விழி விதைத்த விதை

காதல் என்னும் விதையை
விதைக்கிறாள் ;
இரு விழிகளினால்
என் இதயத்திற்குள்.

விடலைப் பருவத்தில்
விதைத்த விதை ,
விருட்சம் அடைகிறது.

விதை செடியாகிறது ;அவ்வப்போது
அவள் தூவிய புன்னகையால்

அதற்கு உரமிடுகிறான் நண்பன் ;அவளும்
உன்னைப் பார்க்கிறாளென்று உசுப்பேற்றி

மழை காணாப் பயிராய் வாடி வதைகிறது;
அவளின் ஒரு நாள் பள்ளி விடுப்பில்

செடியாய் வளர்ந்தவள் ;
மரமாகிறாள்.

வண்ணத்தப்பூச்சியாய் வட்டமிடுகிறேன் அவளை;
முகத்தை விட அதிகம் தென்படுகிறது
முதுகு.

நினைவை ஆக்கிரமித்தவள் - கனவில்
குடிபுகுந்து குடித்தனம் நடத்துகிறாள்.

குதூகலத்தின் உச்சத்தில் நான்;
நண்பர்கள் அவள் பெயர் சொல்லி
என்னை அழைக்கையில்

கிறுக்கு பிடிக்கிறது
கிறுக்கி கிறுக்கி
அவள் பெயருக்குப் பின்
என் பெயரை.

ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறேன்;
காதலைத் தெரிவிக்கும் வழிமுறையை ஆலோசிக்க.

கடிதமா,தொலைபேசியா ,நேரடியாகவா
அல்லது தோழியின் மூலமாகவா
என விவாதிக்கையில் எட்டிய
முடிவு நேரடியாக என்பது.

ஆள் அரவமில்லாத ஓர் இடம் தேர்ந்து
காதலை தெரிவிக்க முற்படுகையில்

வெட்கத்தில் தலை குனிவாளா?
வெறுப்பில் செருப்பு எடுப்பாளா?
சொல்லலாமா ? வேண்டாமா?
என அடுக்கடுக்காய் கேள்விகள்.

மனதை தேற்றி இடைமறித்தேன்
அவளின் மிதிவண்டியை.

வார்த்தைகள் தொண்டைக்
குழியினுள் ஓடி ஒளிந்தன;
பயத்தில்.

கடவுளை வேண்டிக்கொண்டும் -
தலையை குனிந்து கொண்டும்-
தெரிவித்துவிட்டேன் என் காதலை.

மின்னலாய் தாக்கினாள் ;
கொடூரப்பார்வையால்;
என் கண்களை.

அது இடியாய் இறங்கியது
இதயத்திற்குள்.

கருவிகள் இல்லாமலே
கருகலைப்பு நிகழ்த்திவிட்டாள்.

எழுதியவர் : (11-Sep-15, 5:21 pm)
சேர்த்தது : Senthil Murugan2
பார்வை : 72

மேலே