் டிபார்ட்மெண்ட்டுல தானே இருந்தான்... அப்ப அவன் சொன்னதை வச்சுத்தானே ஹாலோகிராமை கை பற்றினாங்க... ! ” – இது மேனகா.
“ சரி, இந்த கேஸ் விஷயத்துல நடந்த திருப்பங்கள் பிரசாத்துக்கு தெரியுமா? ”
“ தெரியாது சார்; பிரசாத்துக்கும் போலிஸ் நடவடிக்கை தெரியும்; அவனும் எங்களை சங்கடப்படுத்துறது இல்ல ! ”
“ தட்ஸ் குட் ! ”
அதே சமயம் ஆனந்த்துக்கு கைபேசி சிணுங்கியது. பேசி விட்டு நிமிர்ந்தார்..
“ சார் ! மேடம் ! நேத்து ரோந்து பார்த்த வரதன் ஹாலோகிராம் இல்லாமலே வெண்ணிற உருவத்தை பார்த்தானாம்... பிபி அதிகமாகி ஐசியுவில படுத்திருக்கான்... ! ”
மூவரும் பிரமித்தனர்; ப்ரியம் அபார்மெண்ட்டை நோக்கி நடந்தனர்.
இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் சப் இன்ஸ்பெக்டர் காந்தனும் பஞ்சாபகேசன் வீட்டைச் சோதனையிட்டனர். வீட்டு மனிதர்களை பேட்டி கண்டனர்.
பஞ்சாபகேசனின் மனைவி சாதாரண இல்லத்தரசிதான். விதவைக் கோலம் பூண்டிருந்தாள். நல்ல உயரம்; நல்ல எடை.. ! கணவன் மேல் ஏகத்துக்கு சொந்தம் கொண்டாடுபவள்... ! முன்கோபி வேறு. கணவனிடம் சிரித்துப் பேசிய வீட்டு வேலைக்காரியை பிரஷர் குக்கரால் அடித்த அடியில் அவள் ஓடியே போய் விட்டாளாம்... !.
பஞ்சாபகேசன் மகன் திருமணத்தை நிச்சயதார்த்தம், கல்யாணம், ரிசப்ஷன் என்று மூன்று நாட்களுக்கு ஜமாய்த்திருக்கிறார். நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்தது மங்களா எனப்படும் ஏஜென்ஸி.
ஏஜென்ஸி ஆட்களோடு வெளியாட்களும் வேலை செய்திருக்கின்றனர். அறுபது பேர் மூன்று நாட்களுக்கு!
இதில் இன்னொரு விவரம் தெரிய வந்தது. அறுபது பேர் கணக்கு காட்டப்பட்டாலும் உண்மையில் வேலை செய்தது நாற்பத்தெட்டு பேர்! மீதி பன்னிரெண்டு பெயர்கள், அடையாள அட்டை எல்லாம் போலி. நமது நாட்டுக்கே உரிய ஊழல் கலாச்சாரப்படி இல்லாத பன்னிரெண்டு ஆட்களுடைய சம்பளம் மானேஜரின் பாக்கெட்டுக்குள்....!
ஆகஸ்டு இருபத்தி ஏழு அன்று அதாவது பஞ்சாபகேசன் இறந்த நாளன்று மட்டும் இல்லாத ஒரு பெயருக்கு நேராக ஒரு கையெழுத்து இடப்பட்டிருந்தது! இல்லாத அந்த ஒரு பெயர்- பிரசாத்! அதாவது ஏஜென்ஸியில் பிரசாத் என்று யாருமில்லை! கணக்கு காட்டுவதற்காக மானேஜரால் உருவாக்கப்பட்ட கற்பனை பெயர் அது. அந்தப் பெயருக்கு நேராக கையெழுத்து இடப்பட்டு நந்தினியின் வீட்டு விலாசம் எழுதப்பட்டிருந்தது !
பாழாய்ப் போன அந்த கையெழுத்து பிரசாத்தின் கையெழுத்தோடு ஒத்துப் போகவில்லை! ஜெபமணி இல்ல ஆட்களோடும் ஒத்துப் போகவில்லை! ரெஹெனா தொழில் நுட்பப் பூங்காவினர் கையெழுத்தாகவும் இல்லை; முழுக்க முழுக்க தான்யாவின் கையெழுத்தோடு ஒத்துப் போனது! நந்தினியின் கையெழுத்தோடு ஓரளவு ஒத்துப் போனது ! ! ! ! ! !
தொடரும்

