முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் ஆக – முத்தொள்ளாயிரம் 54

நேரிசை வெண்பா

முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் ஆகத்
தடித்த குடர்திரியா மாட்டி - எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம். 54 - முத்தொள்ளாயிரம், சோழன் 29

பொருளுரை:

செம்பியன் மரபில் வந்த குழந்தையாகிய சோழவேந்தன் போரிட்ட போர்க்களம், முடியையுடைய தலைக்குரிய வெண்மையான மண்டையோட்டை அகலாகக் கொண்டு, மூளையை நெய்யாக ஊற்றி, தடித்த குடலைத் திரியாக மாட்டி, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துப் பேய்கள் விளக்கேற்றும் தன்மையுடையது.

பகைவர்களின் உடல் உறுப்புகளாகிய மண்டையோடு, மூளை, க்டல் ஆகியவை கொண்டு விளக்குகள் அமைத்து விளக்கேற்றின என்பது சோழர்களின் வெற்றியைப் பேய்களும் கொண்டாடின என்னும் கற்பனை அமைந்த பாடல்.

செம்பியன் என்பவன் சோழர்களின் முன்னோன்; ‘தொடித்தோட் செம்பியன்’ என்று சிலப்பதிகாரம் அவனைக் குறிப்பிடுகிறது.சோழ மன்னர்கள் அவன் மரபில் தோன்றியதால் சேஎய் எனப்பட்டனர்.

பதவுரை: பேஎய் – பேய், விளக்கயரும் – விளக்கேற்றும், பெற்றித்தே – தன்மையதே, பொருத – போரிட்ட

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (14-Oct-25, 9:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே