உறவுகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க நீங்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்
பொண்டாட்டி கூட வீண் சண்ட, சச்சரவு வராம இருக்க, நீங்க இப்படி தான் இருக்கணும்!
சிலரது வீடுகளில் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவாக தான் இருக்கும். என்ன? ஏது என விசாரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லாத பிரச்சனை அல்லது எப்போதோ நடந்த பிரச்சனையை பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்கள். இது, நல்ல உறவுகளுக்குள் இருக்கும் பிரியத்தை குறைத்துவிடும். உண்மையில், நமது எண்ணங்கள் தான் அனைத்துக்கும் காரணம். நேர்மறை எண்ணம் மிகவும் அவசியம். வெற்றி, தோல்வியை பற்றிய புரிதல் முக்கியம். உங்கள் மனதில் இருந்து வெளிப்படும் எண்ணங்கள் தான் உங்கள் வெற்றியையும், தோல்வியையும் தூண்டுகிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எந்த உறவும், உறவினரும் உங்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. இது உங்கள் மனதின் எண்ணங்களை சார்ந்து தான் இருக்கிறது. இனி உறவுகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க நீங்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்....
உறவுகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க நீங்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்!!!
நிகழ்காலம் பற்றி யோசியுங்கள்
பெரும்பாலானோர் செய்யும் தவறு இதுதான், நேற்று நடந்ததை எண்ணி கவலையில் இருப்பார்கள் அல்லது நாளை என்ன செய்ய போகிறோம் என்று பதட்டமாக இருப்பார்கள். எனவே, "இன்று" என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இது, நாளை நன்றாக விடியவும், கடந்த காலத்தை சுகமான நினைவாகவும் உண்டாக்கும்.
குறைபாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டாம்
குறைபாடு இல்லாத மனிதனே இவ்வுலகில் இல்லை. அதற்காக நீங்கள் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது நல்ல உறவுகளையும் கெடுத்துவிடும். உடை உடுத்துவதில் இருந்து, சாப்பிடுவது, பழகுவது என அனைத்திலும் அனைவரும் ஒரே மாதிரி இருந்தால், நாம் மனிதர்கள் அல்ல இயந்திரங்கள்.
தோல்வி நிலையில்லாதது
வெற்றி, தோல்வி என்பது மேகத்தை போன்றது. அது நிலையானவை இல்லை. உங்களது குணம், வானத்தை போன்றது. எனவே, மேகத்திற்காக வானம் நகர்ந்து செல்லுதல் இயற்கையை மீறிய தவறு. எனவே, வெற்றி, தோல்வியை கருத்தில் கொண்டு துணையை தெரிந்தெடுக்க வேண்டாம்.
சுட்டிக்காட்ட வேண்டாம்
எந்த தவறுகளையும் சுட்டிக்காட்டி பழக வேண்டாம். இது அன்பையும், காதலையும் சீர்கெடுத்து விடும். எனவே, புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். கற்றுக்கொடுங்கள். தவறை திருத்திக்கொள்ள உதவ வேண்டுமே தவிர, சுட்டிக்காட்டி அவர்களை காயப்படுத்திவிட கூடாது.
உணர்வுகளால் முடிவெடுக்க வேண்டாம்
சிலர் என் துணையை பிரிந்து இருக்க மாட்டேன் என்று வாழ்க்கையில் முன்னேற கிடைத்த நல்ல வாய்ப்புகளை விட்டுவிடுவார்கள். இது, தவறு. உணர்வு ரீதியாக முடிவெடுப்பது நல்லதல்ல, அறிவு ரீதியாக முடிவெடுங்கள்.
அனைத்து நேரங்களிலும் நீங்கள் சிறந்து விளங்க முடியாது
கிரிக்கெட்டில் சச்சினாக இருந்தாலும் சரி, சதுரங்க ஆட்டத்தில் விஸ்வநாத் ஆனந்தாக இருந்தாலும் சரி எப்போதுமே வெற்றியாளராக திகழ முடியாது. எனவே, தோல்வியை கண்டு துவண்டுவிட வேண்டாம். பலர் தாங்கள் தோல்வியடைவதற்கு உறவு தான் காரணம் என தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர்.
குற்றம் சுமத்த வேண்டாம்
எந்த ஒரு தவறும் ஒரு நபரின் நடவடிக்கையால் நிகழ்வது கிடையாது. குருட்டாம்போக்கில் நீங்கள் நம்புவதும் தவறு தான். எனவே, ஏதேனும் தவறு நடந்தால், துணையை குற்றம் சுமத்த வேண்டாம்.
தியாகம் செய்ய வேண்டாம்
பலரும் எங்களது உறவையும், வாழ்க்கையும் காக்க நிறைய தியாகம் செய்தோம் என்று கூறுவார்கள். ஆனால், விட்டுக் கொடுத்து தான் போக வேண்டுமே தவிர, தியாகம் செய்ய கூடாது. "நாம்" என்ற வார்த்தைக்குள் இருக்கும் "நீ" மற்றும் "நான்" தியாகம் செய்து உருமாறியது எனில், பிறகு "நாம்" இல்லாமல் போய்விடும்.
அன்பை வெளிப்படுத்துங்கள்
வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், மனம் உடைந்து போகும் நேரம், சோர்வுற்று இருக்கும் போது என அனைத்து தருணங்களிலும் அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பைவிட சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை.