மதில்கள்

எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே மூன்று மாடி உள்ள ஒரு வீடு. வீடு என்றால் பங்களா என்று சொல்வார்களே அது போல. ஒரு பெரியவரும் வயதான அம்மாவும் மட்டும்தான் அங்கு குடியிருக்கிறார்கள். ஒரு நடுத்தர வயது பெண்மணி வீட்டு வேலைக்காக தினசரி வந்து போவதுண்டு. மற்றபடி வாரம் இரண்டோ மூன்றோ முறை ஒரு தோட்டக் காரன் வருவதுண்டு.
"சார் ! இந்த வேப்ப மர வேரால காம்பௌண்டு சுவரில் விள்ளல் விழுந்திருக்கு ! ஏதாவது பண்ணியாகணும்" தோட்டக் காரன் ஒரு பத்து நாட்களுக்கு முன் உரத்த குரலில் முதியவரிடம் சொல்லி கொண்டிருந்தது என் வீடு மொட்டை மாடியில் இருந்த எனக்கு கேட்டது.
முதியவர் கொஞ்சம் தாழ்த்த குரலில் என்னவோ சொன்னார். "அப்படியா சார் " தோட்டக்காரன் மிக மகிழ்ச்சியான குரலில்.
அந்த வேப்ப மரம் அந்த வீட்டில் இடது பக்க காம்பௌண்டு சுவர் அருகே இருந்தது. இடது பக்கம் நாலு முக்கு சாலை சந்திப்பானதால் அந்த பெரிய இடத்தில் ஒரு வணிக கட்டிடம் கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது . அங்கு ஒரு தற்காலிக குடிசை. வாட்ச்மேன் என்று சொல்லப் படும் ஒரு கணவனும் அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் தான் தங்கி இருக்கிறார்கள். மனைவி கட்டிட வேலைக்கும் போகிறாள் போல் உள்ளது.பெரியது ஆண் குழந்தை ஐந்து வயதிருக்கலாம். சிறியது பெண் குழந்தை மூன்று வயதிருக்கும் . இரண்டு குழந்தைகளும் அங்கு கொட்டப்பட்டிருக்கும் மணல் குவியல்களில் விளையாடிக் கொண்டிருக்கும்.
கடந்த ஒரு வாரமாக எதிர் வீட்டில் ஒரே களேபரம். அந்த வீட்டின் மகனும் மருமகளும் இரண்டு குழந்தைகளும் வந்திருக்கிறார்கள். விடுமுறையில் வந்திருக்கலாம்.
"அமெரிக்காவில் இருந்தாம்" எனது மனைவியின் தகவல். மூத்த பெண் எட்டு வயதிருக்கலாம். இரண்டாவது பையன் ஏறத்தாழ அந்த வாட்சுமேனின் முதல் பையனின் வயதிருக்கலாம் . தோட்டக் காரன் இப்போதெல்லாம் தினமும் காணப் படுகிறான். தோட்ட வேலை அல்லாது வேறு வெளி வேலைகளுக்கும் உதவ வருகிறான் என்று நினைக்கிறேன்.
அந்த வீட்டு முதியவருக்கு இப்போது வயது குறைந்தது போல உற்சாகமாய் காணப் படுகிறார். எப்போதும் பேரப் பிள்ளைகளுடன் விளையாட்டுத்தான் . புத்தம் புதிய சிறிய சைக்கிள் ஒன்றில் பேரப் பிள்ளைகள் வீட்டைச் சுற்றி ஓட்டிக் கொண்டே தாத்தாவை படாத பாடு படுத்திருக்கிறார்கள்.
