உலகையே உலுக்கிய சிறுவன் அய்லானின் மரணமும் அகதிகளின் ஜனனமும்
துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயது குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் அந்த நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அவர்கள் ஆபத்தான கடல் பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சிரியாவில் இருந்து குடும்பத்துடன் கடல் மார்க்கமாக தப்பி வந்த அப்துல்லா குர்து என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் படகு விபத்தில் உயிரிழந்தனர்.இதில் அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய புகைப்படம் உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கியது.
இந்த உள்நாட்டுப்போர் காரணமாக , அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. அமைதியான வாழ்க்கையைத் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹங்கேரிக்கு அகதிகளாகச் சென்று, அங்கிருந்து ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த நாடுகள் அவர்களை அகதிகளாக ஏற்க மறுத்தன.
இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் அரசுக்கு எதிராக மக்கள் போர்கொடி தூக்கவே, அகதிகளுக்கு அடைக்கலம் தர ஜேர்மனி, ஆஸ்திரியா, பின்லாந்து மற்றும் அர்ஜென்டினா நாடுகள் முன்வந்துள்ளன.மேலும் ஹங்கேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேருந்தின் மூலம் ஆஸ்திரிய எல்லையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் அவர்கள் விரும்பினால் தங்கள் நாட்டிலேயே குடியேறலாம் அல்லது ஜேர்மனிக்கு செல்லலாம் என ஆஸ்திரிய அரசு அறிவித்துள்ளது, அது மட்டுமின்றி, எகிப்து அருகே அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளார் நகுய்ப் சாகுரிஸ் என்ற தொழிலதிபர். இந்த தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரைச் சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த சிறுவன் அய்லான் புகைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துவிட்டது . கடற்கரை ஓரத்தில் அய்லான் இறந்து கிடப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர். துருக்கியின் 'டோகன்' செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலுபர் டெமிர் என்பவர்தான் அய்லான் புகைப்படத்தை எடுத்துள்ளார். இது குறித்து டெமிர் கூறுகையில், '' கடந்த புதனன்று துருக்கியின் 'போட்ரம்' கடற்கரை அருகே இரண்டு படகுகள் கவிழ்ந்ததாக செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றேன். கடற்கரையில் தலைகுப்புற கிடந்த குழந்தையின் நிலை என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டது. அவனின் கடைசி அழுகுரலை உலகம் கேட்க வேண்டும். நான் அந்த இடத்தில் சிந்திய கண்ணீர்தான் இன்று ஆறாக ஓடுகிறது'' என்றார் அவர்.
சிரிய அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க பல நாடுகளும் மறுத்த நிலையில், குழந்தை அய்லானின் மரணம் அகதிகள் விஷயத்தில் புதிய நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ள்து. அந்தக் குழந்தைக்கு உலகில் வாழ இடமில்லை ஆனால் அக் குழந்தையினால் பலருக்கு வாழ்கை கிடைத்து இருப்பதை நினைத்தால் அச் சிறுவன் இறந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான் என்றே தோன்றுகிறது
- அப்சர் சையத்