என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 14 ​

( மேலே உள்ளப் படம் நான் வங்கியில் பணியில் இருந்தப்போது ...1984 )

​இதனை எழுத தொடங்குவதற்கு முன் , நடந்து முடிந்த ஒரு நிகழ்வு , அதிர்ச்சியான முடிவு , என்னை பெரும் ​சோகத்தில் ஆழ்த்தியது ....கடந்த நான்கு நாட்களாக துக்கம் மிகுதியால் என்னால் எழுத முடியவில்லை . ஆம் ... மக்கள் ஜனாதிபதியாகவும் , மனிதநேயத்திற்கு ஓர் உதாரணமாகவும் , அன்பிற்கு அடையாளமாகவும் , எளிமைக்கு ஓர் சின்னமாகவும் , நேர்மைக்கும் பண்பாட்டிற்கும் பரந்த நெஞ்சிற்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்த மாண்புமிகு ஐயா , திரு அப்துல் கலாம் அவர்கள் மறைவுதான் என்னை மகவும் பாதித்துவிட்டது . எங்கள் குடும்பத்தில் ஒருவரையே இழந்திட்ட நிலை எனக்கு ... உண்மையில் , இதே நிலைதான் அனைவருக்கும் .
வாழ்ந்து மறைந்தவர் பலகோடி ....மறைந்தும் வாழ்பவர் நம் நெஞ்சில் என்றும், ஐயா திரு அப்துல் கலாம் ஒருவரே .

சென்ற பகுதியில் என் கல்லூரி வாழ்வின் ஒரு பகுதியையும் , சில நிகழ்வுகளையும் கூறியிருந்தேன் . இன்னும் பல உள்ளன ... போகப்போக அவைகளை இங்கு பதிவிடுகிறேன் .

நான் அந்த நிதி நிறுவனத்தில் பணி புரியும் நேரத்தில் , உறவினர் ஒருவர் என்னிடம் ஒரு Bank Application Form ஒன்றை கொடுத்து அதை பூர்த்தி செய்து உடனே அனுப்பும்படி கூறினார் . அதன்பிறகு நுழைவுத் தேர்வு எழுத Hall Ticket வந்தது. எழுதி முடித்து interview க்கும் அழைத்தார்கள். ( ஸ்டெல்லா மேரி கல்லூரியில்தான் தேர்வு எழுதினேன் . பெண்கள் கல்லூரியில் கால் பதித்தது ஆண்டுதான் முதல்முறை ..கடைசியும் கூட) . சிலரின் சிபாரிசும் இருந்ததால் எனக்கு வேலை கிடைத்து , 1983ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் , திங்கட்கிழமை வங்கியில் சேர்ந்தேன் . அப்போது அதன் தலைமை அலுவலகம் ( Head Office ) சென்னை அண்ணா சாலையில் TVS க்கு எதிரில் , ஆனந்த விகடன் அலுவலகத்தின் பக்கத்தில் இருந்தது. என்னை எனது நெருங்கிய உறவினர் ஒருவர் தனது வாகனத்தில் அழைத்து போனதும் நினைவில் உள்ளது . அதுதான் அன்றைய Bank of Madura ....இன்றைய ICICI Bank . நான் எனது உடல்நிலை காரணமாகவும் , விருப்பமின்மை காரணமாகவும் உயர்பதவிக்கு என்றுமே முயற்சிக்கவில்லை. அதற்கான தேர்வும் எழுதியதும் இல்லை. எனக்கு பலவிதங்களில் உந்துதலும் , ஆதரவும் வங்கியில் இருந்தாலும் நான் அதில் நாட்டம் கொள்ளவில்லை . ஒரே இடத்தில் தான் , 22 வருடங்கள் பணி புரிந்தேன் .

எத்தனை அனுபவங்கள் ....பலரின் அறிமுகங்கள் ...சில கோபதாபங்கள் ..சில வாக்குவாதங்கள் ...ஆனாலும் , அங்கும் எனக்கு கல்லூரி வாழ்க்கைப் போன்றே அமைந்தது ...பல இடர்களையும் கடந்தாலும் ....தனிப்பட்ட முறையில் அல்ல ....பொதுவாக பணி சம்பந்தமாக . நான் அங்கு வேலை செய்த போது .. பல உயரதிகாரிகளின் நட்பையும் , ஆதரவையும் , அன்பையும் பெற்றேன் . ஐந்து Chairman களின் அறிமுகமும் , நெருங்கிய நட்பையும் பெற்றேன் . இவ்வாறு சொல்வதற்கு காரணம் அந்த ஐந்து பேரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்புடன் பழகியவர்கள் ..நெருக்கமாகவும் இருந்தேன் . ஆனாலும் எனக்காக எந்தவித அனுகூலங்களை இறுதிவரை நான் பெற்றதில்லை. கேட்டதும் இல்லை. அதே போன்று என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களும் , ஏனைய அனைத்து வங்கி நண்பர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து என்னை நன்கு சக ஊழியராக மட்டும் அல்லாமல் , அன்புமிகு உள்ளங்களாய் , ஆதரவுமிகு நண்பர்களாய் கனிவோடு நடந்து கொண்டதையும் , உதவிகள் செய்ததையும் மறக்கவும் முடியாது , மறுக்கவும் முடியாது . பல ஊழியர் நண்பர்களுக்கு என்னால் இயன்றவரை உதவி உள்ளேன் என்பதை பெருமையாகவும் அடக்கத்துடனும் கூற விரும்புகிறேன் . இதையும் நண்பர்கள் பலர் அறிவர்.

1984ம் வருடம் , அக்டோபர் மாதம் புதன்கிழமை காலையில் வழக்கபோல வங்கியில் எல்லோரும் வேலை பார்த்து கொண்டிருந்தோம் . சுமார் 11 மணி அளவில் ....ஒரு சக ஊழியர் ...முத்துகிருஷ்ணன் என்பவர் வேகமாக ஓடி வந்தார் .. அவர்தான் அப்போது அடிக்கடி TELEX / Teleprinter வேலையையும் கவனிப்பார். அப்போது எல்லாம் அதுதான் செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும் சாதனம் ...இப்போது உள்ளது போல ஊடகங்களோ , அதி நவீன கணினியோ , INTERNET வசதியோ இல்லை. சத்தமாக அப்போது வந்த செய்தியினை படித்தார் ....பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அவரின் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலே அது . அனைவருக்கும் ஷாக் அடித்ததை போலவே உணர்ந்தோம் ...கட்சி, மதங்கள் , வயது பாகுபாடின்றி ....அதுதான் நம் இந்தியர்களின் உண்மை நேயமிகு உள்ளங்கள் ....

சிறிது நேரத்திலேயே மற்ற கிளைகளில் இருந்து தொலைபேசிகள் வந்த வண்ணம் இருந்தன ....அப்போது செல் போன் கிடையாது ....செய்தியினை உறுதி செய்திடவும் .....மற்றும் ஆங்காங்கே நடைபெறும் வன்முறை , கடையடைப்பு , பேருந்து மீது கல்வீச்சு போன்ற நிகழ்வுகள் ....மேலும் நாங்கள் உறைந்துப் போனோம் ....ஏனெனில் வருத்தம் மட்டுமன்றி , அவரவர் வீட்டிற்கு எப்படி செல்வது என்பது போன்று உரையாடல்கள் எங்களுக்குள்ளே ....ஆனால் எங்களை நிர்வாகத்தினர் உடனடியாக செல்லும்படியே ஆணை பிறப்பித்தனர் .....அதற்குள் கலவரங்கள் பெருகிவிட்டது என்பதை வீடு திரும்பும்போதே உணர்ந்தோம் .... வாகனங்களும் நிறுத்தப்பட்டன ....அண்ணா சாலையே ஸ்தம்பித்தது ....கூட்டம் அங்கங்கே நின்று இருந்தது ....பதட்டமே எங்கும் நிலவியது ....

மற்றவை அடுத்த பகுதியில் ....

மீண்டும் சந்திக்கிறேன் .....

பழனிகுமார்
01.08.2015

எழுதியவர் : பழனி குமார் (3-Aug-15, 9:09 pm)
பார்வை : 279

மேலே