ரெஸ்யூம்

புதுசா கதை எழுதுறவங்க வீடு மாதிரி சுருட்டிக் கசக்கி எறியப்பட்ட காகிதக் குப்பைக்கு நடுவில் கிடந்தார் கிட்டு மாமா.
அரை மணிக்கொரு முறை டீ போட்டுக் கொடுத்து அலுத்துப் போனது அம்புஜம் மாமிக்கு.

எதாவது எழுதி அனுப்புங்க இதுல யோசிக்க என்ன வேண்டியிருக்குன்னு மாமி புலம்புவதை லட்சியம் செய்யாமல் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

விஷயம் வேறொன்னுமில்லை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூம் அனுப்பத்தான் இந்த அமர்க்களம்.
அந்த வேலைக்கு வயது வரம்பு இல்லை என்பதால் மாமாவுக்கு விண்ணப்பிக்கும் ஆசை வந்திருந்தது.
பிள்ளையார் சுழி போட்டு விட்டு எழுத ஆரம்பித்தார்.
ஒன்னாப்புல திண்ணைப் பள்ளிக்கூடத்துல சேர்ந்தது
மூணாப்புல ஃபுல் பேண்ட் போட்டுகிட்டு போனது
நாலாப்பு படிக்கும் போது பிட் அடித்தது
அஞ்சாப்பில் இரண்டு முறை கோட் அடிச்சது
ஹெட்மாஸ்டரை சரிகட்டி 'ட்புள் பிரமோஷன்ல' ஹைஸ்கூலுக்கு போனது என ஆரம்பித்து,
கருப்பு மையில் மீசை வரைஞ்சிகிட்டு பக்கத்து சீட்டு பையனிடம்'ஆர்ம்ஸ்' காட்டியது
தாத்தாவோட துண்டு பீடியைத் திருடிவந்து 'தம்' அடிக்கும்போது
தமிழ் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியது
எடுபிடி வேலை செஞ்சே சயன்ஸ் வாத்தியாரைக் காக்காய் பிடித்தது என
ஹைஸ்கூல் வரை மட்டுமே படித்திருந்த தன்னுடைய பள்ளி வாழ்க்கையின் வீரப் பிரதாபங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டார்.
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக ஓட ஆரம்பித்து கடைசியாக வந்தது
கிரிக்கெட் டீமில் பந்துமட்டுமே பொறுக்கிக் கொடுத்தது
பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் அனுமாராக 'வேஷம் போடாமலே' தத்ரூபமாக நடித்தது என
எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிடி னு கேட்டிருந்த காலத்தில் நிரப்பினார்.
இப்படியாக நிறைய யோசித்து பள்ளிக்கூட நினைவுகளை மலரும் நினைவுகளாக்கி,எந்த ஒரு
சம்பவமும் விட்டுப் போகாமல் பல நாள் கண்விழித்து எழுதி ஒரு சுபயோக சுப தினத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தார்.
நல்லதொரு பதிலுக்காக காத்திருந்தார்.
மாமாவுக்கு வேலை கிடைத்து விட்டால் அக்கம் பக்கம் வீட்டாருக்கு விநியோகம் பண்ண மாமியும் அல்வா சகிதமாகக் காத்திருந்தாள்.
வந்து விட்டது.
அவர் விண்ணப்பித்திருந்த அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் வந்து விட்டது.
மாமாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
பிரித்துப் படிக்கும் முன் சுவாமி படத்தின் முன் வைத்து கும்பிட்டு விட்டு பிரித்தார்.

''ஐயா நீங்கள் அனுப்பியிருந்த ரெஸ்யூம் கிடைத்தது.இரவு பகலாக ஷிப்ட் முறையில் அதைப் படித்து முடிக்க காலதாமதம் ஆகி விட்டது.மன்னிக்கவும்.ஆனால் படித்து முடித்த பிறகு அதை எடைக்குப் போட்டதில் கிடைத்த பணத்தில் நாங்கள் திருப்தியாக ஸ்வீட் காபி சாப்பிட்டோம். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேம்.''

பின்குறிப்பு:மாமாவோட புகைப்படத்தை அந்தக் கம்பெனி இப்படி விளம்பரத்திற்கு பயன் படுத்திக்கிட்டாங்களாம்:

என்னங்க மாமாவுக்கு வேலை கிடைக்கலைனு கவலைப்பட்டிருப்பார்னு நினைச்சீங்களா?அதான் இல்லை இப்பத்தான் புதுசா வேலைக்குப் போகிறவங்களுக்கு ரெஸ்யூம் எழுதிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரே...உங்களுக்கும் எழுதனுமா?

எழுதியவர் : செல்வமணி ___________________________(படித் (26-Aug-15, 1:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே