கூடு தாங்க ஓர் வீடு

என் பிள்ளையை
வளர்க்கத் தொடங்கிய போதே
குஞ்சுகள் வளர்க்கத் தொடங்கியது
எரவாரத்தில் சிட்டுக்குருவி.

அவைகளால் சங்கீதம் இசைத்துத்தான் நிகழ்ந்தது
எங்களின் இனிமையான ,
ஒவ்வொரு புலரும் காலைகளும்.

அறிவை வளர்க்க வென்றும்,
பிற்பாடு வயிறு வளர்க்க வென்றும்,
புலம் பெயர்ந்தோம் நகரம் நாடி.

எங்களுக்கும் சிட்டுக் குருவிக்குமான
உறவு இடைவெளி யோ
மிகப் பெரியதாகி விட்டது.

கூடு துறந்து துருவப்
பறவைபோல நான் வளர்த்த
மைந்தன் வெளிநா டொன்றில்.

இன்றும் அதே எரவாரம்
நோக்கி சிட்டுக் குருவிகளை
தேடியபடியே நான்.

நாங்கள் நகரம் நகர்ந்தது
போன்ற பொழுதொன்றில்தான்
எரவாரங்கள் அடுக்குமாடிகளாக
உருவம் பெற்றதாம்.

எங்களைப்போல் புலம்
பெயர்ந்தனவோ ,என்னவோ..
குருவிகளும் குஞ்சுகளும்?

அன்று அந்த எரவாரத்தை
தொலைத்த நான் ,
இன்று சிட்டுக்குருவிகளின்
சிநேகமாவது தென்படுமாவென்று ....

...எங்கேனும் அவைகள்
இருக்கக் கூடும் குடும்பமாக...!
என்னைப்போல் ....அல்லவே..!

எழுதியவர் : மின்கவி (13-Apr-15, 8:43 pm)
பார்வை : 144

மேலே