மனம் கொத்திய மீன் கொத்தி
அலுவலகப் பணி முடிந்து
ஜீப்பில் இல்லம் நோக்கி
விரைந்து பறக்கையில்
நடுச் சாலையில்
பறக்க முடியாது
காயம்பட்டுக் கிடந்த
உன்னைக் கண்டெடுத்தேன் ...
உருக்கி ஊற்றிய
மயில் தோகையாய்
உருட்டி போட்ட
பறவைப் பந்தாய்
நடுங்கும் நீலமேகப்
பொதியாய்....
நடுச் சாலையில்
நீ கிடந்தாய் ...
தாயுனக்கு
பறக்கக் கற்றுக்கொடுக்கையில்
தவறி விழுந்தாயோ
நானறியேன் ...
அன்பின் பேருருக்கொண்டு
என் உள்ளங்கையின் ஸ்பரிசத்தினை
மென் முத்தங்களாய்
உன்னில் பதிக்கையில்
உன் தாயின்
இறுதி ஸ்பரிசத்தின்
மில்லிகிராம்
உணர்ந்திருப்பாயோ ?
உன் சிறகசைப்பின்
துடிப்பினிலுனது
தாயேக்கத்தின்
பிரயத்தனமுணர்ந்தேன் ...
இந்நேரம் உன் தாய்
உனக்குணவூட்டி விட
தன் வாயில் கொத்திய
மீனோடு
உனைத்தேடி
அலைந்து திரிந்துகொண்டிருக்குமோ ?
வாழ்வின்
துயரம் மிகுந்த
தருணங்களிலொன்று
அறியாப் பிராயத்தில்
தாயினைப் பிரிவது ..
வானம் முழுவதும்
உன்னைத் தேடியலையும்
உன் தாயின்
அசரீரி
என் காதில் ஓதிச் செல்கிறது
உன் பாதுகாப்பினை ..
உன் கண்ணீர்
துடைக்கத் துடிக்குமெனது
விரலால் -
ஒரு போதும் கடக்க முடியா
உனக்கும் உனது தாய்க்குமான
தேடலின் தூரத்தின் மீது
என் இதயத்தின்
இறக்கை பரப்பி
உன்னிடம் யாசிக்கிறேன் ....
நிச்சயம்
உன்னை கூண்டடைக்க மாட்டேன்
உன் சிறுகாயம் ஆறி
நீ சிறகடிக்கும் வரை
என்னிடம் எப்பயமுமின்றி
இளைப்பாறி நட்போடிரு ...
காலம் எனக்களித்த
என் பறவைக் குழந்தையே ..
சிட்டுக்குருவி இனமழித்த
எம் மனித இனப்பாவத்திற்கு
இதொரு சிறு
பிரயாச்சித்தமாயிருக்கட்டும் .