நாடகக்கலை பண்டைய காலத்தில் ஏன் காணப்படவில்லை

நாடகக்கலை பண்டைய காலத்தில் ஏன் காணப்படவில்லை?

குறிப்புக்கு எடுத்துக்கொண்ட நூல்: “நாடகத் தமிழ்”
எழுதியவர்: பம்மல் சம்பந்தனார்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
முதல் பதிப்பு.2019, இரண்டம் பதிப்பு.2022, மூன்றாம் பதிப்பு:2023
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல
பதிப்பாசிரியர்: முத்தையா வெள்ளையன்

சங்க காலம் தொட்டு இன்றைய நூற்றாண்டு காலம் வரை பல்வேறு தமிழ் அறிஞர்கள், புலவர்கள் வாழ்ந்து மறைந்து போயிருகின்றனர். அவர்களில் ஒருவராவது தமிழ் நாடகம் இயற்றியதாக கேட்டறிந்திருக் கிறோமா? அதற்கான காரணம் என்ன?
சங்க காலத்தில் நாடக இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் , இதற்கு முக்கியமான அத்தாட்சி அநேக நாடக இலக்கணங்கள் வகுக்கப்பட்டி ருந்ததே அத்தாட்சி. எப்படி இலக்கியங்கள் இல்லாமல் இலக்கணங்கள் பிறந்திருக்காதோ, அது போல நாடகங்கள் இல்லாமல் நாடக இலக்கணம் தோன்றியிருக்க வாய்ப்பு இல்லை.
அக்காலத்திய நாடகங்கள் இறந்து பட்டதற்கு காரணம் எதுவென யோசிக்கையில் பூர்வீக தமிழ் நூல்களெல்லாம் ஓலை சுவடிகளில் வரையப்பட்டிருந்ததே. இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் காகிதங்களில் தமிழ் புத்தகங்கள் அச்சில் வெளிவந்துள்ளன.
அப்படிப்பார்க்கையில் ஓலைச்சுவடிகளில் ஏதேனும் நாடகங்கள் எழுதப்பட்டிருப்பின் அது காலத்தின் அரிப்பால் அழிந்து போயிருக்கலாம் அல்லவா?
இதற்கு உதாரணமாக சொல்வதென்றால் “அடியார்க்கு நல்லார்” தம் காலத்திற்கு முன்பே சில “நாடக கிரந்தங்கள்” இறந்துபட்டன என்று கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை ஒட்டி வட இந்தியாவில் கூட ஜாக்கிரதையாக பாதுகாக்கப்பட்ட சமஸ்கிருத நாடகங்கள் அநேகம் இறந்து போயின. ரவதம்னிகா, கர்ப்பூர மஞ்சரி, நமவதி, விலாசவதி, சிங்காரதிலகா, தேவமாதவா, மாயகாபாலிகா, கனகவதிமாதவா, முதலிய பூர்வீக சமஸ்கிருத நாடகங்கள் அழிந்து விட்டன.
சம்ஸ்கிருத நாடகங்களை விடுங்கள், தேவார பாக்களில் எத்தனை ஆயிரக்கணக்கனவை பாதுகாப்பார் இன்றி பாழ்பட்டு விட்டன, “திருஷேத்திர கோவைகளில்” நமது சமய குரவர்களால் குறிக்கப்பட்டிருக்கும் அநேக “ஷேத்திரபாடல்கள்” முற்றிலுமே அழிந்து விட்டன.
திருவொற்றியூர் தேவாரத்தில் “ஓம்பினேன் கூட்டைவாளா” “மனம் என்னும் தோனிபற்றி” இரண்டு பாக்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
கடைச்சங்கப் புலவர் காலத்தில் தமிழ் நாடகங்கள் எழுதப்படாமைக்கு மற்றொரு காரணம், அக்காலத்து சிறந்த புலவர்களுள் அநேகர் புத்த ஜைன மதத்தை தழுவியிருந்ததால் இல்வாழ்க்கையை துறந்து துறவு வாழ்க்கையை மேல் நோக்கியே எழுதியதால் நாடகத்தமிழின் பக்கம் பார்வை செல்ல வாய்ப்பில்லை.
அடுத்தது தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாமல் இருந்தது. இராஜராஜன் காலத்தை தவிர மற்ற மூவேந்தர்கள் காலத்தில் இருந்த முரண், அடுத்து களேபர், பல்லவர், சாளுக்கியர்கள், இவர்களின் ஆதிக்கம்,அடுத்து முகம்மதியர் படையெடுப்பு,அவர்களுக்கு பிறகு விஜயநகர அரசு, அடுத்து பிரெஞ்சு, பிரிட்டிஷார், இப்படி வந்ததாலும் இருக்கலாம்.
இப்படி ஒரு சந்தேகம் எழலாம், பூர்வீக கிரந்தங்களில் திருக்குறள், மணிமேகலை, “ஜீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, முதலியவை நசியாமலிருக்க தமிழ் நாடகங்கள் மட்டும் எப்படி நசிந்திருக்கும்?
அத்ற்கு இப்படி ஒரு காரணம் சொல்லலாம், ஓலைச்சுவடிகளில் எழுதப்படும் கிரந்தம் அழிவதற்கு முன் வேறொரு ஓலைச்சுவடியில் எழுத வேண்டும். ‘சமஸ்கிருத’ வேதம் அப்படி எழுதப்பட்டு பாதுகாத்ததால் இன்று வரை இருக்கின்றன. தமிழ்நூல்கள் இப்படி வழக்கம் கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை. இதற்கு காரணம் ஆட்சியில் எப்பொழுதும் குழப்பமான நிலைமை, படையெடுப்புக்கள் இவைகளால இத்தகைய பணிகள் நடக்காமல் இருந்திருக்கலாம். நிலையான அமைதியான ஆட்சி நடைபெறும் காலத்தில் இப்படிப்பட்ட இலக்கிய பணிகள் மனமுவந்து மேற்கொள்வார்கள், ஆனால் நம் தமிழ் நாட்டில்…?
இன்னொனெறும் “ஜீவக சிந்தாமணி” போன்ற நூலை பழைய ஓலை சுவடியிலிருந்து புதிய ஓலை சுவடிக்கு மாற்றுவது அவ்வளவு எளிதான வேலை அன்று.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது, பூர்வகாலத்தில் தமிழ் நாட்டில் வழங்கிய நாடகங்கள் பெருமளவு அழிந்து போனதற்கு கடலின் ஆக்ரமிப்பு என்றும் சொல்லலாம். கடல் கொள்ளை கொண்டதற்கான உதாரணங்களாக பூர்வ மதுரை, கொற்கை, காவிரிபூம்பட்டினம், இவைகளை சொல்லலாம்.
இன்னொரு காரணமும் சொல்லலாம், புலவர்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையின்மை. ஒருவர் மற்றொருவரின் நூலை மதிக்கவில்லை. அதன் மீது ‘அசூயை’ அடைபவர்களாக இருந்திருக்கின்றனர். உதாரணமாக “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியார்” முதலிய தமிழ் அறிஞர்களால் அரிய நூலெறன்பதற்கு உரிய எழுதப்பட்ட “திருக்குறளை” வெகு ஆட்சேபனை செய்தே ஏற்றுக்கொண்டனர். இப்படிபட்டவர்களால் இழிவாக எண்ணப்பட்ட நாடக நூல்களை பற்றிய எண்ணம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் இவர்களுக்கு?
இன்னொரு கேள்வி பூர்வீக காலத்தில் நாடகங்கள் இருந்திருந்தால் பூர்வீக கவிஞர்களில் ஒருவர் கூட ஏன் எழுதவில்லை?
பூர்வீக காலத்தில் சற்றறிந்தோர் நாடகப்பாத்திருங்களாயிருந்து நாடகங்களை நடித்த போதிலும், வர வர நாடகங்கள் பாமரர்கள் கையிற்பட்டு நிந்தைக்குகுரியவையாயின. இதனால் பிற்காலத்தில் நாடகங்களும், நாடகமாடுபவர்களும் ஈனஸ்திதிக்கு வந்து விட்டனர்.
“சேக்க்ஷ்பியர்” காலத்திற்கு முன்பு வரை நாடகங்கள் இங்கிலாந்தில் கெளவரப்படுத்தப்படாமையாகத்தான் இருந்தன என்பது இதற்கு ஒரு சான்று. தேவார திருவாசக பதிப்பகங்களில், இறைவனை “கூத்தன்” எனும் பெயரை மிகவும் சாதாரணமாக நமது சமய குரவர்கள் உபயோகிக்கின்றனர். இருந்த போதிலும் நாடகமாடுபவர்கள் மாத்திரம் எக்காலத்திலும் தாழ்வாகவே மதிக்கப்பட்டனர்.
ஆரியர்கள் வரத் தொடங்கிய அகஸ்தியர் காலம் முதல் அவர்களுடைய நாகரீகத்திலுள்ள சாராம்சங்களை தமிழர் எடுத்து கொண்டாடினர் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று.
அடுத்து விவாதத்துக்குரிய ஒரு கேள்வி, தமிழ்மொழிக்கு நாடக மென்பதே கிடையாது, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து எடுத்து கொள்ளப்பட்டது என்று கூறுகிறார்கள்.
இதற்கு விடை “இயல் இசை நாடகம்” எனும் முப்பிரிவில் நாடகம் என்னும் பதம் சமஸ்கிருதம் என்பதாம். இதை நாம் ஒப்புக்கொண்டாலும், நாம் அக்காலத்தில் “கூத்து” என்றே வழங்கி வந்திருக்கிறோம். நாடகம் என்பதே கூத்தின் ஒரு பிரிவுதான். “கதை தழுவி வரும் கூத்து” என நாடகத்தை கூறலாம்.
அதன்படி நாடகங்களை பிரிவுகளாக பிரிப்பின், அகக்கூத்து, புறக்கூத்து, வேத்தியல், பொதுவியல், வரிக்கூத்து, வரிச்சாந்திக்கூத்து, சாந்திக்கூத்து, வினோதக்கூத்து, இயல்புக்கூத்து, தேசீக்க்கூத்து, முதலான பிரிவுகள் சமஸ்கிருதத்தில் இல்லை
அது மட்டுமல்ல இருவகை கூத்தைபற்றி கூறும்போது ஆரியம், தமிழ் என ஒரு வகை பிரிவு கூறப்பட்டிருப்பதால் ஒன்றிலின்று மற்றொன்று உண்டானதல்லவென்று நிருபிக்கிறது.
இதை தொடர்ந்து இந்த நூல் சமஸ்கிருத நாடகங்களுக்கும் தமிழ் நடகங்களுக்கும் உள்ள வேறு பாட்டை விளக்குகிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Oct-25, 11:13 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 5

மேலே