சொல்லில் வடித்த சிலை
கனவெனும் மயக்கத்திலே எனது
கட்டில் விளிம்பினிலே நான்
மனமெனும் குதிரையிலே காவி்ய
மாருதியாய்ப் பறந்தேன்.
பறக்கும் தட்டினைப் போல் பளீரென
புதுவகைப் புன்சிரிப்பு - விண்ணில்
பிறந்ததும் இறந்துவிடும் எரி
தாரகை கண் சிமிட்டு.
மின்னிடும் மீனிரண்டு குளிர்
தாமரைப் பொய்கையிலே -தளிர்
நன்னடை போடுது போல் சுழலும்
கரிய விழியிரண்டு.
பனிவெயில் மழையென்று மாறிடும்
பருவத்துக் கேற்றபடி - அதரம்
தனியொரு பவளச் சிமிழ் - அது
தமிழுக்கும் அழகு செய்யும்.
குழைத்த சந்தனமோ, இல்லை
இரவி மறையும் நிலை - அதை
இழைத்து விட்டதைப் போல் எங்கும்
பரவிய பொன் வண்ணம்
அழைக்கும் பாவனையில் என்னை
அடிமை கொண்டதன்றோ -அதில்
மழைக்குப் பின் தோன்றும் வான
மடியின் வில் வண்ணம்
சொல்லில் விரித்தாலும் வானின்
சொர்ணத்தை வடித்திடலாம் - நீயோ
சொல்லில் வடித்த சிலை இங்கு
இல்லை உனக்கு விலை!.

