செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி - கார் நாற்பது 31
வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
இன்னிசை வெண்பா
கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி
திருநுதற் (கி)யாஞ்செய் குறி! 31
- கார் நாற்பது
பொருளுரை:
எருமையினது எழுச்சியையுடைய ஆண் மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு போரின்கண் மறமிக்க வீரரைப்போல இறுமாந்திருக்கும் காலமே அழகிய நெற்றியை யுடையாளுக்கு நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்)
சேண் - ஆகாயம்; தூரமும் ஆம்; எறி துணித்த எனினும் பொருந்தும்; பவர் - கொடி மள்ளர் - வீரர்; போர்வீரர்; வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கியிருக்குமாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு தருக்கியிருக்கும் என்க!

