அது வரலாறு
அது வரலாறு..!
22 / ௦4 / 2025
என்னோட வாழ்க்கை அது வரலாறு
கதையை கேட்டு நீயும்தான் முன்னேறு.
பள்ளிக்கூட வாசலை என்றும் மிதிச்சதில்ல
வாத்தியார் முன்கை கட்டி நின்னதில்ல
கட்டுக்கட்டா புத்தக மூட்டை சுமந்ததில்ல
சுட்டுக் போட்டாலும் கணக்குப்பாடம் புரிஞ்சதில்ல
கரடுமுரடு பாதை எந்தன் புத்தகமய்யா
அந்த பயணத்துல கத்துகிட்ட பாடமய்யா
முன்னோர்கள் கதையை கேட்டு
சரித்திரத்தை தெரிஞ்சிக்கிட்டேன்.
மண்ணோடு காதல் கொண்டு
பூகோளம் கத்துக்கிட்டேன்.
கைவிட்டு எண்ணியெண்ணி
கணிதத்தை அரிஞ்சிக்கிட்டேன்.
ஏற்ற இறக்க வாழ்க்கையில
எக்கனாமிக்ஸ் கத்துக்கிட்டேன்
வியர்வை சிந்தி உழைப்பதால
விவசாயம் புரிஞ்சிக்கிட்டேன்
வானத்தை பாத்துபாத்து
வானசாஸ்திரம் தெரிஞ்சிகிட்டேன்
காலமாற்றம் கண்ணில் கண்டு
பருவநிலை படிச்சிகிட்டேன்..
கள்ளமில்லா மனதை கொண்டு
இறையாண்மையை புரிஞ்சிக்கிட்டேன்
மரியாதை தந்து நடக்கையில்
வாழ்வியலை தெரிஞ்சிக்கிட்டேன்
பசியெடுத்து சாப்பிடையில
ஆரோக்கியம் பற்றி புரிஞ்சிக்கிட்டேன்
நேர்மறை எண்ணங்களினால்
சட்டத்திட்டம் தெரிஞ்சிகிட்டேன்.
அனுபவம் தரும் பாடம் - அது
அர்த்தமுள்ளது என்று
போகப்போகப் புரிஞ்சிக்கிட்டேன்
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதென்று
வாங்கிய அடியில் வலுவாக தெரிஞ்சிக்கிட்டேன்
ஏடு படித்து வாங்கும்பட்டம்
வெறும் காகிதப் பட்டமடா
பாடுபட்டு வாங்கும் பட்டம்
அது தெய்வீக பட்டமடா