கண்ணுக்கு தெரிந்த கடவுள்கள்

ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கும்
ஊர்காக்கும் கடவுளே!
ஊரை விட்டு உன்னை ஒதுக்கிவைத்த
உயர்சாதி யார்?

வேல்க்கம்புகளோடு வேட்டைக்கு வந்த வீரனே!
உன்னைக் காட்டுக்குள் கட்டிவைத்து
கடவுளாக்கியது யார்?

அம்மணியே ! அரிவாளோடு அறுவடைக்குச் சென்ற
உன்னை அம்மனாக்கியது யார்?
மயிலோடு மல்லுக்கட்டும் மயில் வாகனனே!
உன்னை மலைக்குள் மறைத்து வைத்தது யார்?
ஆரவாரமில்லாமல் அமர்ந்திருக்கும் அய்யனாரே!
உன்னை ஆவாரங்காட்டில் அமர்த்தி வைத்தது யார்?

வருஷா வருஷம் ; கரைந்து கரைந்து
கரையேறும் கடவுளே!
உன் தும்மலை மறைக்க
தும்பிக்கை வைத்தது யார்?

மாதந்தவறாமல் மதுகேட்கும் காவல் தெய்வமே!
குதிரையிலே குடிகொண்டிருக்கும் உனக்கு
குடிபோதை எதற்கு?

பட்டை போடச்சொல்லும் ஒரு கடவுள்;
முட்டி போடச்சொல்லும் மறு கடவுள்;
சிலுவை போடச்சொல்லும் இன்னொரு கடவுள்;
தீயில் நடக்கச் சொல்லும் ஒரு கடவுள்
நாக்கில் நங்கூரம் பாய்ச்சச்சொல்லும் மறு கடவுள்
இவைகளுடன் ;
இன்றைய வருவாயில் பாதி
உன் உண்டியலுக்குத்தான் என
வேண்டும் திருடனைப் பார்க்கையில்
இலஞ்சத்தை உருவாக்கியதும் சாமி தானா?
என்றொரு சந்தேகமும் எழுகிறது.

ஆடு கோழிகளின் முழுத்தலையையும் கேட்கும் சாமி ;
மனிதனின் முடியை மட்டும் கேட்கிறது

சாமியறையினுள் சாமியார்களால் நடத்தப்படும்
அபிஷேக முகூர்த்தத்தில் அடங்கி விட்டது
சாந்தி முகூர்த்தமும்.

சாமிகளுக்குள்ளும் சாதிகள்
சாதியை உருவாக்கியது சாமியா?
சாமியை உருவாக்கியது சாதியா?
இல்லை இரண்டையுமே உருவாக்கியது
மனிதன் தானா?

மதத்திற்கு ஒரு கடவுள்
மதத்திற்குள் பல கடவுள்கள்.
கோயிலுக்குள் ஒரு கடவுள்
கோயிலுக்குள் பலர் கடவுள்.
கடவுளுக்குள் சண்டைகளில்லை
கடவுளுக்காக பல சண்டைகள்.

கண்ணணும் கடவுளானார்;
அரிய அவதாரங்க ளெடுத்ததினாள்.
கண்ணகியும் கடவுளானாள்;மதுரையை
கரியாக்கி கற்பை நிரூபித்ததினாள்.
குஷ்புவும் கடவுளாகிறாள்;
குத்துப்பாட்டுக்கு ஆடியதால்

ஆடிமாதம் கூழ்கேட்கும்
அம்மன்களின் வரிசையில் ,இப்போது
பீசா, பர்கர் கேட்க தயாராகின்றனர்
நமீதாவும் நயந்தாராவும்.

எழுதியவர் : (11-Sep-15, 5:20 pm)
சேர்த்தது : Senthil Murugan2
பார்வை : 68

மேலே