சமர்ப்பணம்
சமர்ப்பணம்...
17 / 10 / 2025
"பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்து கொண்டதடா. மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா" காற்றில் மிதந்து வந்தது பாடல். கண்ணதாசனின் வரிகளும் TM சௌந்தராஜனின் குரலும் உள்ளத்தின் வேர் வரை பாய்ந்து என்னவோ செய்தது. அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை என்னை நானே சுய பரிசோதனை செய்யத் தூண்டியது. விழித்தது முதல் உறங்குவது வரை தினமும் என்னுள் நடக்கும் இந்த குருஷேத்திர போர் என்னை சிந்திக்க வைத்தது. உண்மைதான். சிலநேரம் நல்ல சிந்தனைகளும்.. நல்ல செயல்களும் என்னை தெய்வ நிலைக்கு உயர்த்தி கொண்டாட வைக்கிறது. பல சமயம் கீழ்த்தரமான மட்டரகமான சிந்தனைகளும் செயல்களும் செய்தும்..செய்ய தூண்டியும் அந்த மிருகம் என்னை ஆட்கொண்டு.. என்னை மிருகமாக்கி கொக்கரித்து சிரித்து ஆனந்த தாண்டவம் ஆடுவதையும்.. அதை அனுபவிக்கும் பொதும்...கண்ணதாசா நீ சொன்னதுபோல் உனக்கு மரணமே இல்லையப்பா. நீ அனுபவித்தைதை.. உன் அனுபவத்தைத்தான் அந்த பாடலில் பதிவு செய்து விட்டு மறைந்து விட்டாய். நீ மறைந்தாலும் அந்த பாடலில் இன்னும் உயிரோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறாய். இன்றைக்கு அல்ல..இந்த உலகம் இருக்கும் வரை அந்த உண்மை உனக்கு மட்டுமா? உலகில் பிறந்த அத்தனை மனிதர்களுக்கும் அது பொருந்தி வரும். உன் மொழி ஆளுமை.. அதிலிருக்கும் எளிமை..அது உணர்த்தும் உண்மை.. சொல்ல வார்த்தைகள் இல்லை. இறையைப்போல்..இயற்கையைப்போல் உணரத்தான் முடியும். உணர்ந்து அனுபவிக்கத்தான் முடியும்.
எண்ணிப்பார்க்கிறேன்..சில சமயம் ஏசுவும்.. புத்தனும், கீதையும்.. குரானும்.. வேதாகமமும்..எச்சரிக்கை செய்து என்னை நெறிப்படுத்த முயலுகின்றன. என்னை பேராபத்திலிருந்து காப்பாற்றி,நேர் வழியில் வழி நடக்க தூண்டுகின்றன. மனதில் சாந்தமும்,அமைதியும் கூடி வர எல்லா வழிகளிலும் முயற்சி செய்கின்றன. என் முகமும் ஏன்? என் உடல் மொழியும் என்னை ஒரு சித்தர் நிலைக்கு கொண்டு செல்கின்றன. எல்லோரும் என்னை வணங்கும்படி உயர்த்துகின்றன. நேர்மறை எண்ணங்களாலும்..உயர்ந்த சிந்தனைகளாலும் என் மனதை நிரப்பி.. ஒரு தேஜஸ் என்னை சுற்றி உருவாக்கி பிரகாசிக்க வைத்து.. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நான் அனுபவிக்கிறேன். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும். அதை அனுபவிக்காமல் ஒருவரும் இருக்க முடியாது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
நீரில் தோன்றி..பல வண்ணங்கள் காட்டி சட்டென உடைந்துபோகும் நீர்குமிழிபோல் அந்த தெய்வீக அனுபவம் சட்டென மாறி.. இப்போது பெருகிவரும் CG ..AI ..தொழில்நுட்ப வலை பின்னலில் உருவாகும் மிகை படுத்தப்பட்ட மிருகமாய்.. கொஞ்சம் கொஞ்சமாய் என் முகம்..என் உடல் கூறு மாற்றம் கொண்டு..உடல் முழுதும் ரோமகளாலும்..கோர பற்களாலும்.. கூறிய நகங்களாலும் மயிர் சிலிர்க்க உடல் நடுங்க.. குரல் கூப்பாடு போட..மரணக் கூத்து ஆட ஆரம்பித்து விடுகின்றேனே..என்ன செய்ய? காரணம்.. மும்மலங்களான ஆணவம்..கன்மம்..மாயை ஆகியவற்றால் ஏற்படக்கூடிய காமம்..க்ரோதம்..லோபம்.. மோகம்.. அகங்காரம் ..மதசர்யம் ஆகிய அக எதிரிகளெல்லாம் சேர்ந்து ஓர் உரு கொண்ட மிருகம் என்னை ஆட்கொண்டு என் சிந்தனையை..என் செயலை.. என் நாளை..நிமிடங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கி நடுத்தெருவில் நிறுத்தி எகத்தாளமாய் கொக்கரித்தது.
தெய்வமென்றால் ஒரு தெய்வம்தான் ஆட்கொள்கிறது. அதே மிருகமென்றால் ஒன்றா?.. இரண்டா?..ஓராயிரம் பேய்கள் பிடித்து ஆட்டுகின்றதே. அந்த ஆட்டத்தில் நான் செய்வது என்னவென்றே தெரியாமல் நானும் ஆடித் தொலைக்கிறேனே. சரீரத்தில் இளமை இருக்கும் வரை..ரத்தம் சூடாக ஓடும்வரை மிருகத்தின் ஆட்சிதான் ஓங்கி இருக்கிறது. இது ஒரு கசப்பான உண்மை. ஆனால் இதை யாரும் மறுக்கவும் முடியாது. ஒதுக்கவும் முடியாது. அனுபவித்து.. தாண்டித்தான் வர வேண்டும். கொஞ்சம் உட்கார்ந்து..உங்களை அசுவாசிப் படுத்திக்கொண்டு அலசிப் பாருங்கள். உண்மை புரியும். இளமை மாற மாற..ரத்தம் சுண்ட சுண்ட.. மிருகத்தின் ஆளுமை குறைந்து தெய்வத்தின் அரவணைப்பு ஓங்கி ஆட்கொள்ளுகிறது. இதுவும் உண்மைதான்.அனுபவியுங்கள். இந்த நிலையையும் கண்ணதாசன் பதிவு செய்து விட்டான். " ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா.. அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா" என்றும் " ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா.. ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா. தர்மதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா" என்று முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார். தெரிந்தோ தெரியாமலோ இன்று கண்ணதாசன் நினைவு நாள். அவருக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன். " நான் படைப்பதினால் என் பேர் இறைவன். நான் நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை." வசிஷ்டர் வாக்கு. கண்ணதாசா உன் தாள் பணிந்தேன். இந்த படைப்பு மாலையை உனக்கு சுட்டி வணங்குகிறேன்.