அந்த பையன் கம்பௌண்டு சுவர் அருகே இருக்கும் துணி தவிக்கும் கல்லின் மீது ஏறி எட்டிப் பார்த்து அந்த பக்கம் மணலில் விளையாடிக் கொண்டிருக்கும் வாட்ச்மேனின் குழந்தைகளை ஆர்வமாய் பார்த்து கொண்டு சிரிக்கிறான். எண்ணெய் காணாத பரட்டைத்தலை குழந்தைகளும் அந்த பையனை வா வா என்பது போல் கையசைக்கிறார்கள். கையில் இருக்கும் உயர்ந்த ரக சாக்கலேட்டு பாக்கெட்டை எத்தி நின்று அந்த குழந்தைகளுக்கு கொடுக்க எத்தனிக்கிறான் அமெரிக்க குழந்தை. முடியாத போது "கேட்ச் இட்" என்று கத்தியவாறே இங்கிருந்து அந்த குழந்தைகளுக்கு எறிந்து கொடுக்க அதை பிடிக்க முடியாமல் கீழே விட்டு பின்னர் எடுத்து கொண்டனர். பையன் இங்கிருந்தே அதை எப்படி பிரிப்பது என்பதை சைகையால் சொல்லி கொடுக்கிறான். அதைப் பிரித்து வாயிலிட்ட அந்தக் குழந்தைகள் முகத்தின் பிரகாசம் அந்த மாதிரி தின்பண்டத்தை முதல் முதலாக சாப்பிடுகிறார்கள் என்பதைக் காட்டியது.
அந்த சமயத்தில் அங்கு வந்த தோட்டக் காரன் " தம்பி !அந்த சுவர் பக்கம் போகாதப்பா! அதில் விள்ளல் விழுந்திருக்கு பாரு! " எச்சரித்து விட்டுப் போகிறான்.
மீண்டும் அடுத்தடுத்த இரண்டு நாட்களும் காலை யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த எதிர் வீட்டு ஆண் குழந்தை அந்த கல் மேல் ஏறி நின்று மணல் விளையாட்டை ஆசையோடு ரசிப்பதையும் சாக்லேட் எறிந்து கொடுப்பதையும் என் வீட்டின் வெளி வராந்தாவில் இருந்து செய்தித்தாள் படிக்கும் நான் ரசிப்பது வழக்கமாகி விட்டது.
முந்தைய நாள் இரவு இடியோடு கூடிய நல்ல மழை. நகரத்தின் வெப்பம் கொஞ்சம் குறைக்கும் என்று நகர வாசிகள் அனைவரும் சிந்தித்துக் கொண்டு இருக்கும் நேரம் மின்சாரமும் போய்விட்டது. காலை கொஞ்சம் நேரம்கழித்து எழுந்து மனைவி கொடுத்த டீயும் செய்தித்தாளையும் எடுத்துக் கொண்டு வெளி வராந்தாவில் உட்கார்ந்த படியே எதிர் வீட்டை நோட்டமிட்டேன்.
அந்த வீட்டு பெரியவர்களும் தோட்டக் காரனும் எல்லாரும் அந்த காம்பௌண்டு சுவர் அருகே குழுமியிருந்தனர். அந்த வேப்பமர வேர் விளைவித்த விள்ளல் விரிந்து நேற்றைய மழை காரணமாகவோ என்னவோ அந்தச் சுவர் இரண்டு மூன்றடி அளவில் இடிந்து போயிருந்தது.
அதை சரிசெய்யும் பேச்சு நடந்து கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்க மருமகள் மகன் எங்கே போனான் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டிருந்தாள். " பிரதீப் ! பிரதீப் !" என்று அவர்கள் உரத்த குரலில் அழைக்கத் தொடங்கினர்.
" ஐயம் ஹியர் மாம் " என்று அடுத்த பக்கத்திலிருந்து பையனின் குரல். சாக்லேட்டை அவசரமாக அந்த குழந்தைகளிடம் கொடுத்து விட்டு மணலில் புரண்டெழுந்ததால் உடையை சரி செய்து கொண்டே அவசரமாகத் திரும்பினான் அந்த அமெரிக்க குழந்தை !
"ஒ ! மை காட்!" என்று அந்தப் பெண்மணி கூவ உடைந்த சுவரின் இடைவெளி வழியாக எதோ புதிய அனுபவம் கண்டது போல் சிரித்த முகத்துடன் இந்தப்பக்கம் வந்துகொண்டிருந்தான் அந்த சுட்டிப்பையன் !