சாதிவெறி மிதி

கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே வந்து
****நஞ்சின் கொடியதாய் மாறும் -அது
மிஞ்சிப் போகையில் மிருகமாய் மாறி
****மெல்ல நம்மிதயம் கீறும்
அஞ்ச வைத்திடும் அறிவைப் போக்கி
****அன்பை அழித்துமுன் னேறும்-அதை
நெஞ்சில் வைத்திட வேண்டாம் தம்பீ
****நித்தம் பிரச்சனை தாரும்

ஒன்று கூடியே நம்தாய் நாட்டில்
****ஒழுங்காய்ப் பல்லினம் வாழும் -இதை
என்றும் போற்றியே எல்லா நாடும்
****ஏங்கித் தன்னிலை தாழும்
கொன்று போட்டிடும் மதஇன சாதி
****கொள்கைக் கேஇட மில்லை -ஏன்
கொண்டு வந்திவர் போடுகின் றாரோ
****குழப்பம் விளைக்குமித் தொல்லை ?!

சாதி போதையை சாக்காய் வைத்து
****சாதித் திடதினம் துடித்து -இங்கு
மீதி இருந்திடும் கொஞ்ச ஒற்றுமை
****மீதும் பெட்ரோல் தெளித்து
சேதி தாளிலும் அறிக்கை விட்டே
****செல்லும் இவர்களைப் பிடித்து -நாம்
வீதி நடுவிலே கசையடி தந்தே
****விரட்டிட வேண்டும் அடித்து !!

எழுதியவர் : அபி (3-May-15, 6:59 pm)
பார்வை : 202

மேலே