அமிழ்துளி
அமிழ்'து'ளி.....!
***
தீச்சுடரென்னும் மாயையுள்
திரியென அகப்பட்டேன்!
தழலெனை,
எரியெனும் தழுவலால்
வருடுவதேன்?!
பூட்டு தொலைத்த சாவிபோல் – என்
ஆவி தொலைத்த அற்புதம் தேடி
அகிலத்தி லலைகின்றேன்!
கொலை செய்தெனைச்
சாக்காட்டில் தொங்குகிற
கொடியிலிட்டேன்!
நஞ்சுமிழும் வஞ்சருக்கு
என்னையே படையலிட்டேன்!
விடையிலாத வினவலொன்றின்
முடிவிலோடும் மும்முழுப்புள்ளிகற்போல்
தொக்கி நிற்கிறேன் – நான்
யாது செய்தனன்?!
உண்மை இதுவென்று உணர்தலுக்கின்றி
ஊமைச்செந்நாய்கள் – என்
மூளைக்குச் சலவை நோற்கும்!
ஞானக்குருதியின் பாதையில்,
பல்புதைத்தவை விஷம்நிரப்பி
விஷமமாய்ச் சிரிக்கும்!
மயங்கி வீழுமென் மேனியைச்
சட்டென நரிகள் தாங்கிக்கொள்ளும்!
விதிர்த்து நான் விம்முகையில்,
தொண்டைக்குழலைப் பற்றி – என்
உயிரவை பறிக்கும்!
மங்கை மயக்குவாள்!
மா நிறப் பொன்மயக்கும்!
நிலமடந்தை நிற்குமென்
அடிவருடி மயங்கவைப்பாள்!
போதை நெருக்கும் – என்
கண்களின் கருமணிகள்,
நாசியின் அடிநெருங்கும்!
தூசி அறிவை நெருங்கிப்படர,
பாசி படிந்தவனானேன்!
நெருங்குமிம் மலங்களால்,
அழிவை நெருங்குவேன்!
நெருங்கிப் பின்னொருநாள்,
அழிதலே அழியாமை தருமெனும்
மெய்ப்பொருள் காண்கையில்….
தீச்சுடர் குளிரும்!
திரியென அதனுள் புகுந்து நான்
மாள்வதே மகத்துவமென்பதை
உணரத்தலைப்பட்ட ஒருதுளிப்பொழுதில்,
வாழ்கிறேன்...!
*********************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்