கண்ணாமூச்சி ஏனடா

***********
ஆதியும் அந்தமும் உனக்கு இல்லை ..
உயிர்க்காற்று வெளியேறி
வெற்றுப் பாண்டமாய் நான் மாறுவதும்
வேறொரு உடலில் கருவறை புகுந்து
புது வாழ்வு பெறுவதும்
மறுபடியும் இதே கதை
பல யுகங்களாய் தொடர்வதுமாய்
உன்னோடு நானும் ..என்னோடு நீயும்
ஆடுகின்ற கண்ணாமூச்சி ஆட்டத்தில்
ஒன்றில் நீ எனக்கு தாயாகிறாய் ..
மற்றொன்றில் எனக்கே சேயாகிறாய்..
இன்னொன்றிலோ எந்தையாகிறாய்..
நான் காதலன் ஆனால் ..
அடுத்ததில் கணவனாகிறாய்..
ஒன்றில் குருவாகிறாய் ..
இன்னொன்றில் சீடனாகிறாய் ..ஒன்றில்
உன்னை வாழ்த்திப் பாடும் கவியாகிறேன்..
பதிலுக்கு என்னை மகிழ்விக்கும் இசையாகிறாய்..
யுகங்களின் வேகமான கடந்து போதல்களில் ..
நீ என்னையும் ..
நான் உன்னையும்
விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு
ஓடிக் கொண்டேயிருக்கிறோம் ..
என்பது உண்மை அல்ல..
நீயே நான்..
நானே நீ..
என்பதை ..
இன்றுதான் உணரச் செய்தாய்..!

எழுதியவர் : கருணா (19-May-15, 8:29 pm)
பார்வை : 263

மேலே